இந்தியாவில், பெட்ரோல் - டீசல் விலை உச்சம் தொட்டுள்ளது. சில இடங்களில் பெட்ரோல் 100 ரூபாயைத் தொட்டுள்ளது. பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. மேலும், பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவரவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
கேரளாவில், வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. இந்தநிலையில், பாஜக மூத்த தலைவரான கும்மனம் ராஜசேகரன், கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் 60 ரூபாய்க்கு விற்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாங்கள் எரிபொருட்களை ஜிஎஸ்டி கட்டமைப்பில் சேர்ப்போம். அப்போது, எரிபொருள் விகிதங்கள் ரூ.60 ஆக இருக்கும். கணக்கீடுகளிலிருந்து நாங்கள் புரிந்துகொண்டது இதுதான் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜி.எஸ்.டி வரம்பிற்குள் பெட்ரோல் டீசலை சேர்க்க, இடது ஜனநாயக முன்னணி அரசு ஏன் அனுமதிக்கவில்லை என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், விலை ஏற்ற இறக்கங்கள், உலக அளவில் பல்வேறு காரணிகளால் ஏற்படுகின்றன. ஆனால், பெட்ரோல்- டீசல் ஜிஎஸ்டியில் சேர்க்கப்படும் என்று சொல்வதற்கு எது தடையாக இருக்கிறது? என்றும் வினவியுள்ளார்.
மாநிலத்திற்கு பெட்ரோல் - டீசல் மீதான வரிகள் பெரும் வருவாய் ஆதாரமாக இருக்கிறது என்றும், எனவே அதை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவரக் கூடாது என்றும் கூறி வரும் கேரள அரசு, அப்படி பெட்ரோல் மற்றும் டீசல் ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரப்பட்டால், அதற்காக மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் எனத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.