தெலுங்கானா மாநில ஆளுநராகத் தமிழிசை பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அதுகுறித்த சிறப்பு மலர் வெளியீட்டு விழா சென்னையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் ஊடகங்களில் பணியாற்றும் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நிறைவுரையாற்றிய தமிழிசை, தமிழக அரசியல் தொடர்பாகவும் தான் சந்தித்து வரும் சவால்கள் குறித்தும் பேசினார்.
இந்தப் பேச்சின் உச்சமாக அவர் தமிழகத்தில் நான் கால் வைத்து அரசியல் செய்வதாகக் கூறுகிறார்கள். நான் அவர்களுக்குக் கூறுகிறேன், தமிழக அரசியலில் நான் காலையும் வைப்பேன், கையையும் வைப்பேன் என்னை யாரும் தடுக்க முடியாது என்ற கோணத்தில் பேசினார். இது ஒருபுறம் இருக்க " தீய சக்தி கருணாநிதி என்று பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் கூறினால் அவர் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவேண்டாம்" என்று உதயகுமார் கூறியது எனத் தமிழக அரசியல் களம் சூடாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பாக நாஞ்சில் சம்பத்திடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
"அவரால் தெலுங்கானாவிலேயே காலை நுழைக்க முடியவில்லை. இங்கே வந்து நுழைக்கப் போகிறார்களா? கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டத்தைப் பிடிக்கப் போகிறார்களா என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இவர்கள் சொல்லுவது அதைப்போலத்தான் இருக்கிறது. தெலுங்கானாவில் இவர்களால் எதுவும் செய்ய முடியாமல்தான் மாநிலம் மாநிலமாக அலைந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்கள் தமிழகத்தில் கால் நுழைப்பார்களாம். இங்கே வாலை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. அவர் எதற்காக அரசியல் பேச வேண்டும். பதவியை ராஜினாமா செய்துவிட்டு தாராளமாக அவர் அரசியல் பேசட்டும், அரசியல் செய்யட்டும். நாங்கள் ஏன் அரசியல் பேசுகிறீர்கள் என்று கேட்கமாட்டோம். ஆனால் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்ற நிலையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதைத் தமிழக மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். உங்களுக்குத் தமிழக அரசியலை விட மனசில்லை என்றால் வாருங்கள், போட்டியிடுங்கள் ஒரு கை பார்த்துவிடுவோம். அதை விட்டுவிட்டு வீண் வாய் சவடால் விடாதீர்கள்.
தீய சக்தி கருணாநிதி என்று சட்டப்பேரவையில் பன்னீர்செல்வம் கூறினால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை விட்டுத் தருவதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளாரே?
இந்த வார்த்தையைக் கூற உதயகுமாருக்கு முதலில் தகுதி இருக்கா? காலம் சென்ற தலைவர்களை அவதூறு பேசித்தான் கட்சி வளர்ப்பீர்களா? எதிர்க்கட்சி தலைவர் வேலை என்பது தீய சக்தி கருணாநிதி என்று கூறுவதுதானா? திமுகவோடு பன்னீர்செல்வம் கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்று இந்த பகல் பைத்தியங்கள் கூறுகிறார்களே, திமுகவுக்கு அதற்கான தேவை ஏதாவது வந்திருக்கின்றதா? பன்னீர்செல்வத்தின் ஆதரவை நம்பித்தான் ஸ்டாலின் ஆட்சியை நடத்தி வருகிறாரா? ஏன் இப்படி உளறுகிறீர்கள். அருணா ஜெகதீசன் அறிக்கை அவரை குற்றவாளி என்று கூறியிருக்கிறது. அதைப்பற்றி இதுவரை அவர் வாய் திறந்து பேசியிருப்பாரா? இதைப் பற்றி உதயகுமார் பேசினாரா, இதைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு தேவையில்லாத விஷயத்தைப் பேசி மக்களைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள் அதிமுக அடிமைகள்.