/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/veg.jpg)
ஐஐடி மெட்ராஸில் சைவ, அசைவ, சுத்த சைவ உணவு சாப்பிடுவோர் என்று மூன்று வகையான உணவு நடைமுறையை நிர்வாகம் பின்பற்றி வருகிறது. இதில் சுத்த சைவம் என்பது வெங்காயம், பூண்டு உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துகொள்ளாத மாணவர்கள். இதில் சைவ உணவு உண்பவர்களுக்கு என தனி விடுதி, உணவுக்கூடம் உள்ளது. அதே நேரத்தில் பொது உணவுக்கூடமும் உள்ளது. பொது உணவுக்கூடத்தில் அனைத்து மாணவர்களும் அமர்ந்து உணவு சாப்பிடலாம்.
சில மாதங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த சூரஜ் என்ற ஆராய்ச்சி மாணவர் மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக கடுமையாக தாக்கப்பட்டார். ஐஐடி நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு பதிலாக அந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது கண்டனத்தை தெரிவித்த அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்கில் அமைப்பிற்கு ஐஐடிக்குள் செயல்பட தடைவிதிக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/non-veg.jpg)
இந்நிலையில், ஐஐடி மெட்ராஸிலுள்ள பொது உணவவுக்கூடம் ஒன்றில் சைவம் சாப்பிடுபவர்களுக்கு ஒரு வழியும், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு வேறு வழியும் அமைக்கபப்ட்டுள்ளது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் சைவம் சமைக்க தனி பாத்திரங்களும், அசைவம் சமைக்க தனி பாத்திரங்களும் பயன்படுத்தியுள்ளனர். சைவம் சாப்பிடுபவர்கள் கை கழுவ தனி இடம், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு தனி இடம் என்று வித விதமான முறையில் பாகுபாட்டுடன் அந்த ஆர்ஆர் வட இந்திய உணவகம் செயல்படுத்தியுள்ளது. மேலும் கதவுகளில், கைகழுவும் இடங்களில் சைவர்களுக்கு, அசைவர்களுக்கு என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.
ஹிமாலயன் உணவக கட்டிடத்தில் இரண்டாவது தளத்தில் ஆர் ஆர் என்னும் இந்த பொது உணவகம் செயல்பட்டு வருகிறது. ஐஐடி வளாகத்தில் உள்ள அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்கில் என்னும் மாணவர்கள் அமைப்பு, இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பதை முழுவதுமாக மொபைலில் புகைப்படம் எடுத்து, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hand-wash.jpg)
“ஐஐடி மெட்ராஸில் தீண்டாமை தொடர்கிறது. இந்தியாவிலுள்ள உயர்சாதி வீடுகளில் இரண்டு நுழைவுவாயில் இருக்கும். அதில் ஒன்று முன்வாசல், உயர்சாதியினர்களுக்கு மற்றொன்று பின்வாசல், தாழ்த்தப்பட்ட சாதியினர்களுக்கு. ஐஐடி மெட்ராஸிலுள்ள உணவுக்கூடத்தில் தற்போது அதை செயல்படுத்திகொண்டு இருக்கிறது. இந்த உணவகத்தில் இரண்டு வழிகள் உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு என்று ஒன்றும், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு என்று மற்றொன்றும் உள்ளது. தனி தனியே பாத்திரங்கள், வாஷ் பேசின் என்று உள்ளது. எந்த கோரிக்கையால் சைவ உணவகம் ஒரு தீண்டாமைக்கு உள்ளானது?. ஐஐடி மெட்ராஸ் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக முயற்சி செய்கிறது, ஆனால் உள்ளே உள்ள கலாச்சாரத்தால் பல அம்சங்களில் பின்னடைவை சந்திக்கிறது” இவ்வாறு அந்த பதிவில் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டிருந்தது.
இதனை அடுத்து இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக ஆரம்பித்தது. பல விவாதங்களை மாணவர்களிடம் எழுப்பியது. ஐஐடி மெட்ராஸிலுள்ள மற்றொரு மாணவர்கள் அமைப்பான சிந்தாபாரும் இந்த பாகுபாட்டை கண்டித்தது. இதனையடுத்து ஹாஸ்டல் நிர்வாக செயலாளர் ஐஐடி மெட்ராஸ் ஹாஸ்டல் மாணவர்களுக்கு, ஒட்டப்பட்ட நோட்டீஸ்கள் எங்களுக்கு தெரியாமல் ஒட்டப்பட்டிருக்கிறது. ஒட்டப்பட்ட நோட்டீஸ்களை விரைவில் எடுக்கப்படும். மாணவர்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம். இதை நீக்கியபின்னர், இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று மெயில் செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/normal.jpg)
இந்த மெயிலை அடுத்து ஒட்டப்பட்ட நோட்டீஸுகள் அனைத்தும் நீக்கப்பட்டும், சைவர்களுக்கு ஒரு வழி அசைவர்களுக்கு ஒரு வழி என இரு வழியாக இருந்ததை அனைவருக்கும் ஒரு வழியாக மாற்றியும் அமைக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)