கேரளாவில் மதுவுக்கு அடிமையானவருக்கு மது தர முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1024 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 96 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 186 பேரும், கேரளாவில் 182 க்கும் மேற்பட்டோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மதுபானத்துக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் தர கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். கேரள அரசின் செய்தி குறிப்பில், "மருத்துவர் பரிந்துரைப்படி குடிமகன்களுக்கு மதுபானம் தர கலால் துறையினருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மதுவுக்கு அடிமையானவர்களை மதுபோதையிலிருந்து மீட்கும் மையத்தில் இலவச சிகிச்சை தரவும் ஆணையிடப்பட்டுள்ளது. மதுவால் நோய்ப் பரவல் ஏற்படாமல் தடுக்க ஆன்லைனில் மதுபானம் விற்கவும் கேரள அரசு பரிசீலித்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.