Skip to main content

சசிகலாவை மறைமுகமாகச் சந்தித்த பா.ஜ.க.வினர்... சசிகலாவின் செயலால் அதிர்ந்து போன தினகரன்... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸின் திட்டம்!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020

 

admk


சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் என்னென்ன செய்வார் என்பதற்கான வியூகங்கள் தயாராகி வருகிறது. முதல் கட்டமாகச் சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் கட்ட வேண்டிய 10 கோடி ரூபாய் அபராதத்தைக் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. சசியைப் போலவே இளவரசி, சுதாகரன் ஆகியோரும் தலா 10 கோடி ரூபாய் அபராதத்தைக் கட்டுகிறார்கள்.
 


இந்த அபராதத்தை இதுவரை ஏன் கட்டவில்லை? இப்பொழுது கட்டுவதன் நோக்கம் என்ன? என சசிகலா வட்டாரங்களிடம் கேட்டோம். இந்த அபராதத்தைக் கட்டினால் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்றதாகிவிடும். அதனால் அந்த தண்டனையை எதிர்த்து மனு செய்ய முடியாமல் போகும். அந்த தண்டனையை ரத்து செய்யாவிட்டால் சசிகலாவால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு தேர்தலில் நிற்க முடியாமல் போகும். எனவே இதுநாள் வரை அந்த அபராதத்தை சசிகலா கட்டவில்லை. இப்பொழுது அந்த அபராதத்தைக் கட்டவில்லை என்றால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை நீட்டிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் இந்த அபராதத்தை உடனடியாக கட்ட ஏற்பாடுகள் நடக்கிறது.
 

admk


அதற்கும் இந்தத் தண்டனையை எதிர்த்து க்யூ ரேட்டிவ் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒருவேளை இந்த அபராதத்தைச் சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யும்போதே கட்ட வேண்டிய சூழல் இருந்திருந்தால் என்ன செய்திருக்க முடியும் என எதிர்க் கேள்வி கேட்கிறார்கள் சசிகலாவின் வழக்கறிஞர்கள்.

சசிகலா அபராதம் கட்டிவிட்டால் ஜெயலலிதா கட்ட வேண்டிய 100 கோடி ரூபாய் அபராதத்தை யார் கட்டுவார்கள் எனக் கேட்டதற்கு, ஜெயலலிதா இறந்துவிட்டார், அதனால் அவர் கட்ட வேண்டிய 100 கோடி ரூபாய் அபராதம் ரத்தாகிவிட்டது என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துவிட்டது. அதை கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் க்யூ ரேட்டிவ் மனு போட்டது. அதையும் சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ் செய்து விட்டது என விளக்குகிறார்கள்.

இந்த நிலையில் ஜெ.வின். சொத்துகளின் வாரிசுகளாக தீபாவும், தீபக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை வாரிசுகள் இல்லாதவர் என அறியப்பட்ட ஜெயலலிதாவிற்குத் திடீரென வாரிசுகள் வந்ததால் ஜெ. மேல் விதிக்கப்பட்ட அபராதத் தொகையான 100 கோடி ரூபாயை தீபக்கும், தீபாவும்தான் செலுத்த வேண்டும் என்கிறார்கள் சட்டத்துறை வல்லுனர்கள்.
 

admk


இந்த நிலையில் ஜெ.வின் வீடான போயஸ் கார்டனை நினைவு இல்லமாக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணை போயஸ் கார்டன் வாசலில் ஒட்டப்பட்டுள்ளது. ஜெ.வின் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டனில் சர்வே எண் 1567/1 முதல் 64 வரை வருகிறது. அந்த வீட்டை நினைவிடமாக்குவதை சசிகலா எதிர்க்கிறார். அந்த வீட்டில் இருந்துதான் சசிகலா சிறைக்குச் சென்றார். அந்த வீட்டில் இருந்த சசிகலாவின் அறையை வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தும்போது அதற்குரிய சாவிகளை இளவரசியின் மகனான விவேக்கும் மகளான ஷகிலாவும்தான் வருமான வரித்துறையிடம் கொடுத்தார்கள் என வருமான வரித்துறை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது போயஸ் கார்டனில் இருந்து சட்ட விரோதமாகப் பணம் எடுத்துச் செல்லப்பட்டு மாற்றப்பட்டதாக ஒரு வழக்கு இருக்கிறது. அது தொடர்பாக வருமான வரித்துறையிடம் சாட்சியம் அளித்தவர்கள் சசிகலா பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது போயஸ் கார்டனில்தான் குடியிருந்தார் என சாட்சியம் அளித்துள்ளார்கள். இப்படி போயஸ் கார்டனில் நடந்த குற்றங்களான சொத்துக் குவிப்பு வழக்கு வருமான வரித்துறை ரெய்டு போன்றவற்றில் போயஸ் கார்டன் சசிகலாவின் இருப்பிடம் எனக் குறிப்பிடுகிறார்கள். அதில் எந்த இடத்திலும், எந்த அறையில் ஜெயலலிதா தங்கியிருந்தார், எந்த அறையில் சசிகலா தங்கியிருந்தார் எனப் பிரித்து சொல்லப்படவில்லை.

