Skip to main content

தெய்வங்களைத் தீண்டும் தீயவர்கள்... பாலியல் உளவியல் கோணல்!

Published on 19/07/2018 | Edited on 19/07/2018

‘கள்ளமில்லா குழந்தைகள் யாவும் கண்ணெதிரே காணும் தெய்வங்கள்’ என, தமிழகத்தில் குழந்தைகள் மீதான பார்வை இருந்துவரும் நிலையில், சென்னையில் 7-ஆம் வகுப்பு படிக்கின்ற காதுகேளாத சிறுமியை, 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும்  ஜெய் கணேஷுக்கு வயது 23 என்றால், ரவிகுமார் என்ற முதியவருக்கோ வயது 66. சுகுமாறன் என்பவருக்கு வயது 60 ஆகிறது. 12 வயது சிறுமியை சீரழித்த மிருக குணம் கொண்ட இந்த 17 பேரும் வெவ்வேறு வயதினராக இருக்கின்றனர்.

 

chennai accused



கடந்த ஜனவரி மாதம், காஷ்மீர் - கத்துவா மாவட்டத்தில், 8 பேரால் சிதைத்துக் கொல்லப்பட்ட ஆசிபா பானுவுக்கோ 8 வயதுதான். அந்த 8 பேரில் ஒருவனான விஷால், உத்தரபிரதேசத்தின் மீரட்டிலிருந்து, ஆசிபாவை பலாத்காரம் செய்வதற்காகவே ஜம்மு வந்தான்.  அசிபா கொலை செய்யப்படுவதற்கு முன்பாக, கஜுரியா என்ற காவல்துறை அதிகாரியும், தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

சென்னையில் - அடுக்கு மாடி குடியிருப்பின் லிப்ட் ஆபரேட்டரிலிருந்து, செக்யூரிட்டிகள் வரை என்றால், ஜம்முவில் - ஹிந்துத்துவா தொண்டனிலிருந்து காவல்துறை அதிகாரி வரை என, சிறுமிகள் விஷயத்தில், இத்தனை கெடுமதி கொண்டவர்களாக நடந்திருக்கின்றனர்.

 

 


கிறுகிறுக்க வைக்கும் புள்ளிவிபரம்!

உலக மக்கள் தொகையில், ஐந்தில் ஒரு குழந்தை இந்தியக் குழந்தையாக இருக்கிறது. இந்திய மக்கள் தொகையிலோ, மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளாக உள்ளனர். இந்தியாவில் 50 சதவீத குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள். குறிப்பாக, பெண் குழந்தைகளில் 82 சதவீதம் பேர், சொந்த குடும்ப உறுப்பினர்களாலேயே பாதிக்கப்பட்டிருக்கின்றனர். புகாரோ, வழக்கோ, வெளியுலகுக்குத் தெரிவதெல்லாம் 30 சதவீதம்தான். 70 சதவீத குழந்தைகள், பயத்தின் காரணமாக, தங்களிடம் அத்துமீறியவர்கள் குறித்து பெற்றோரிடமோ, குடும்ப உறுப்பினர்களிடமோ கூறுவதில்லை.  குழந்தைகளை பாலியல் கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற 10 சதவீத ஆண்கள் நம்மிடையேதான் உலவுகின்றனர். அட, பெண்களிலும் 4 சதவீதம் பேர் உண்டு. பெண் குழந்தைகளின் பாதிப்புகூட, அவ்வப்போது வெளியில் தெரிந்துவிடுகிறது. ஆண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சுத்தமாக வெளிவருவதில்லை. இதுபோன்ற புள்ளிவிபரங்கள் கிறுகிறுக்க வைக்கின்றன. 

குழந்தைகள் விஷயத்தில் நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்பதை எவ்விதம் அடையாளம் காண்பது?  இப்படி ஒரு குறை இருந்தால்,   எப்படி திருத்திக்கொள்வது? போக்சோ சட்டமெல்லாம் பாய்ந்தும், இத்தகைய குற்றங்கள் அதிகரிக்கின்றனவே? இதற்கெல்லாம் தீர்வே காண முடியாதா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தேடினோம்.

  child abuse



ஆசைத் தீயில் கருகிய வாழ்க்கை!

