Skip to main content

" பொக்கே கொடுத்தபோதே நிலைமையைப் புரிந்துகொண்ட எடப்பாடி ; ஒரே ஒரு அறிக்கை 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து..." - புதுமடம் ஹலீம்

Published on 15/11/2022 | Edited on 16/11/2022

 

ரதக

 

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்குக் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தக் கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து இருந்தன. மேலும் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய அதிமுக கட்சியைச் சேர்ந்த ஜெயக்குமார் சரியாக வாதாடாமல் விட்டதாலேயே இந்த முடிவு கிடைத்திருப்பதாக  திமுக மீது குற்றம் சாட்டியிருந்தார்.

 

இந்நிலையில்  இதுதொடர்பாக புதுமடம் ஹலீமிடம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, " முதலில் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டில் உங்களுடைய ஸ்டேண்ட் என்ன, இதை ஆதரிக்கிறீர்களா இல்லை எதிர்க்கிறீர்களா என்பதைத் தெளிவாகக் கூறுங்கள். 2006ல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதே இதைக் கொண்டு வந்ததாக பாஜகவினர் கூறுகிறார்கள். அப்போதே இதைக் கொண்டு வந்திருந்தால் அப்போதே திமுக எதிர்த்திருக்கும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இப்போது என்ன நிலைப்பாடு என்று அவர்களிடம் கேட்டால் அதற்கு உரிய பதிலைச் சொல்லாமல் தேவையில்லாத கேள்விகளை எழுப்பி பதில் சொல்வதிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள். 

 

ஆதரவா இல்லையா என்பதைக் கூற ஏன் இவ்வளவு தயக்கம். மக்களிடம் வாக்கு கேட்டுப் போக முடியாது என்ற அச்சம் அவர்களுக்கு அதிகமாக இருக்கும் என்ற காரணத்தாலேயே இவ்வளவு தயங்குகிறார்கள். 2019ம் ஆண்டு இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் வந்தபோது இந்தச் சட்டத்தை அவர்கள் ஆதரித்தார்கள். இந்த ஆதரவை நேரடியாக வழங்காமல் வெளிநடப்பு செய்து தங்களின் ஆதரவைக் காட்டினார்கள். ஜெயக்குமார் இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் எதுவுமே உண்மை இல்லை. ஏனோ தானோ என்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, தவறான தகவலின் மொத்த பிறப்பிடமாக இவரின் பேச்சுக்கள் இருக்கிறது. காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்கும்போது இவ்வாறான எந்த சட்டத்திற்கும் யாரும் ஒப்புதல் கொடுக்கவில்லை.

 

அப்போது வெளிநடப்பு செய்து அதிமுக எதிர்ப்பு தெரிவித்தோம் என்று ஜெயக்குமார் தெரிவிக்கிறார். அவருக்குத் துணிவிருந்தால் இந்த சட்டத்தை எதிர்க்கிறோம் என்று எடப்பாடியை அவர் அறிக்கை கொடுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். இவர்களுக்குள் இருக்கும் சண்டையை மறைக்க ஏதோ ஒன்றை வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள். மோடி தமிழகம் வந்தபோது எடப்பாடி பொக்கே கொடுக்கிறார். பிரதமர் மோடி பன்னீர்செல்வத்தை அருகில் அழைத்து வாங்கிக் கொள்கிறார். அப்போதே எடப்பாடி முகம் சுருங்கிவிட்டது. இதை அனைத்தையும் மறைக்கும் வேலைகளில் ஈடுபடும் இவர்கள் காங்கிரஸ் திமுக என்று பிரச்சனைகளைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். 

 

இதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். வாக்கு அரசியல் பண்ண நினைக்கும் பாஜகவோ அல்லது அடிமைகளாக இருக்கும் அதிமுகவோ மக்கள் நலனில் சிறிதும் கவலைப்படப் போவதில்லை என்பது இந்த இட ஒதுக்கீட்டு முறையிலேயே தெரிந்து விட்டது. பாஜகவுக்கு அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்த அவர்களால் அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். அதனால் வாய் மூடி மவுனியாக திமுக மீது பழி சுமத்தப் பார்க்கிறார்கள். இவர்களின் பொய்யை யாரும் நம்பத் தயாராக இல்லை. மக்களைப் பற்றிச் சிந்திக்காவிட்டாலும் கூட மக்களைக் கஷ்டப்படுத்த பாஜகவுக்கு அதிமுக துணைபோகக் கூடாது. இது அவர்களை எதிர்காலத்தில் கடுமையாகப் பாதிக்கும்" என்றார்.