இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நிலவை ஆராய்வதற்காக கடந்த 2008 ஆம் ஆண்டு சந்திராயன் என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. அந்த விண்கலம் நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து சாதித்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திராயன் 2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஏவியது.
சந்திராயன் 2 விண்கலம் மூலம் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்ட நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் வேகமாக மோதி விழுந்ததால் அத்திட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு சந்திரயான் 3 விண்கலத்தை ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டது.
ஆனால் கரோனா பரவல் காரணமாக சந்திரயான் 3 ஏவப்படுவது தாமதமானது. இந்தநிலையில் மக்களவையில் எழுப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் சந்திராயன் 3 விண்கலத்தை நிலவில் ஏவ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
"சந்திரயான்-2வில் இருந்து கற்றுக்கொண்டவை மற்றும் தேசிய அளவிலான நிபுணர்களின் பரிந்துரைகள் ஆகியவற்றின் அடிப்படையில், சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது" எனவும் "சந்திராயன் 3 தொடர்பான சிறப்பு சோதனைகள் முடிவடைந்துவிட்டது" எனவும் தெரிவித்துள்ளார்.