கடந்த அக்.02 அன்று மும்பையில், கோவா செல்லக்கூடிய சொகுசுக் கப்பல் ஒன்றில் பார்ட்டி நடைபெற்றது. அங்கு தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் பார்ட்டி நடைபெற்றதாகத் தகவல் கசிய, பார்ட்டியில் பங்கேற்றவர்களைக் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில், அக்.03 அன்று காலை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன்கானை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதுவரை இந்த வழக்கில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்.7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலிலிருந்த ஆர்யன்கான் உள்ளிட்டோர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். என்.சி.பி காவலை அக்.11 வரை நீட்டிக்க வேண்டும் எனப் போதைப் பொருள் தடுப்பு துறையினர் நீதிபதியிடம் கோரிக்கை வைத்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் ( ஆர்யன்கான் உள்ளிட்ட) 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரிய ஆர்யன்கானின் மனு இன்று மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க என்.சி.பி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் சம்பந்தம் உள்ளது எனவே ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை பாதிக்க வாய்ப்புள்ளது என்ற கருத்தினை என்.சி.பி நீதிமன்றத்தில் வைத்தது. அதனைத் தொடர்ந்து அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.