உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் 15-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்து பேசினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், யோகி ஆதித்யநாத், மனோகர் லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசு சிப் பொருத்தப்பட்ட மின்னணு பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து இந்திய தூதரகங்களும், துணைத் தூதரகங்களும் விரைவில் மின்னணு பாஸ்போர்ட் திட்டத்துடன் இணைக்கப்படும். இது அனைவரையும் எளிதில் ஒன்றிணைக்கும் புதிய பாஸ்போர்ட் முறையை உறுதிப்படுத்தும். விசா, இந்திய வம்சாவளி அடையாள அட்டை, வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமை அட்டை ஆகியவற்றை வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட்டுடன் இணைப்போம். இதன்மூலம், ஒட்டுமொத்த நடைமுறை எளிதாகும் என கூறினார்.