பொய் செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான மத்திய அமைச்சகத்தின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக ஸ்மிருதி இராணி நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகும் பொய் செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது முதல்முறை பொய் செய்தி வெளியிட்டால் ஆறு மாதமும், இரண்டாம் முறை வெளியிட்டால் ஒரு வருடமும், மூன்றாவது முறை அதே தவறு நடந்தால் ஆயுள் முழுவதுக்கும் பத்திரிகையாளரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அமைச்சகத்தின் இந்த அறிவிப்பை பத்திரிகையாளர்கள், காங்கிரஸ், இடதுசாரி அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் முயற்சி எனவும் விமர்சித்தனர்.
இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட உத்தரவில், இது தொடர்பான விவகாரங்களை இந்திய பத்திரிகையாளர்கள் கவுன்சில் கவனித்துக்கொள்ளும். எனவே, முன்னர் வெளியிட்ட அறிவிப்பை வாபஸ் பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது பொய் செய்தி குறித்த மத்திய அமைச்சகத்தின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.