உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, "காங்கிரஸ் கட்சியினர் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்குவார்கள். ஆனால், மோடி தீவிரவாதிகளை ஒடுக்க வெடிகுண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையும் பரிசாக வழங்குவார். இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனையாக உள்ளது" என பேசினார்.
இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இதனையடுத்து இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அவர் தேர்தல் ஆணையத்திற்கு விளக்க கடிதம் ஒன்றையும் அனுப்பினார். ஆனால் அவரது விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும் எதிர்காலத்தில் யோகி ஆதித்யநாத் இதுபோன்று பேசக் கூடாது எனவும், வார்த்தைகளில் மிகவும் கவனம் தேவை என்றும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.