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முதியவர் ஒருவரைக் காண நேர்ந்தது. மைனர் பெண்ணைக் கெடுத்ததாக வழக்கு. பேச்சு கொடுத்தோம். “நான் நல்ல வசதிக்காரன். பொண்டாட்டி செத்து ரொம்ப வருஷம் ஆச்சு. புரோக்கர்கிட்ட பணத்தை விட்டெறிஞ்சா, ரேட்டுக்கு ஏத்தமாதிரி பொம்பளய கூட்டிட்டு வந்திருவான். அவகிட்ட, நான் என்ன பண்ண முடியும்? உடம்பு ஒத்துழைக்கணுமே? பணத்தையும் கொடுத்து, அவமானமும் படணுமா? ஆனா, மனசுல ஆசை தீயா இருக்கே? சின்னப் புள்ளைங்கன்னா, என்கிட்ட உடம்பு சுகத்தை எதிர்பார்க்காது. என்னால, என்ன பண்ண முடியுமோ, பண்ணிக்கலாம். வானத்துல பிளேன் ஓட்டணும்னா, அதற்கான தகுதி, பயிற்சி, திறமை எல்லாமே வேணும். பொம்மை பிளேனுக்கு இதெல்லாம் தேவையில்ல. கையில இருக்கிற ரிமோட்டை அமுக்கினா போதும். எங்க லெவல் இதுதான். பலநாள் கள்ளன் ஒருநாள் மாட்டுவான்ல. அதுதான் என் விஷயத்துலயும் நடந்திருச்சு. எத்தனை வருஷம் உள்ள கிடக்கணுமோ?” என்றார் தண்டனை பீதியுடன். 

 

 


உலகளாவிய இருண்ட சந்தை!

சிறுமிகளுடன் உறவு கொண்டால் எய்ட்ஸ் குணமாகிவிடும் என்று வதந்தி பரவிய காலமும் உண்டு. அந்த வதந்திக்கு இப்போது உயிர் இல்லை. அதே நேரத்தில், இளைஞரோ, முதியவரோ,  ஆண்மை குறைபாடு உள்ள பெரும்பாலானோரின்  தேடல் குழந்தைகளாகவே இருக்கிறது. ஆண்மகன் என்று தன்னைக் காட்டிக்கொள்வதற்கும், பாலியல் விஷயத்தில் திருப்தி அடைவதற்கும், குழந்தைகளையே நாடுகின்றனர். இன்னொரு கொடுமையும் நடக்கிறது. குழந்தை பாலியல் சுற்றுலா (The child sex tourism industry) என்பது ஒரு தொழிலாக,  சுற்றுலா பயணிகளுக்காக, சட்ட மீறலாக இந்தியாவிலும்  நடத்தப்படுகிறது. கண்ணுக்குத் தெரியாமல் இயங்கிவரும் இத்தொழிலானது,  உலகளாவிய ஒரு இருண்ட சந்தையாகும். இந்தியாவில்,  கர்நாடகா, ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசம் போன்ற பகுதிகளில் இருந்து புலம் பெயர்ந்த பெண்கள், தங்களின் குழந்தைகளை, இத்தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர். கோவா சிவப்பு விளக்கு பகுதிகளில், வெளிநாட்டினருக்காக இத்தொழிலை சத்தமில்லாமல் நடத்தி வருகின்றனர்.

 

 

மாற்ற முயற்சிக்காத மனநலக் குறைபாடு!

