Skip to main content

கண்ணாடி முன் நின்று கல் எரியும் ஆளுநரும் அரைகுறை உளறல் அண்ணாமலையும்!! - வழக்கறிஞர் பாலு

 

V BALU Interview

 

தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சனம் வைத்த ஆளுநரை பற்றி சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலு அவர்களிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அதில் அவர் பேசியதாவது...

 

முதல்வர் வெளிநாடு போனால் மட்டும் முதலீடு வந்துவிடுமா என்று ஆளுநர் விமர்சனம் வைத்துள்ளாரே? அதை பற்றி..

ஒரு மாநிலத்தில்  வெளிநாட்டிலிருந்து  வரும் முதலீடுகளை மத்திய அரசின் அனுமதியோடு தான் பெற முடியும். இருப்பினும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் பாஜகவின் 8 ஆண்டுக்கால ஆட்சியில் 500.5 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகளை வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளோம். இது காங்கிரஸ் ஆட்சியில் கூட நடக்கவில்லை என்று பேசுகிறார். அதில், பாஜக ஆட்சி செய்த கர்நாடகாவில்  2021-2022 ஆண்டுக்காலத்தில் 36 சதவீதம் முதலீடுகள் செய்யப்பட்டது. குஜராத், டெல்லி, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களை அடுத்து தான் தமிழகத்தில் முதலீடு செய்தது மத்திய அரசு.

 

ஆக, ஒரு முதல்வருக்கு தனது மாநிலத்தில் வெளிநாடு முதலீடு வர வேண்டும் என்ற முனைப்பு இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர் மாநில நலன்களை தேடி வேறு இடத்திற்கு செல்வது அவருடைய கடமை. இதில் ஆளுநருக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது? வெளிநாட்டில் இருந்து வந்த முதலீட்டாளர்களை ஒரு குறிப்பிட்ட தொகை கப்பம் கட்ட வேண்டும் என்று ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கூறிய போது அதற்கு மறுத்த முதலீட்டாளர்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய விரும்பி அங்கு சென்று விட்டார்கள். நமக்கு வர வேண்டிய பல நன்மைகளை அப்பொழுது இழந்தோம். ஆனால், கலைஞர் ஆட்சிக் காலத்தில் போர்ட், ஹுண்டாய் போன்ற கணக்கில் அடங்காத நிறுவனங்கள் பல வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்தடைந்தது. அது போல மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக இது போன்ற நன்மைகளை செய்து வரும் வேலையில் அவற்றை கொச்சைப்படுத்தி பேசுவது ஆளுநருக்கு நல்லதல்ல.

 

இந்திய அரசியலமைப்பு கொடுத்திருக்கக் கூடிய பாதுகாப்பை தனது கவசமாகப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை குறை கூறுவது பாஜக செய்யக் கூடிய கீழ்த்தரமான அரசியலாகும். மேலும், கிண்டி ராஜ்பவனை பாஜகவின் துணை அலுவலகமாக மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர். மாநிலம் கொண்டு வரும் திட்டதிற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய ஆளுநர், அதை தடுப்பதற்கு முயற்சி செய்கிறார். ஒரு மாநிலத்தின் ஆளுநரே இப்படி செய்கிறாரே என்று வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயங்குவார்கள். அப்படிப்பட்ட வேலைகளைத் தான் ஆளுநர் இப்போது செய்து கொண்டிருக்கிறார்.

 

தமிழகத்திலும் புல்லட் இரயில் வந்தால் நன்றாக இருக்கும் என்று முதல்வர் பேசியதை அண்ணாமலை விமர்சனம் செய்கிறாரே?

மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களில் ஒன்றான புல்லட் இரயில் திட்டத்திற்காக ஜப்பானில் சிகா என்ற நிறுவனத்திடம் 50 வருடத்தின் கீழ் கடன் பெற்றுள்ளது மத்திய அரசு. அந்த கடனுக்கு 0.01% வட்டி வீதமும், முதல் 15 வருடங்களுக்கு வட்டியே இல்லாமலும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறது அந்த நிறுவனம். ஆக, மத்திய அரசு இப்படிப்பட்ட திட்டங்களோடு தொடங்கப்பட்டதை தனது சாதனைகளில் ஒன்றாகப் பேசி வரும் நேரத்தில், தனது மாநிலத்திலும் புல்லட் இரயில் வந்தால் நன்றாக இருக்கும் என்று முதல்வர் பேசியதை கீழ்மைப்படுத்தி அண்ணாமலையின் பேசி இருப்பது அண்ணாமலையின் முதிர்ச்சியற்ற சிறுபிள்ளைத்தனமாகத் தான் பார்க்கப்பட வேண்டும்.

 

ஆளுநர் சர்ச்சையான விஷயங்களைத் தவிர சிதம்பரம் தீட்சிதர் போன்ற சட்ட ஒழுங்கு விஷயங்களிலும் தலையிடுகிறார் என்கிற குற்றச்சாட்டு வருவதைப் பற்றி?

சிறுமிகளுக்கு திருமணம் நடத்தியவர், அதை மறைக்க முயற்சித்தவர் ஆகியோர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும், அவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டால் போக்சோ சட்டதின் கீழ் அவர்களை கைது செய்ய வேண்டும். ஆனால், ஆளுநர் ரவி இதில் தலையிட்டு, சிதம்பரத்தில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று கூறுகிறார். மேலும் இவர் தலைமையில், மாநில மகளிர் சம்மந்தப்பட்ட மத்திய அரசின் கீழ் வரும் புலனாய்வு ஆணையத்தை இந்த விவகாரத்தை விசாரணை செய்ய ஈடுபடுத்தியுள்ளார். அந்த ஆணையமும் அந்த திருமணத்தில் தொடர்புடையவர்கள் என அனைவரையும் விசாரித்து அறிக்கை ஒன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், நாங்கள் அனைவரையும் விசாரித்தோம், குழந்தை திருமணம் நடந்ததாக எந்தவித ஆதாரமும் இல்லை. என்று வெளியிட்டார்கள். சட்டப்பூர்வமாக நிரூபிக்காத வரை, சட்டத்தால் தடை செய்த குழந்தை திருமணத்தை நடைபெறவில்லை என்று மக்களின் பிரதிநிதியாக இருக்கவேண்டிய ஆளுநர் ரவி சட்டத்திற்கு புறம்பாக பேசி வருகிறார். ஆனால், இன்றைய சமூக ஊடகம் இருப்பதின் காரணத்தால் சிதம்பரம் தொடர்பாக புகைப்படம், காணொளி என அனைத்து உண்மைகளும் வெளிவந்தது.

 

திமுக தவிர அதிமுக, பாஜக, நாம் தமிழர் போன்ற காட்சிகள் ஆளுநருக்கு எதிராக குரல் எழுப்பவில்லையே?

இப்போது உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசை பார்த்து பயந்து சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் சுயமரியாதை, தமிழ் மொழி மீது தொடுக்கப்படுகிற யுத்தம் என்பதை அவர்கள் இன்னும் உணரவில்லை. இன்னும் 6 மாதக் காலத்தில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆளுநரை வெளியேற்றவில்லை என்றால் பின்னால் வரவிற்கும் அரசிற்கு ஆபத்து நிகழும். பெரியார், அண்ணா வழியில் இந்தியா என்ற ஒருமைப்பட்டுள்ள நாட்டில் நாங்கள் எப்போதும் ஒன்று தான். ஆனால் மாநிலத்தின் உரிமைகள் என்று வரும் போது கொடுக்கின்ற முதல் குரல் நமது குரல் தான். அது தான் கூட்டாட்சித் தத்துவம். இந்த தத்துவத்தை உணரவில்லை என்றால் தமிழகம் போன்ற முன்னணி மாநிலத்தில் இருக்கின்ற நல்லுறவை சிதைத்து விடுவதற்கு பல யுக்திகளை கையாளுவார்கள். ஆக, ஒன்றிய அரசை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தால் இது போன்ற மாநிலத்தின் அதிகாரத்தில் தலையிடுவதையும், ஆளுநர் ரவி போன்றவர்கள் கலகம் செய்வதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !