பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த ஹத்ராஸ் பெண்ணின் உடல் எங்கே வைக்கப்பட்டுள்ளது எனக் கேட்டதற்கு அங்கிருந்த காவலர்கள் தன்னை அடித்து உதைத்ததாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அஜய் தத் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த 14 -ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த அந்த பெண், சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த பெண் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, கொலை சம்பவத்தில் ஈடுபடல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெண்ணின் உடலை போலீஸார் கட்டாயப்படுத்தி இரவோடு இரவாக தகனம் செய்ய வைத்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தபோது அந்த பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டெல்லி அம்பேத்கர் நகர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தத், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் எங்குள்ளது என்று விசாரித்தபோது அங்கிருந்த காவலர்கள் அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள அவர், “அவர்கள் என் காலரை பிடித்து இழுத்து ஒரு அறைக்கு அழைத்து சென்றார்கள், அங்கே நான் அதிகாரிகளால் தாக்கப்பட்டேன். அவர்கள் என் கன்னத்தில் அறைந்து உதைத்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு கொடுக்கப்பட்ட மரியாதை இதுவாக இருந்தால், சாதாரண மனிதர்களைப் பற்றிச் சிந்தியுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.