Skip to main content

தமிழ்நாட்டை பாஜக டார்கெட் செய்ய காரணம்! 

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

ஆந்திரா, கேரளா உள்பட 7 மாநிலங்களில் பா.ஜ.க.வால் ஒரு சீட்டு கூட ஜெயிக்க முடியவில்லை. ஆனால், அதைவிட தமிழ் நாட்டைத்தான் உடனடியாக டார்கெட் செய்திருக்கிறது பா.ஜ.க. தலைமை. காரணம், இங்கே பா.ஜ.க.வின் இந்துத்வா கொள்கைக்கு நேரெதிரான திராவிட சித்தாந்தம் தன்னுடன் இணைந்து போகக்கூடிய மதச்சார்பற்ற சமூக நீதி முற்போக்கு சக்திகளுடன் ஒன்றாகி வலிமையாக நிற்பதுதான்.

 

admk



தமிழ்நாட்டில் மத அரசியல் எடுபடாது என்பதால், சாதி வாக்குகளைக் குறிவைத்து அமித்ஷா வகுத்த அசைன்மெண்ட்படி வேலை நடக்கிறது. தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் முக்கிய தலைவர்கள் தங்கள் இனத்தின் கோரிக்கையை முன்வைத்து கூட்டணிக்குள் வந்தனர். வடக்கே வன்னிய சமுதாயத்தின் வாக்குகளைக் கொண்ட பா.ம.க., மேற்கே கவுண்டர் சமுதாயத்தில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ள அ.தி.மு.க., தெற்கே முக்குலத்தோரில் கள்ளர் சமுதாயம் தவிர்த்து மற்ற இரு பிரிவினரின் அ.தி.மு.க. ஆதரவு வாக்குகள், பா.ஜ.க.வுக்கு செல்வாக்குள்ள நாடார் சமுதாய வாக்குகள், தே.மு.தி.க. மூலம் தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகள் இவற்றையெல்லாம் கணக்கிட்டுத்தான் கூட்டணியை உருவாக்கியது பா.ஜ.க மேலிடம். அது வெற்றியைத் தராத நிலையில், மாற்று வியூகங்கள் வகுத்து களமிறங்கத் தீர்மானித்துள்ளது'' என்கிறார்கள் டெல்லி பிரமுகர்கள். 


  bjp



"முதல் கட்டமாக, ரெய்டு மற்றும் வழக்குகளால் கூட்டணி விவகாரத்தில் வளைந்து கொடுத்த அ.தி.மு.க.வில், ஒவ்வொரு மாவட்டத்திலும் செல்வாக்கான வர்களை ஓ.பி.எஸ். மூலம் நேரடியாக பா.ஜ.கவுக்குக் கொண்டு வர திட்டமிடு கிறது. திராவிடக் கட்சிகளில் அ.தி.மு.க. பிரமுகர்கள்தான், ஜெ. காலத்திலிருந்தே அயோத்தி கரசேவைக்கு ஆதரவான இந்துத்வா மனநிலையுடன் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்கள் ஏற்காத நிலை யிலும், மாவட்ட மாநில அள விலான நிர்வாகி களில் பலர் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருப் பதால், இவர் களில் சாதி செல்வாக்குடன் உள்ளவர்களை ஓ.பி.எஸ். மூலம் குறி வைப்பது என்பது மோடி -அமித்ஷா வியூகம். அதற்கான அட்வான்ஸ் தான், தேனி வெற்றி'' என்கிறார்கள்.

 

admk



அடுத்த கட்டமாக, தி.மு.க. கூட்டணி மட்டுமில்லாமல் இதர கட்சிகள், இளைஞர்கள் என மொத்தமாக தமிழ் நாட்டில் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையும் கோ பேக் மோடி என்ற குரலும் ஒலித்து வருகிறது. எனவே, பா.ஜ.க.வை சித்தாந்த ரீதியாக வளர்க்க, ஏற்கனவே பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடத்தப் படும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகா வகுப்புகளைத் தொடர்வது, மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏ.பி.வி.பி.) மாநில மாநாட்டை நடத்துவது, மாணவர்களையும் இளைஞர்களையும் இந்துத்வா சிந்தனைக்குத் திருப்புவது என்பது முக்கிய வியூகமாகும். 2ஜி மேல்முறையீட்டு வழக்கையும், ப.சிதம்பரம் குடும்பத்திற்கு எதிரான வழக்குகளையும் வேகப்படுத்தி கனிமொழி, ஆ.ராசா, கார்த்தி சிதம்பரம் போன்றவர்களின் எம்.பி. பதவிகளுக்கு நெருக்கடி உருவாக்கவும் திட்டமிடப்படுகிறதாம்.

 

dmk



பா.ஜ.க.வின் மாநிலத் தலைமையைப் பொறுத்தவரை தமிழிசைக்கு எதிரான குரல்கள் பலமாக ஒலித்தால், அவருக்குப் பதில் யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனையில், படுவேகமான கருப்பு முருகானந்தம், பக்குவமான வானதி சீனிவாசன் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. தமிழக பா.ஜ.க. விவகாரங்களை கவனிப்பதில் கூடுதல் அக்கறை செலுத்துமாறு ராம் மாதவ் பணிக்கப்பட்டுள்ளார்.த.மா.கா.வின் ஜி.கே.வாசனும் அவரது தொண்டர்களும் பா.ஜ.க.வுடன் இணைய வேண்டும் என்ற வியூகமும் உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, மு.க.அழகிரியுடனும் தொடர்பில் உள்ளது பா.ஜ.க. எல்லாவற்றுக்கும் மேலாக, பா.ஜ.க. இன்னமும் நம்புவது ரஜினியைத்தான். எம்.பி. தேர்தலுக்குப் பிறகு, அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பு வெளியிடுவேன் என ரஜினி ஏற்கனவே சொன்ன நிலையில், ‘எம்.ஜி.ஆர். போல அரசியலில் ரஜினி செல்வாக்கு பெறுவார் என திடீரென ஆடிட்டர் குருமூர்த்தியின் பேட்டி முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டது. மோடியின் பதவியேற்புக்கும் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினியுடன் அழகிரி, ஜி.கே.வாசன், அ.தி.மு.க. பிரமுகர்கள், செல்வாக்கு மிக்க சாதி அமைப்புகளின் தலைவர்களைக் கொண்டு தமிழ்நாட்டில் வேர் விடத் துடிக்கிறது பா.ஜ.க.


எடப்பாடி அரசு மிச்சமுள்ள இரண்டாண்டுகளை, மோடி தயவில் கடத்த நினைக்கும் சூழலில், ஹைட்ரோ கார்பன் திட்டம், எட்டு வழிச்சாலை, சாகர்மாலா திட்டம், நீட் தேர்வு எனத் தமிழக விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் ஆகி யோரை பாதிக்கச் செய்யும் திட்டங்களில் பா.ஜ.க. காட்டும் தீவிரத்தையும், இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட மதச்சார்பற்ற கோட்பாட்டுக்கு சவால் விடும் தன்மையையும் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள 37 எம்.பி.க்கள் கடுமையாக எதிர் கொண்டு, மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய கட் டாயம் உள்ளது.