ஜெ.வும், சசியும் ஒரே அறையில்தான் தங்கியிருந்தார்கள். எனவே போயஸ் கார்டனை அரசு கைப்பற்றும்போது அங்கு தங்கியிருந்த சசிகலாவின் பொருட்களை சசிகலாவிடமே ஒப்படைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் போயஸ் கார்டனை அரசு எப்படிக் கைப்பற்ற முடியும் என்கிறார்கள் சசிகலா உறவினர்கள்.
 

 

admk


சசிகலா விடுதலையானதும் போயஸ் கார்டனுக்கு வருவார் எனச் செய்திகள் வந்ததினால் அவசரம் அவசரமாக தமிழக அரசு அதை நினைவுச் சின்னமாக அறிவித்தது. போயஸ் கார்டன் உள்பட ஜெயலலிதாவின் அனைத்துச் சொத்துகளும் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் கைப்பற்றப்பட்ட சொத்துகள். குன்ஹாவின் தீர்ப்பை அப்படியே சொத்துக் குவிப்பு வழக்கில் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் குன்ஹா சொன்னபடியே ஜெ.வின். சொத்துகள் அனைத்தையும் அரசு கைப்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

அந்த உத்தரவு குன்ஹா நீதிபதியாக இருந்த பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றத்தின் மூலம் ஜெ.வுக்கு எதிராக வழக்கு நடத்திய தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கைப்பற்றப்பட வேண்டும். அந்த வேலையைத் தமிழக அரசு செய்யவில்லை என்பதினால் அந்த சொத்துகளுக்கு வாரிசு மற்றும் அதில் சசிகலா வந்து தங்கப்போகிறார் எனப் பல செய்திகள் வெளிவந்தன. சசிகலா சிறையில் இருந்து வந்து தங்க திட்டமிட்டது போயஸ் கார்டனில்தான் என்றாலும் ஜெ. வீட்டில் அல்ல.

அதற்கு எதிரில் சர்வே எண் 1,567இல் வரக்கூடிய 3,600 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தில் புதிதாக ஒரு வீடு கட்டி குடியிருக்கத்தான் சசிகலா முடிவு செய்துள்ளார். ஜெ.வின் வீடான 36 போயஸ் கார்டனுக்கு நேர் எதிரே உள்ள அந்த நிலம் சசிகலாவின் உறவினர் கார்த்திகேயன் பெயரில் இருக்கிறது. அங்குக் கட்டடம் கட்டும் வேலைகள் விறுவிறுவெனெ நடந்து கொண்டிருக்கிறது. நாம் அந்த இடத்தைச் சென்று பார்த்தோம். அங்குப் பல அடி ஆழத்தில் அடித்தளம் போடப்பட்டு மிகப்பெரிய பங்களா ஒன்று பல ஆயிரம் சதுர அடிகளில் கட்டுவதற்கான தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்தது. இது கரோனா காலம் என்பதால் கட்டுமான வேலைகளை செய்தவற்கும் அதை மேற்பார்வையிடுவதற்கும் பலர் வந்து சென்று கொண்டிருந்தார்கள்.

அடித்தளம் இடுவதற்கு இங்கே பெரிய பொக்லைன் எந்திரங்கள் மற்றும் லாரிகள் இரவு பகலாக வேலை செய்து கொண்டிருக்கின்றன. அந்த இடத்திற்கு வரும் சொகுசுக் கார்களில் கரோனா காலத்தில் இயங்குவதற்கு தமிழக அரசின் பேரிடர் மீட்புத்துறை வழங்கிய 'பாஸ்'கள் ஒட்டப் பட்டிருந்தன. நாம் அவற்றைப் படம் எடுத்தோம். சசிகலாவின் உறவினர் கார்த்திகேயன் பேசுவதாக அங்கிருந்தவர்கள் ஒரு அலைபேசியை நம்மிடம் கொடுத்தார்கள்.

அதில் பேசிய கார்த்திகேயன், "இது தனியார் நிலம், இங்கு நடைபெறும் கட்டடப் பணியை நீங்கள் எப்படிப் படம் எடுக்கலாம்'' என்றார். அதற்கு நாம், "இது சசிகலா வந்தால் தங்கப்போகும் மாளிகை'' எனச் சொல்கிறார்களே எனக் கேட்டோம். சசிகலாவின் இடமாக இருந்தாலும் அதை எப்படி நீங்கள் படமாக எடுக்கலாம் என்று நம்மைத் திருப்பிக் கேட்டார். சசிகலா தனிப்பட்ட ஆளல்ல, பொது வாழ்வில் இருப்பவர். அவர் போயஸ் கார்டனில் ஒரு வீட்டைக் கட்டுகிறார் என்றால் அதை\ப் படம் எடுப்பது, அதைப் பற்றி செய்தி சேகரிப்பது பத்திரிகையாளர்களின் உரிமை என விளக்கிச் சொல்லிவிட்டு வந்தோம்.
 