வலிமையற்ற குழந்தைகளிடம், தங்களின்  இச்சையைத் தீர்த்துக்கொள்ள நினைக்கும் மனநிலையை பீடோபிலியா (Pedophilia) என்கிறார்கள். பீடோபைல் (Paedophile) என்பது ஒருவகை மனநலக் குறைபாடு ஆகும். குறைந்தபட்சம் 16 வயதில்தான், ஒருவரை பீடோபிலியாகவாக அடையாளம் காண முடியும். இவர், அப்போது தன்னைக் காட்டிலும் 5 வயது குறைந்த குழந்தையின் மீது பாலியல் ஈர்ப்பு உடையவராக இருப்பார். 16 வயதில் தொடங்கி, முதுமை வரையிலும் பீடோபிலியாவாக வாழ்பவர்கள் அனேகம் பேர்.  இது ஒரு தவறான பாலியல் விருப்பமாகவே கருதப்படுகிறது. ஒரேயடியாக இதை மனநோய் என்று கூறிவிட முடியாது. பீடோபிலியாக்களின் தோற்றம் அச்சமூட்டுவதாக இருக்காது. மிக நட்பாக குழந்தைகளிடம் பழகுவார்கள்; எளிதாக வசீகரித்துவிடுவார்கள். இவர்களில் பலரும், தங்களின் குறைபாட்டை உணர்ந்து,  உளவியல் மருத்துவர்களை அணுகாமல், பாசத்தை வெளிப்படுத்தும் குழந்தைகளை, தங்களின் பாலியல் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த மனநல குறைபாட்டுக்கு வயது வரம்பில்லை. படிப்போ, பாரம்பரியமோ, பதவியோ, மதமோ, இனமோ எதுவும் இல்லை. குழந்தைகள் பாலியல் சுரண்டலில், உறவினர்கள், குடும்ப நண்பர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி வாகன ஓட்டுநர்கள், மதகுருமார்கள் என பலரும் வரிசைகட்டி நிற்கின்றனர். விடுமுறை நாட்களில் நடக்கும் குரூப் ஸ்டடி, ட்யூஷன் செல்லும் இடங்கள், போலி சாமியார்களின் ஆசிரமங்கள் இங்கெல்லாம், பாலியல் அத்துமீறலுக்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன. 

வலைத்தளங்களில் வக்கிரத் தாண்டவம்!

Child என்னும் தலைப்பில், பாலியல் நோக்கத்தோடு குழந்தைகளை ஈடுபடுத்தும் வெப்சைட்டுக்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், வெவ்வேறு பெயர்களில், இணையங்களில் இவை மலிந்து கிடக்கின்றன. குடும்ப உறவுகள் அனைவருமே தவறாக நடப்பதாக சித்தரித்து வக்கிரத் தாண்டவம் ஆடும் வெப்சைட்டுக்களும் நிறைய உள்ளன. தொடர்ந்து இதைப் பார்ப்பவர்களின் மனம், சுயகட்டுப்பாடு என்பதே இல்லாமல் தறிகெட்டுத்தான் அலையும். வலைத்தளங்களில் கெட்டதை மட்டுமே தேடுவோர், கெட்டுக் குட்டிச்சுவராகி விடுவதைத் தடுக்க முடியாது.

சிக்க வைத்த ஸ்வீட்டி! 

  sweety



சிறார்கள் மீதான மோகம் என்பது உலகளாவிய விவகாரம் என்பதால், சில ஆண்டுகளுக்கு முன்,  சர்வதேச குழந்தைகள் உரிமைக்குழு  ஒன்று உலகெங்கிலும் உள்ள பீடோபிலியாக்களை இனம் கண்டறிவதற்கான நடவடிக்கையில் இறங்கியது. டெர்ரி டெஸ் ஹோம்ஸ் என்ற அந்த அமைப்பு,  அதிநவீன கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில், ஸ்வீட்டி என்ற 10 வயது சிறுமியை, அனிமேஷனில் உருவாக்கியது. இதை அறியாமல், 71 நாடுகளைச் சேர்ந்த சுமார் 20000 பேர், வெப்காம் செக்ஸ் நடவடிக்கைகளுக்காக ஸ்வீட்டியை அணுகினார்கள். அட்லாண்டாவைச் சேர்ந்த, இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அந்த நபருக்கு வயது 35.  ‘ஸ்வீட்டி.. உன் ஆடைகளை அவிழ்த்தால் 10 டாலர் தருகிறேன்’ என்று ஜொள்ளு விட்டிருக்கிறார்.  இதே ரீதியில்  சாட் மூலம் சிறுமியுடன் பேசியவர்களின் விபரங்களைச் சேகரித்து,  சர்வதேச போலீசாரிடம் அளித்தது அந்த அமைப்பு.

வெளியில் சொல்லும் தைரியம்!

சிறுவயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள், தங்களுக்கு நடந்ததை வெளியில் சொல்வதற்கு, அப்போது   தயங்கினார்கள்.   பிற்காலத்திலாவது, தங்களுக்கு ஏற்பட்ட அந்த துன்பத்தை தைரியமாகச் சொல்லும்போதுதான், மக்களுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படும் என,  'Me Too' போன்ற பெண்ணிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது நடந்தால், தங்களின் சொந்த பந்தங்கள் மற்றும் உறவினர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை வெளியிட வாய்ப்பு உண்டு என்று பெண்ணிய அமைப்புக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

பேபி நட்சத்திரங்களையும் விட்டு வைக்கவில்லை! 

