மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி குஜராத்தின் ஜூனாகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "நான் கடந்த 5 வருடத்தில் செய்ததைப் பற்றி உங்களுக்கு எடுத்து கூறவே இங்கு வந்துள்ளேன். அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு என்ன தேவை என ஆர்டர் எடுக்க நான் இங்கு வந்திருக்கிறேன். உங்கள் மகனை போன்ற, இந்த சவுக்கிதார் செய்த வேலை பற்றி நீங்கள் பெருமை கொள்கிறீர்களா? இந்த ஆட்சி காலத்தில் ஒரு ஊழல் கூட நடைபெறவில்லை என நீங்கள் பெருமை கொள்கிறீர்களா?
கடந்த 3-4 நாட்களாக காங்கிரஸ் தலைவர்களின் கோடிக்கணக்கான பணம் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். காங்கிரஸ் கட்சி கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை ஏ.டி.எம் போல மாற்றியுள்ளது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் இதே நிலை தான் உள்ளது" என கூறினார்.