Skip to main content

6 வாட்ஸ்அப் குழுக்கள், 15 சிசிடிவி கேமராக்கள்! - கேள்வித்தாள் லீக் ஆன அதிர்ச்சித் தகவல்கள்..

Published on 03/04/2018 | Edited on 03/04/2018

நாட்டையே அதிரவைத்த சிபிஎஸ்இ கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் அடுத்த ஆதாரங்களை டெல்லி காவல்துறை திரட்டி வருகிறது.

 

CBSE

 

மார்ச் 5ஆம் தேதி தொடங்கிய சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளில் பொருளியல் மற்றும் கணிதவியல் பாடங்களுக்கான கேள்வித்தாள் லீக் ஆனதாக தகவல்கள் வெளியாகின. முதலில் இதை மறுத்த சிபிஎஸ்இ நிர்வாகம், பின்னர் படிப்படியாக நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. 

 

இந்த விசாரணைக்குழு மாணவர்கள், ஆசிரியர்கள், பயிற்சி நிறுவன உரிமையாளர்கள் என 60 பேரிடம் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் கிடைத்தன. அதன்மூலம், பவானா பகுதியில் ஆசிரியர்களாக பணிபுரியும் ரிசப், ரோகித் ஆகியோரையும், அதே பகுதியில் பயிற்சி நிறுவனம் நடத்திவரும் தவ்கீர் என்பவரையும் கைது செய்தனர். 

 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பொருளியல் தேர்வுக்கான வினாத்தாள் இரண்டு மணிநேரம் முன்பாகவே பவானா தேர்வு மையத்திற்கு வந்ததும், அதன் மேலுறையைப் பிரித்து ரிசப் மற்றும் ரோகித் கேள்வித்தாள் படங்களை வாட்ஸ்அப் மூலம் தவ்கீருக்கு அனுப்பியதும் தெரியவந்துள்ளது. மேலும், தேர்வுக்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பாகவே குற்றவாளிகளுடன் தொடர்புடைய மாணவர்கள் தேர்வு மையத்தில் காத்திருந்துள்ளனர்.

 

சிறப்பு விசாரணைக் குழுவின் தகவல்படி, இந்த விவகாரத்தில் 53 மாணவர்கள் மற்றும் 7 ஆசிரியர்களுக்கு தொடர்புள்ளதாகவும், ஆறு வாட்ஸ்அப் குழுக்களுக்கு கேள்வித்தாள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. முதலில் ஒரு மாணவன், பின்னர் ஐந்து மாணவர்கள் என கேள்வித்தாள் வாட்ஸ் அப் வழியாக வெகுவேகமாக பரவியுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், பவானா தேர்வுமையத்தில் 15 சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாமல் இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. ஆக, இந்த விவகாரத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி நடந்திருப்பதாகவே சந்தேகிக்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்