Skip to main content

எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் நதிநீர் இணைப்பிலேயே ரஜினி நிற்பது ஏன்?

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “எனது அரசியல் நிலைப்பாட்டை முன்பே தெரிவித்துவிட்டேன்.  அதில் எந்த மாற்றமும் இல்லை. கமலுக்கு ஆதரவா என்று கேள்வி கேட்டு எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்துவிடாதீர்கள்” என்றார்.

 

Rajini angry speech on Cauvery Issue

 

இதனை அடுத்து பாஜக தேர்தல் அறிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு, “நதிகள் இணைந்தால் நாட்டில் வறுமை போய்விடும். நதிகள் இணைப்பு குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதை வரவேற்கிறேன். நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ‘பகீரத்’ என்று பெயர் வைக்குமாறு வாஜ்பாயிடம் தெரிவித்தேன். பாஜக கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும்’’ என்று கூறினார்.

 

இந்திய அளவில் வேலைவாய்ப்பின்மை, மதவாதம், பொருளாதாரம், விவசாயிகள் பிரச்சனை ஆகிய பிரச்சனைகள்தான் இந்தத் தேர்தலில் முக்கியமாகப் பேசப்படுகின்றன. தமிழக அளவில் பார்த்தால் ஊழல், வேலைவாய்ப்பு, காவிரி, விவசாயிகள், ஸ்டெர்லைட் ஆகிய பிரச்சனைகள் முக்கியமாகப் பேசப்படுகின்றன. ஆனால், இந்த முக்கிய பிரச்சனைகளைத் தாண்டி பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இருக்கும் இந்திய நதிகள் இணைப்பது என்ற திட்டத்தை ரஜினி வரவேற்றுள்ளார். பலர் இது ரஜினியின் கனவுத் திட்டம் என்றும் சொல்கின்றனர். ரஜினிக்கும் நதிகள் இணைப்புக்கும் உள்ள பிளாஸ்பேக்கை ரீவைண்ட் செய்து பார்ப்போம்.

 

கடந்த 2002ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஏற்று தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என பல தமிழக அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினார்கள். அப்போது தமிழக சினிமா பிரபலங்களும் நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலையில் பாரதிராஜா தலைமையில் போராட்டம் நடத்தினார்கள். அந்தப்  போராட்டத்தில், அவர்கள் நமக்கு நீர் கொடுக்கும் வரை மின்சாரம் கொடுக்கக்கூடாது என்று அனைத்து பிரபலங்களும் தெரிவித்தனர். அந்தப் போராட்டத்தில் ரஜினிகாந்த் மட்டும் கலந்துகொள்ளவில்லை. ரஜினிகாந்த்தை மேடையிலேயே பாரதிராஜா கடுமையாக சாடினார்.

 

நெய்வேலியில் நடந்த போராட்டத்திற்கு அடுத்த நாள் ரஜினிகாந்த்  காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என கோரிக்கை வைத்து சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். ரஜினி இவ்வாறு திடீரென போராட்டத்தை நடத்தியதால் பல பிரபலங்கள் நேரடியாக வந்து வாழ்த்து தெரிவித்தனர். இறுதியாக போராட்டத்தை முடித்துவிட்டு பேசிய ரஜினி, “ இதுபோன்ற நீர் பிரச்சனைகள் எல்லாம் தீர வேண்டும் என்றால் இந்தியா முழுவதும் உள்ள நதிகளை இணைப்பது தேவையானது. அதுபோன்ற திட்டத்தை யார் கொண்டுவந்தாலும் என்னுடைய சொந்த பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் பணம் அளிக்கிறேன்” என்று கூறினார்.

 

இந்தியா முழுவதும் நதிகளை இணைக்கும் திட்டத்தை தன்னுடைய கனவு திட்டமாக கருதியவர் அப்போதைய பிரதமர் வாஜ்பாய். ரஜினியும் வாஜ்பாயிடம் நேரடியாக சென்று இந்த திட்டம் குறித்து பேசியும் இருந்தார். இந்த திட்டத்திற்கு பகீரத் என்றும் பெயர் வைக்குமாறு வாஜ்பாயிடம் தெரிவித்துவிட்டு வந்தார். இதன் பின் இந்தத் திட்டத்தை யாரும் செயல்படுத்தும் நோக்கில் இல்லை. பலரும் ரஜினியிடம் ஒரு கோடி ரூபாய் தருவதாக சொன்னீர்களே இன்னும் தரவில்லை என்று தற்போதும் பலர் தங்களின் விமர்சனத்தை ரஜினியின் மீது வைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், ரஜினி இன்று வரை இந்த திட்டத்தை நம்புகிறார் என்பது நேற்று அவர் கொடுத்த பேட்டியிலேயே தெரிகிறது. இதுமட்டுமல்லாமல் 'பூமராங்' படத்தில் இரண்டு கிராமங்களில் ஓடும் வெவ்வேறு நதிகளை இணைப்பது போன்று கதைக்களம் அமைத்து படம் எடுத்ததால் அந்தப் படத்தை ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்தத் திட்டம் குறித்து  பலரும் பல கோணத்தில் தங்களின் ஐடியாக்களை சொல்லிக்கொண்டு வருகின்றனர். பலரும் ரஜினியை போல இந்தத் திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். நதிநீர் இணைப்பு இந்தியாவை வளமாக்கும் என்று ரஜினி தீர்க்கமாக நம்புகிறார். அதனால்தான் இன்றுவரை அது குறித்துப் பேசிவருகிறார்.