மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில், நான்காவது கட்ட தேர்தல் இன்று (10.04.2021) நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் மாவட்டம் மாதபங்காவில், வன்முறை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் முதல்முறை வாக்காளர் உட்பட நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மத்திய பாதுகாப்பு படைவீரர்கள்தான், நால்வரையும் சுட்டுக்கொன்றதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து பேசியுள்ள மம்தா பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி சதி நடப்பதாகவும், அதற்கு துப்பாக்கி சூடு சம்பவம் உதாரணம் எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், "சி.ஆர்.பி.எஃப். இன்று சிதல்குச்சியில் (கூச் பெஹார்) 4 பேரை சுட்டுக் கொன்றுள்ளது. காலையில் மற்றொரு மரணம் ஏற்பட்டது. சி.ஆர்.பி.எஃப். எனது எதிரி அல்ல. ஆனால் மத்திய உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் கீழ் ஒரு சதி நடக்கிறது. இன்றைய சம்பவம் அதற்கொரு உதாரணம்” என கூறியுள்ளார்.
மேலும் அவர், “சி.ஆர்.பி.எஃப் வரிசையில் நின்ற வாக்காளர்களைக் கொன்றுள்ளது. அவர்களுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது. தாங்கள் தோற்றுவிட்டோம் என்பது பாஜகவிற்கு தெரியும். எனவே அவர்கள் வாக்காளர்களையும் தொழிலாளர்களையும் கொல்கிறார்கள்" எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நாளை துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்திற்கு நேரில் செல்லவுள்ள மம்தா, கண்டன பேரணி நடத்தவுள்ளார்.
இந்தநிலையில் துப்பாக்கி சூட்டை தங்கள் நடத்தவில்ல என சி.ஆர்.பி.எஃப் மறுத்துள்ளது. இதனால் நான்கு பேரை சுட்டுக்கொன்றது யார் எனக் கேள்வியெழுந்துள்ளது.