admk


வரும்போது போயஸ் கார்டனில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பாதுகாவலர் ஒருவர் நம்மிடம், "இது சசிகலா நிலம்தான். அவர்களது உறவினர்கள் அடிக்கடி வருகிறார்கள். அவருக்காக இந்தப் புதிய வீடு கட்டப்படுகிறது. இதுதவிர இன்னொரு வீடும் சசிகலாவுக்காக போயஸ் கார்டனிலேயே தயாராக இருக்கிறது, அது ஒரு அப்பார்ட்மெண்ட். இது தனி வீடு. அடுத்த சில மாதங்களில் இந்த வீடு தயாராகிவிடும்'' எனத் தெளிவாகவே விளக்கினார்கள்.

சசிகலாவை கரோனா ஊரடங்குக்கு முன் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி தான் சந்தித்தார். அதன் பிறகு யாரும் அவரை சந்திக்கவில்லை. ஆனால் கர்நாடகா கவர்னர் மாளிகை மூலம் பா.ஜ.க.வினர் சசிகலாவைச் சந்தித்து பேசியிருக்கிறார்கள் என்கிறது மன்னார்குடி வட்டாரம். சசிகலாவை பா.ஜ.க.வினர் சந்திப்பது பற்றி தமிழக அரசியல் நிலவரங்களை ஆர்.எஸ்.எஸ். சார்பாக ஆராய்ந்துகொண்டிருக்கும் ஆடிட்டர் குருமூர்த்திக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆடிட்டர் குருமூர்த்தி, ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இருவருக்கும் நெருக்கமானவர் என்பதால் அவருக்குத் தெரியும் படி இந்தச் சந்திப்புகள் நிகழ வேண்டாம் என சசிகலா விரும்பினார். சசிகலா இப்படி வேகமாகக் காய்களை நகர்த்திக்கொண்டுபோக, அதனைப் பார்த்த டி.டி.வி. தினகரன் வாயடைத்துப்போனார். அதேபோல் வளர்ப்பு மகன் சுதாகரன், இளவரசி, அவரது மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா உள்பட யாரிடமும் சசிகலா முகம் கொடுத்துப் பேசுவதில்லை. ஆனால் சசிகலாவைச் சுற்றி என்ன நடக்கிறது என சசிகலாவின் உறவினர்களே தெரிந்துகொள்ள முடியாதபடி காய் நகர்த்தல்களை சசிகலா மேற்கொண்டு வருகிறார் என்கிறது மன்னார்குடி வட்டாரங்கள். 
 

http://onelink.to/nknapp


இதில் புதிதாக ஜெ. வாரிசுகள் என அறிவிக்கப்பட்ட தீபக்கும், தீபாவும் சசிகலாவுடன் எந்தவிதமான தொடர்பில் இருக்கிறார்கள் என மன்னார்குடி வட்டாரங்களில் கேட்டோம். தீபக் ஆரம்பம் முதல் இன்று வரை சசிகலா வகையறாக்களின் செல்லப்பிள்ளையாகத்தான் இருக்கிறார். தீபக் மூலம் தீபாவிடம் பேசி சசிகலா அவரையும் தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டார் என்கிறார்கள். இந்நிலையில் சசிகலா வந்தால் எடப்பாடியும், ஓ.பி.எஸ்.ஸும் என்ன நிலை எடுப்பார்கள் எனக் கேட்டோம், ஓ.பி.எஸ்.ஸும், இ.பி. எஸ்.ஸும் இணைந்து சசிகலாவை எதிர்க்கும் வேலைகளில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இ.பி.எஸ். கொங்கு மண்டல பணக்காரர்களுடன் இணைந்து சசிகலாவை ஒரு கைப்பார்க்கலாம் எனக் காய் நகர்த்துவார் என்று அ.தி.மு.க.வினர் எதிர்பார்த்தனர். இ.பி.எஸ். முதல்வராகவும் ஓ.பி.எஸ். துணை முதல்வராகவும் ஆட்சி நடத்துவதற்கு எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என சசிகலா தெரிவித்து விட்டார். டி.டி.வி. தினகரன் ஒரு சக்தியாக இருப்பார். ஆனால் அ.ம.மு.க. எந்த வகையிலும் அ.தி.மு.க.வுக்கு போட்டியான கட்சியாக இருக்காது என்பதுதான் சசிகலாவின் வியூகம்.

எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சர்கள் பலரும், சசிகலா ஆதரவு நிலையை எடுத்துவிட்டார்கள். எனவே சசிகலா வருவதற்கும், அவர் அ.தி.மு.க.வில் முக்கியப் பொறுப்பில் அமருவதற்கும் பா.ஜ.க. க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டது என உற்சாகமாகவே சொல்கிறார்கள் மன்னார்குடி வகையறாக்கள். அவர்களின் நம்பிக்கைப்படி அரசியல் காய்கள் நகருமா என்பது சசிகலா விடுதலையாவதைப் பொறுத்து இருக்கிறது.