#metoo ஹேஷ்டேக் மூலம் வைரலான அந்நாளைய குழந்தை நட்சத்திரம் டெய்ஸி ராணி வெளிப்படுத்திய கொடுமையான அனுபவம் இது – 

 

daisy



“அப்ப எனக்கு 6 வயசு.  மெட்ராஸ்ல ஷூட்டிங். அன்னைக்கு ஷூட்டிங் முடிஞ்சதும், ஹோட்டல் ரூம்ல என்னோட பாதுகாவலர் என்கிட்ட தப்பா நடந்தார். நான் சம்மதிக்கல. பெல்ட்டால் அடிச்சார். இதை வெளில சொன்னா கொன்னுருவேன்னு மிரட்டினார். இப்பவும்கூட சினிமாவுல குழந்தைகள் நடிக்கிறாங்க. குழந்தைகள்தானே? யாரென்ன செஞ்சிருவாங்கன்னு பெற்றோர் அலட்சியமா இருந்துடாதீங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல, ஸ்டுடியோக்கள்ல, குழந்தைகளை தனியா இருக்க அனுமதிக்காதீங்க. பெற்றோர்கள் தங்களின் பாதுகாப்பு விஷயத்தில் எச்சரிக்கையா இருக்கணும்கிறதுக்காகத்தான் இதைச் சொல்லுறேன்.” என்று, தன் சோகத்தை பகிர்ந்திருக்கிறார்.

“நானும் சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறேன். 5 வயதில் நடக்கும் ஒன்றை எப்படி நான் அம்மா, அப்பாகிட்ட சொல்ல முடியும்? அப்ப, என்ன நடந்துச்சுன்னு கூட எனக்கு தெரியாது. யார் எப்படி பேசினால் தப்பு? எப்படி தொட்டால் தப்புன்னு பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்க.” என்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

 

nivetha



சில வயோதிக சினிமா பிரமுகர்களின் பார்வை குட்டி நட்சத்திரங்களின் மீது படிவதை அறிந்தே வைத்திருக்கிறது திரை உலகம். பேபி நட்சத்திரமாக இருந்தபோது, பாலியல் தேவைகளுக்கு பிரியத்துடன் பயன்படுத்திக் கொண்ட பெரிய தயாரிப்பாளர்கள், பின்னாளில் கைவிட முடியாமல், அவர்களையே  ஆசை நாயகிகள் ஆக்கியதும் உண்டு. வெகுசில வயதான நடிகர்களுக்கும்கூட இதே பிரச்சனை இருந்ததுண்டு. ஃப்ரெஷ்ஷாக, டீன் ஏஜ் ஹீரோயின்களையே, குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அந்த இளம் நடிகைகளின் வீட்டுக்குச் சென்று பொழுதைப் போக்குவார்களென்று சினிமாவட்டாரத்தில் செய்திகளுண்டு. முன்பெல்லாம் சிறுவர்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பற்றி அதிகம் பேசாத தமிழ் சினிமா, சமீபமாக 'கடுகு', 'அசுரவதம்' என்று பேசத்தொடங்கியிருக்கிறது. 'காதல் கொண்டேன்' இதில் முன்னோடி.


“நான் தவறானவள்; அழுக்கானவள்” – பதின்பருவ மனஅழுத்தம்! 

 

poornima



1986-ல் கனடாவில் குடிபெயர்வதற்கு முன்பாக சென்னையில் வசித்தவர் பூர்ணிமா. கசப்பான கடந்த காலத்தால்,  “சிறுவயது கொடுமைகளின் தாக்கம் என்னுடைய முழு வாழ்க்கையையும் கடுமையாகப் பாதித்தது. உறவுகளில் மிகுந்த சிக்கலுக்கு நான் ஆளானேன். குழந்தை பெற்றுக்கொள்ள என்னால் முடியவில்லை” என்கிறார். 6 வயது முதல் 13 வயது வரையிலும், தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரியின் கணவர் பாலியல் ரீதியாக தன்னைத் துன்புறுதியதை, கனத்த மனதோடு விவரிக்கிறார்.

