Skip to main content

வேலை இல்லை, பணமும் இல்லை... உயிரிழந்த எட்டு வயது மகனை மயானம் வரை கைகளில் தூக்கிச்சென்ற தந்தை...

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாத ஒருவர், உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த தனது மகனை மயானம் வரை கைகளிலேயே தூக்கிச் சென்றுள்ள சம்பவம் ஆந்திராவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

 

8 year old boy passed away amid lockdown

 

 

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் இந்தியாவில் 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட சூழலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66லிருந்து 79 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாத தொழிலாளி ஒருவரின் மகன் சிகிச்சைக்குப் பணமில்லாததால் இறந்ததுள்ள சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திராவின் அனந்தபூர் பகுதியில் மனோகர் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் வசித்து வந்துள்ளனர். தினக்கூலியான மனோகருக்கு ஊரடங்கு காரணமாகக் கடத்த சில நாட்களாக வருமானம் இல்லாமல் இருந்துள்ளது. இந்த சூழலில் எட்டு வயதான அவரது மூத்த மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. மனோகரும் அவரது மனைவியும் தங்களது மகனை கோரண்ட்லா அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் உடல்நலம் மோசமானதால் அங்குள்ள மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சிறுவனை இந்துபூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் பின், அனந்தபூர் அல்லது கர்னூல் அரசு மருத்துவமனைக்குச் சிறுவனை அழைத்துச்செல்ல மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் அதற்கு மனோகரிடம் பணம் இல்லாததால் அந்த சிறுவனின் கடைசி மூச்சு இந்துபூர் அரசு மருத்துவமனையிலேயே நின்றுள்ளது. உயிரிழந்த மகனின் உடலை வீட்டிற்குக் கொண்டு செல்ல அரசு ஆம்புலன்ஸ் ஏதும் கிடைக்காததால் அங்கிருந்தவர்களிடம் பணம் வாங்கி தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனது மகனின் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்துள்ளார் மனோகர். கடைசியாகத் தனது மகனுக்கு இறுதி ஊர்வலம் நடத்தக் கூட பணமில்லாத மனோகர் மயானம் வரை தனது மகனின் உடலை கைகளில் சுமந்துசென்றுள்ளார்.  இந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்