கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்களும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் பேரணி நடத்தினார்கள். அதில் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் தீவைக்கப்பட்டன.
இதனையடுத்து அங்கு பதட்டமான சூழல் உருவாகியது. இரு தரப்பினரும் கற்களை கொண்டு கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டனர். இந்த வகையான தாக்குதல் அங்கு தொடர்ந்து வரும் சூழலில், இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சிவசேனா கட்சி இந்த கலவரம் தொடர்பாக தங்களுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதில் " டெல்லியில் தற்போது நடைபெற்று வரும் கலவரத்திற்கு யார் காரணம் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது. தற்போது நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் 1984ம் ஆண்டு நடபெற்ற கலவரத்தை நியாபகப்படுத்துகின்றது. இது வன்மையாக கண்டிக்கதக்கது. தில்லி தேர்தலில் பாஜக தோல்வியடைந்த சில நாட்களில் வன்முறை வெடித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்று தங்களின் பத்திரிக்கையான சாம்னாவில் தெரிவித்துள்ளது.