“இரவு நேரங்களில், இருட்டில் இருக்கும்போது அவர் என் அருகில் அமர்ந்திருப்பார். அவருடைய கைகளை தவறான இடங்களில் வைப்பார். நான் தனியாக இருப்பதைப் பார்க்கும் போதெல்லாம் என் ஆடைக்குள் கைகளை விடுவார். இப்படி நடப்பது அவருக்குத் தவறாகவே தெரியவில்லை. நானும் என்னைத் தற்காத்துக்கொள்ள முயற்சிக்கவில்லை. அதனால், நான் தவறானவள்; அழுக்கானவள் என்று எண்ணத் தொடங்கினேன். பாலுறவு குறித்து அப்போது எனக்கு எதுவும் தெரியாது. ஒருநாள் ரத்தம் படிந்திருந்த என் உள்ளாடையைப் பார்த்த உறவுக்காரப் பெண் “நீ பெரிய மனுஷி ஆகிவிட்டாய். குழந்தை பெற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டாய். இனிமேல் யாரும் உன்னைத் தொட அனுமதிக்காதே” என்று அறிவுறுத்தினார். தாமதமாகக் கிடைத்தாலும் அவர் தந்த அறிவுரை எனக்கு உபயோகமாக இருந்தது.

 

 


முதல் முறையாக எனக்குள் இருந்த வலிமையை உணர்ந்தேன். அவர் என்னை நெருங்கியபோது, தடுத்து நிறுத்தினேன். அவரும் “உனக்கு விருப்பம் இல்லையென்றால், இத்தோடு நான் நிறுத்திக்கொள்கிறேன்.” என்றார். இதை நான் முன்பே செய்திருக்கலாம். இத்தனை காலம் இதை நான் ஏன் செய்யவில்லை என்ற கவலை என்னை வாட்டியது. பதின்பருவம் முழுவதும் மன அழுத்தமும், தற்கொலை எண்ணமும் அதிகமாக இருந்ததால், என்னை நானே வெறுக்கத் தொடங்கினேன். கனடாவுக்குச் சென்றபிறகு, ஒரு டிவி நிகழ்ச்சியின் மூலம், குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் குறித்த விழிப்புணர்வு கிடைத்தது. ஆனாலும், காலம் கடந்துவிட்டதால், நான் எவ்வளவோ முயற்சித்தும், அவருக்கு தண்டனை வாங்கித்தர முடியவில்லை” என்று நொந்துகொள்ளும் அவர், “இந்த விவகாரத்தில் குற்றவாளி அவர் ஒருவர் மட்டுமே. அது நான் இல்லை.” என்று உறுதிபட கூறுகிறார். 

 

 


“அற்பமாக நடந்து அனைத்தையும் இழந்தேன்!” – ஒரு ஆசிரியரின் அலறல்!

12 வயது மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய நெல்லை மாவட்ட  ஆசிரியர் ஒருவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.  “குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பதை நான் நன்கறிவேன்.  எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று கற்றுக் கொடுத்திருக்கிறேன். அடிப்படையில் நான் ஒன்றும் பீடோபிலியா இல்லை. குழந்தைகளை அந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பவனும் கிடையாது. ஒரு அசாதாரண சூழ்நிலை என்னை சபலப்பட வைத்தது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பாயும் போக்சோ சட்டம் எத்தனை கடுமையானது என்பதும் எனக்குத் தெரியும். உச்சபட்சமாக தூக்கு தண்டனை கூட கிடைக்கும். அருமையான ஆசிரியர் பணி, சமுதாயத்தில் மதிப்பு, மனைவி, குழந்தைகள் என அழகான குடும்பச் சூழல், இவை அனைத்தையும், அற்பமாக நான் நடந்துகொண்ட ஒரு செயலால் இழந்து நிற்கிறேன். பீடோபிலியாக்களோ, நல்ல மனநிலையில் உள்ள என்னைப் போன்றவர்களோ, குழந்தைகளை குழந்தைகளாகப் பார்க்காவிட்டால், வாழ்க்கையே நரகமாகிவிடும். இதை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன்“ என்றார். எத்தனை காரணம் சொன்னாலும் செய்தது மிகப்பெரிய பாவம், குற்றம்.

57 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்படத்தில், குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பாடல் எழுதிய மருதகாசியின் வரிகள் இவை - 

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..

வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்.. 

நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்..

நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்..

 

உண்மை இதை உணர்ந்து.. 

குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோரும், தங்கள் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும்.