Skip to main content

மெட்ரோ ரயில் காத்தாடுவது ஏன்???

Published on 31/05/2018 | Edited on 31/05/2018

சென்னையில் இதுவரை வெறிச்சோடி காணப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள், கடந்த ஒரு வாரமாக திருவிழா கணக்காக மக்கள் வெள்ளம் தடம்புரண்டு ஓடுகிறது. 2015 ஆம் ஆண்டில் ஆரம்பித்த இந்த ரயில் சேவை பச்சையப்பன் கல்லூரி முதல் ஏர்போர்ட் வரையும், இன்னொரு வழியில் கிண்டி முதல் ஏர்போர்ட் வரையிலும் சேவை இருந்தது. தற்போது சென்ட்ரல் முதல் ஏர்போர்ட் வரை சேவை தொடரப்பட்டுள்ளது. இதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில்தான் ஐந்து நாட்களாக இலவச பயணம் அளித்து வந்தனர். அதனால்தான் கூட்டம் கோலாகலமாக இருந்திருக்கிறது. எப்போது இலவசம் ரத்து செய்யப்படுகிறதோ அப்போது லட்சக்கணக்கான கூட்டம், சொற்பமானதாக ஆகிவிடும் என்று அரசாங்கத்துக்கு தெரியாதா என்ன. இதற்கு எல்லாம் காரணம் மெட்ரோ ரயில் நிலையத்தின் மோசமான சேவை அல்ல, நல்ல சேவைக்காக அவர்கள் வசூல் செய்வதுதான்? நல்ல சேவை என்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் விலை நிர்ணயம் செய்துகொள்வது சிறிதும் ஏற்புடையதல்ல.

 

metro

 

 



இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவை டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், குர்காவன், ஜெய்ப்பூர் மற்றும் கொச்சின் ஆகிய நகரங்களில் தொடங்கி, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. லக்னோ மற்றும் நொய்டா போன்ற ஏழு நகரங்களில் மெட்ரோ ரயில் நிலைய சேவை கட்டுமான பணிகளில் இருக்கிறது. மெட்ரோ ரயில் சேவை தொழில்நுட்ப புரட்சிகளின் பரிணாம வளர்ச்சிகளில் ஒன்று, மற்ற நாடுகளில் புல்லட் ரயில்கள் வரை சென்றுவிட்ட போதிலும் மெட்ரோ ரயில்களுக்கான கட்டுமான பணிகளில்தான் இந்தியா இருக்கிறது. இருக்கின்ற நகரங்களில் லாபத்துடன்தான் செயல்படுகிறதா? மெட்ரோ ரயில் சேவை லாபத்துடன் செயல்படாததற்கு ஒரே காரணம் குறிப்பாக மும்பையிலும் சென்னையிலும் அதன் கட்டணங்கள்தான். 2015 ஆம் ஆண்டில் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட சேவையின் போதே எல்லோரையும் யோசிக்க வைத்தது இதன் கட்டணம் தான் ஒரு நிலையத்திலிருந்து அடுத்த நிலையத்திற்கு பத்து ரூபாய் என்று வைத்து அதிகபட்ச கட்டணமாக நாற்பது ரூபாய் என்றனர். இது பலரால் விமர்சிக்கப்பட்டது. மூன்று லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று பார்க்கையில் 33,000 பேர்தான் பயணிப்பதாக தெரிவிக்கின்றனர்.
 

metro

 

 


தற்போது சென்ட்ரல் முதல் ஏர்போர்ட் வரை சேவை நீடித்திருப்பதால் அதிகபட்ச கட்டணம் எழுபது ரூபாவாக உயர்ந்துள்ளது. இது மேலும் மக்களுக்கு பீதியையே அளிக்குமே தவிர, மெட்ரோ ரயிலை மக்கள் நாடுவதற்கு துணையாக ஒரு போதும் இருக்காது. இந்தியாவின் எல்லா நகரங்களிலும் இதே நிலைமைதான், ஆனால் சற்று பரவாயில்லை என்று சொல்ல வைக்கிறது, சென்னையின் விலை பட்டியலையும் மும்பையின் அதிகபட்ச கட்டண விலையையும் ஒப்பிட்டு பார்க்கையில். ஆனால், கொல்கத்தா மட்டும்தான் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே விலைபட்டியலை 5 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையே வைத்திருக்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு ஆரம்ப காலங்களில் லாபம் கிடைக்காது, இருந்தாலும் மக்களை மெட்ரோ ரயில் சேவையை அதிகமாக பயன்படுத்தவைக்க முடியும். அதன் பின்னர் சற்று விலைபட்டியலை கூட்டினால் கூட அது லாபத்தை அளிக்கும். டெல்லியில் வைத்திருக்கும் விலைப்பட்டியலில் மக்களிடம் எடுக்கப்பட்ட சர்வே மூலமாகத்தான் விலைப்பட்டியல் நிர்ணயம் செய்திருக்கின்றனர். தமிழகத்தில் இதுபோன்று எதுவும் நடக்கவில்லை என்பது மக்களின் மீதான அக்கறையின்மைதான் காரணமாக இருக்க முடியும்.  தனியார் நிறுவனம் போன்று லாபத்தை மட்டுமே நோக்கி, மக்களின் கவனத்தையும், மக்களுக்கான சேவையையும் செய்ய மறந்துவிடுகின்றனர். இது கார்ப்பரேட் நிறுவனம் அல்ல, மக்களுக்கான அரசாங்கம் என்பதை மறவாதீர்கள்.