தமிழகத்தில் 5,324 கி.மீ தூர தேசிய நெடுஞ்சாலை, 11,830 கி.மீ மாநில நெடுஞ்சாலை, 11,638 கி.மீ மாவட்ட முக்கிய சாலைகளும், 34,858 கி.மீ தூர கிராம பகுதி சாலைகள் என மொத்தம் 63 ஆயிரத்து 650 கி.மீ. சாலைகள் அமைந்துள்ளது. தினமும் கிட்டதட்ட 5000 விபத்துகள் நடப்பதாகவும், அதில் 3500 க்கும் மேற்பட்டோர் காயமடைவதாகவும் பதிவாகியுள்ளது. இப்படியாக கடந்தாண்டில் மட்டும் கிட்டதட்ட 16,157 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டில் மட்டும் 14 சதவீதம்வரை விபத்துகள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. இதனால் மாதந்தோறும் 1300 முதல் முதல் 1350 பேர் வரை இறக்கின்றனர். இப்படியாக தினமும் நடக்கும் சேதங்கள் மற்றும் காயங்களால் 131 கோடியையும், உயிரிழப்பால் 61 கோடியையும் அரசு இழக்கிறது என குறிப்பிடுகின்றனர் நெடுஞ்சாலை துறையினர். இதுமட்டுமில்லாமல் உயிரிழப்புகள், தீவிர காயம், உடலுறுப்புகள் சேதம் போன்றவைகளால் அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் குடும்பமும் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.