கர்நாடகாவில் காலா படத்தை காண வந்த ரசிகர்களை கன்னட அமைப்பினர் திரையரங்கில் இருந்து வெளியே அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதால், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இதையடுத்து காலா படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய கர்நாடக வர்த்தக சபை தடை விதித்தது. இதனை எதிர்த்து படக்குழுவினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் காலா படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கும், ரசிகர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்,
"காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல் படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு.
காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது. கன்னட மக்கள் காலா படத்தை ஆதரிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று காலா படத்தை கர்நாடகாவில் சி நிறுவனம் வெளியிட இருப்பதாக அறிவித்தது. மேலும் கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் வெளியிட உள்ளதாகவும் சி நிறுவன உரிமையாளர் கனகபுரா சீனிவாஸ் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, கன்னட அமைப்பினர், திரைப்பட வர்த்தக சபை என இரு அமைப்பினரும் சேர்ந்து கர்நாடக விநியோகஸ்தரான கனகபுரா சீனிவாஸ் அலுவலகத்தை சூறையாடினர். அங்குள்ள பேனர்கள், போஸ்டர்களை கிழித்து சேதப்படுத்தினர்.
இதையடுத்து நேற்று இரவே பெங்களூர் நகர காவல் ஆணையருக்கு காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்து கனகபுரா சீனிவாஸ் கடிதம் அளித்தார். இதன் அடிப்பைடயில் காலா வெளியாகும் திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. எனினும் கர்நாடகாவில் எந்த திரையரங்கிலும் காலா திரையிடப்படவில்லை.
இதனிடையே ஒரே ஒரு திரையரங்கத்தில் மட்டும் திரையிடப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து ரஜினி ரசிகர்கள் அங்கு படையெடுத்தனர். ஆனால் அதற்குள் தகவல் அறிந்த கன்னட அமைப்பினர் திரையரங்கில் திரண்டதால் டிக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டது. மேலும் அவர்கள் திரையரங்கில் இருந்த ரஜினி ரசிகர்களை திரையரங்கில் இருந்து வெளியேற்றினர். இதனால் அங்கு ரஜினி ரசிகர்கள், கன்னட அமைப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.