குஜராத் – சூரத்தில், ஆயுதப்படையில் பணியாற்றிய தியாக வீரர்களின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மத அரசியலை பாகிஸ்தான் இனியும் தொடர்ந்தால் மேலும் சிதைந்து கூறு கூறாகும் என்று கூறியிருக்கிறார். அவருடைய உரையின் சாராம்சம் இதோ -
“பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் மக்களிடம் யாரும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதி வழியாக இந்தியாவுக்குள் செல்ல வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அப்படி வந்தால் அவர்கள் திரும்பிச் செல்ல அனுமதிக்க மாட்டோம். சுதந்திரம் அடைந்தபிறகு சிறுபான்மையினர் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாக இருந்தனர். தற்போதும் அதே பாதுகாப்புடன் இருந்துவருகின்றனர்.
ஜாதி, மத பேதம் பார்த்து மக்களை நாம் பிரிக்கவில்லை. பாகிஸ்தான் அப்படி கிடையாது. அங்கே சிறுபான்மையினருக்கு எதிராக உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. பாகிஸ்தானில் உள்ள சிந்தி சமூகம், சீக்கிய சமூகம், பலூச்சி சமூகம் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களுடன் பாகிஸ்தான் அரசாங்கம் இன்று எப்படி நடந்துகொள்கிறது என்பது உலகத்திலிருந்து மறைக்கப்படவில்லை. ஐ.நா.வில் மனித உரிமை மீறல் பிரச்சனையை எழுப்பும் பாகிஸ்தான், அதைத் தன் நாட்டிலேயே ஆராய வேண்டும்.
காஷ்மீர் விவகாரத்துக்குப் பின், இந்திய தேசத்தில் தாக்குதலை நடத்திட பாகிஸ்தான் முயற்சிக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தினரும் அடிக்கடி இந்திய எல்லையில் ஊடுருவியபடி இருக்கின்றனர். சட்ட விரோதமாக பத்து தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. பயங்கரவாதத்தையும் தீவிரவாதிகளையும் ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்தவேண்டும். இல்லையென்றால், பாகிஸ்தான் அதுவாகவே சிதைந்து கூறு கூறாகிவிடும்.” என்று எச்சரித்திருக்கிறார்.