டெல்லியில் இன்று தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் நேற்று இரவு பெண் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் பத்பர்கன்ஞ் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார் ப்ரீத்தி. நேற்று இரவு ரோஹினி பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் ப்ரீத்தி இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட தகவலின்படி, ப்ரீத்தி இரவு 9.30 மணியளவில் ரோகிணி கிழக்கு மெட்ரோ நிலையத்திலிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத ஒருவர் வந்து, துப்பாக்கியால் அவரது தலையில் சுட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து இந்த கொலையில் ஈடுபட்டது யாரென்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.