உத்தரப்பிரதேசத்தில் ஆஸ்கர் விருது பெற்ற சிறுமி பிங்கியின் வீடு இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசம், மிர்சாபூர் மாவட்டத்தில், ராம்பூர் தாபி கிராமத்தில் வசித்து வந்தவர் சிறுமி பிங்கி குமாரி சோன்கர். இவருக்கு உதட்டில் பிளவு(Cleft lip) இருந்துள்ளது. அதற்கான சிகிச்சையை சில சமூக ஆர்வலர்களின் உதவியுடன் சிறுமிக்கு சரிசெய்து கொண்டார். இதனை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஸ்மைல் பிங்கி’ என்ற குறும்படம் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆவணப்(குறும்) படத்திற்கான ஆஸ்கர் விருதினை பெற்றது. இதனைத் தொடர்ந்து உலகத்தின் பார்வை பிங்கியின் கிராமத்தின் பக்கம் திரும்பியது.
அந்த சமயத்தில் மிர்சாபூர் மாவட்ட நிர்வாக சார்பில் வீடு கட்டிக்கொள்ள இடம் கொடுக்கப்பட்டு பிங்கியின் குடும்பத்தினர் வீடுகட்டி வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என்று கூறி பிங்கியின் வீட்டோடு சேர்த்து அந்த கிராமத்தில் உள்ள 30 வீடுகளையும் காலி செய்யுமாறு அறிக்கை வெளியிட்டனர்.
இது குறித்து பிங்கியின் தந்தை ராஜேந்திர சோன்கர் கூறுகையில், “நாங்கள் வீடு கட்டும் பொழுது இந்த நிலம் வனத்துறையினருக்கு சொந்தமானது எனக் கூறவில்லை. அந்த கிராமத்தில் 70 வது வருடங்களாக எந்த தடையும் இன்றி வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்” என்றார். அவரது வழக்கறிஞர் பேசுகையில், “வனத்துறையினர் தான் பிங்கியின் வீட்டிற்கு அடிக்கல்லை நாட்டினர். ஆனால் இன்று அவர்களே இதனை ஆக்கிரமிப்பு என சொல்கின்றனர்” என்றார். “இந்த விவகாரத்தில் யாருக்கும் பிரச்சனை ஏற்படாமல் நியாயமான முறையில் தீர்க்கப்படும்” என மிர்சாபூர் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரியங்கா நிரஞ்சன் தெரிவித்திருக்கிறார்.