மகாராஷ்டிராவில் 154 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது சிவசேனா.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக- 105 இடங்களையும், சிவசேனா- 56 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி- 54 இடங்களையும், காங்கிரஸ் கட்சி- 44 இடங்களையும், இதர கட்சிகள்- 29 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததால், அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது. மேலும் பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க பெரும்பான்மையான இடங்களை காப்பற்றிய போதிலும், சிவசேனா முதல்வர் பதவியை கேட்பதால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்தது சிவசேனா கட்சி. அதன்படி சிவசேனா கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் இன்று (11/11/2019) தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் தொடர்ச்சியாக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை சந்தித்து, கூட்டணி தொடர்பாக சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட உத்தவ் தாக்கரே, ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது சிவசேனாவுக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று சோனியா காந்தி உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவு சிவசேனாவுக்கு உள்ளதாகவும், அதற்கான கடிதத்தையும் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி விரைவில் ஆட்சி அமைக்க உள்ளது. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியை வழங்கவும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியை வழங்கவும் சிவசேனா திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் கூறுகின்றன.