கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 25 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதில், 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட காங்கிரஸ், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியிலும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடத்திய மக்களின் குரல் என்ற யாத்திரையில் கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே. சிவக்குமார் கலந்து கொண்டார். அப்போது மாண்டியா மாவட்டம் பெவினஹள்ளி அருகே பிரச்சாரம் மேற்கொண்டபோது பிரச்சார வாகனத்தின் மேல் நின்றவாறு, அங்கு இருந்தவர்கள் மீது 500 ரூபாய் நோட்டுகளை அவர் வீசினார். அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் முட்டி மோதி அந்தப் பணத்தை எடுத்தனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.