Skip to main content

“பாஜக விரும்பும் அனைத்தையும் நானே செய்து கொடுக்கிறேன் என்ற இபிஎஸ்; வேகம் காட்டும் ஓபிஎஸ்” - ரகசியம் பகிரும் மூத்த பத்திரிகையாளர் பாண்டியன்

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

 The secret file of EPS caught in the hands of OPS - - Senior Journalist Pandian shares the secret

 

'ஜூலை 11 அன்று நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும்' என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமியின் தரப்பை உற்சாகமாக்கியிருக்கிறது. இனி தன்னுடைய அரசியல் பாதையில் எந்தத் தடையும் இல்லை என்று நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இந்தத் தீர்ப்பில் எங்களுக்கும் சில சாதகமான அம்சங்கள் இருக்கின்றன என்று வாதாடுகிறது ஓபிஎஸ் தரப்பு. இதுகுறித்த பல்வேறு கருத்துக்களை நம்மோடு மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் பகிர்ந்து கொள்கிறார்.

 

எடப்பாடியின் ஒற்றைத் தலைமை அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தி டெல்லிதான். சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் என அனைவரும் பாஜகவின் ஸ்லீப்பர் செல்கள். அதனால்தான் அவர்களை சேர்த்துக்கொள்ளுமாறு டெல்லி வலியுறுத்தியது. ஆனால் நானே உங்களுக்கு அடிமையாக இருக்கிறேன்... அவர்கள் எதற்கென்று எடப்பாடி அவர்களை இணைக்க மறுத்துவிட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா முதல்வராகத் தயாரானார். அவரைப் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அனுப்பி வைத்தனர். ஓபிஎஸ்ஸை முதல்வராக்க குருமூர்த்தி லாபி தர்மயுத்தம் மூலம் அதன்பின் முயன்றது. 

 

இப்படி அதிமுகவின் அனைத்து நடவடிக்கைகளிலும் பாஜகவின் பங்கு இருக்கிறது. ஒருகாலத்தில் அனைத்து தலைவர்களும் ஜெயலலிதாவின் அப்பாயிண்ட்மெண்ட்டுக்காக போயஸ் கார்டனில் காத்திருப்பார்கள். சசிகலாவை சந்தித்த பிறகுதான் ஜெயலலிதாவை சந்திக்க முடியும். அப்படிப்பட்ட சசிகலாவின் காலில் விழுந்து முதல்வர் பதவியைப் பெற்றார் எடப்பாடி பழனிசாமி. அதன்பிறகு சசிகலாவிடமிருந்து தொடர்புகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று டெல்லி சொன்னது. அதற்கும் சம்மதித்தார் எடப்பாடி பழனிசாமி.

 

முதல்வராக இருந்தபோது ஆளுநர் மாளிகையிலிருந்து வரும் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றி வந்தார் எடப்பாடி பழனிசாமி. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது அந்தப் பகுதி முழுவதும் அனில் அகர்வால் மற்றும் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. 13 அப்பாவி உயிர்கள் துப்பாக்கிச் சூட்டில் பறிபோயின. ஆனால் அந்த சம்பவம் குறித்து தொலைக்காட்சியில் பார்த்து தான் நான் தெரிந்துகொண்டேன் என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி. இப்படி முழுக்க முழுக்க டெல்லிக்கு அடிமையாக இருப்பவர்தான் அவர். 

 

சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரிடம் வாக்கு வங்கி இல்லை. எனவே ஓபிஎஸ்ஸை வைத்துக்கொண்டு எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று பாஜக நினைத்தது. ஆனால் நீங்கள் விரும்பும் அனைத்தையும் நானே செய்து கொடுக்கிறேன் என்று எடப்பாடி சொல்லிவிட்டார். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக வெற்றிபெற முடியாது என்பதால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அல்லாமல் தேர்தலை சந்தித்துவிட்டு அதன் பிறகு பாஜகவுக்கு ஆதரவளிக்கும் முடிவில் எடப்பாடி இருக்கிறார். பல்வேறு வழக்குகள் அவர் மேல் இருப்பதால் பயப்படுகிறார்.

 

இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் கட்சி எடப்பாடியின் கைக்கு வந்துவிட்டது. ஆனால் பாஜகவுடன் இணைந்து செல்வதா அல்லது ஜெயலலிதா பாணியில் அவர்களை எதிர்த்து நிற்பதா என்கிற பெரிய குழப்பம் எடப்பாடிக்கு இருக்கிறது. ஓபிஎஸ் தற்போது தைரியமாகப் பேசும் வார்த்தைகள் அனைத்தும் பாஜகவின் வார்த்தைகள் தான். ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரையுமே பாஜக கட்டுப்படுத்துகிறது. எடப்பாடியின் கை முழுமையாக ஓங்கிவிடக்கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒருவேளை பாஜகவை எடப்பாடி கழற்றிவிட்டால், ஓபிஎஸ் மூலம் பாஜக பிரச்சனை கொடுக்கும்.

 

ஓபிஎஸ் இப்போது காட்டும் வேகத்தை முன்பே காட்டியிருந்தால் தொண்டர்கள் அவர் பக்கம் வந்திருப்பார்கள். தாமதமாக அவர் செய்யும் வேலைகள் அவருக்குப் பலன் தராது. கட்சியின் பொதுச்செயலாளரை அடிப்படைத் தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்பது எம்ஜிஆர் வகுத்த விதி. அதைச் செய்துவிட்டால் எடப்பாடி தப்பிப்பார். தேர்தல் மூலம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதன்பிறகு எந்த சட்ட சிக்கலும் வராது. அதைத்தான் அவர் செய்யப்போகிறார். எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகியவற்றை அதிமுகவின் சட்டமன்ற கொறடாவின் கீழ் இயங்கும் மக்கள் பிரதிநிதிகள் தான் முடிவு செய்ய முடியும். அதில் சபாநாயகர் தலையிடக்கூடாது.