Skip to main content

சி.எப்.எல் எனும் விஷம்

Published on 26/04/2018 | Edited on 27/04/2018

மனித வாழ்வில் ''மாற்றம் அடிக்கடி வந்துபோகும்'' அதனால்தான் "மாற்றம் ஒன்றுதான் மாறாதது" என கூறினார்கள். அன்றாட வாழ்விலிருந்து விஞ்ஞானம் வரை எல்லா விஷயங்களும் காலத்தின் போக்கில் மாறிக்கொண்டிருக்கிறது. அதிலும் விஞ்ஞான கண்டுபிடிப்பில் நடக்கும் மாற்றமானது சில நேரங்களில்  மக்களின் பொருட்செலவையோ, தரத்தையோ குறிவைக்கின்றன. சில நேரத்தில் மனித ஆரோக்கியம் சார்ந்த கவனங்களை எடுத்துக்கொள்ள மறந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒன்றில்தான் வந்து சேர்கிறது சி.எப்.எல் (compact fluorescent lamps)எனும் பல்புகள்.  இன்றளவிலும் நகரத்திலிருந்து கிராமங்கள் வரை படர்ந்து ஒளிர்ந்துவரும் இந்தவகை பல்புகளை ஒரு காலத்தில் அரசே நம் வீடுகளில் உபயோகிக்க பரிந்துரை செய்தது. இதை நாம் விளம்பரங்களில் எல்லாம் பார்த்திருப்போம். 

cfl

 

சி.எப்.எல் பல்புகளை பொறுத்தவரை அவை நாம் அதற்கு முன் அதிகமாக உபயோகித்து வந்த குண்டு பல்புகளுக்கு மாற்று, அவற்றுடன் ஒப்பிடும்போது குறைவான மின்சக்தியில், அதிகநேரம் எரியும். மின்சார சிக்கனம், பால் போன்ற அதிக வெளிச்சம் போன்றவை அவற்றின் மேன்மைகள். இந்த பல்புகளில் சில பாதிக்கும் இயல்புகள் இருக்கிறது. இது வெகுசிலருக்கும் தெரியாத ஒன்று. குண்டு பல்புகளை உபயோகிக்கத்தால் அதிலிருந்து வரும் வெப்பமானது புவி வெப்பமாதலை ஊக்குவிக்கும் அதே வேளையில் மின்சார செலவு அதிகமாகும் போன்ற காரணங்களாலேயே சி.எப்.எல் பல்புகள் அந்த இடத்தை பிடித்தன என்றாலும் மனிதவளத்தையே பதம்பார்க்கும் கேடுகள் சி.எப்.எலில் உள்ளது என்பதுதான் உண்மை.


காரணம் அந்த பல்புகளின் உபயோகிக்கும் நேரத்தை விட அதை டிஸ்போஸ் செய்வதில்தான் ஒளிந்திருக்கிறது பாதரசம் எனும் உலோக விஷம். சி.எப்.எல் பல்புகளை சாதாரணமாக நினைத்து வாங்கி பயன்படுத்திக்கொண்டு வருகிறோம். யூசர் மேனுவலை படிக்காமல் இந்த பல்புகளை உபயோகிக்க கூடாது. உதாரணமாக குண்டு பல்புகள் உடைத்தால் துணியினால் துடைத்து சுத்தம் செய்துவிடலாம் ஆனால் உடைந்த  சி.எப்.எல் பல்புகளை சாதாரணமாக கைகளால் தொடக்கூட கூடாது. வேட்கம் கிளீனர், துணி என எதைவைத்தும் சுத்தம் செய்யக்கூடாது ஏனெனில் உடைந்த பல்பில் இருந்து வெளியேறும் பாதரசம் அறைமுழுவதும் பரவி பல தொற்றுக்களை பரப்பும்.

 

cfl

 

அமேரிக்காவில் உடைந்த சி.எப்.எல் பல்புகளை என்ன செய்யவேண்டும் என்ற ஒரு முறையையே வைத்துள்ளது அரசாங்கம்.

உடைந்த சி.எப்.எல் பல்புகளை வேட்கம் க்ளீனரால், துடைப்பத்தால் சுத்தம் செய்யக்கூடாது. ஏனெனில் அறைமுழுவதும் பாதரசம் பரவும், பல்பு உடைந்த உடனே அந்த அறையின் நெடி காற்றை சுவாசிக்க கூடாது, கையுறைகளை உபயோகித்தே உடைந்த சி.எப்.எல் பல்புகளை கையாள  வேண்டும். அதைவிட முக்கியமானது சி.எப்.எல். குப்பைகளை சாதாரண குப்பைகளுடன் சேர்த்து போடக்கூடாது எனவே அங்கு சி.எப்.எல் உடைந்த பல்புகளை சேகரிப்பதெற்கென தனி மறுசுழற்சி மையங்கள் உள்ளன. அங்குதான் கொண்டு சேர்க்கவேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 

இப்படி இருக்க நாம் இங்கு நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சி.எப்.எல் பல்பிலுள்ள 68 மில்லிகிராம் பாதரசத்தையும் மண்ணுக்கு பாய்ச்சிக்கொண்டிருக்கிறோம் சரியான கையாளும் முறை இல்லாமல் இருக்கிறது என்பது நிதர்சனமே. ஆயிரம் மணிநேரம் ஒரு குண்டு பல்பு எரிய மின் உற்பத்திக்கு 71 கிலோ நிலக்கரி தேவைப்படுகிறது, ஆனால் சி.எப்.எல் பல்பிற்கு 14.2 கிலோ நிலக்கரியே போதுமானது என்றாலும் மின் உற்பத்தியின் போது வெளியேறும் பாதரச அளவை கட்டுப்படுத்துவதுகூட எளிதானது. ஆனால் ஆயிரம் கோடிக்கணக்கில் செயலிழந்து போகும் சி.எப்.எல். பல்புகளை சம சமதளங்களிலும், குப்பை மேடுகளிலும் நாம் சாதாரணமாக வீசும் போதும் வெளியாகும் பாதரசத்தின் அளவு கட்டுப்படுத்த முடியாத சீரழிவை தரும்.
 

cfl

 

நாம் யாரும் மறக்க முடியாத ஒன்று ''மினாமடா'' 1950களில் மினாமடா வளைகுடாவை சுற்றியுள்ள மக்களை நரம்பியல் நோயின் மூலமாக உயிரிழக்க செய்தது  இந்த  பாதரசம்தான். மினாமிடாவை சுற்றியுள்ள தொழிற்சாலைகளின் பாதரசக் கழிவுகள் கடலில் கொட்டப்பட்டு அவை மீன்களின் மூலம் மனித உணவு சங்கிலியில் புகுந்து இறுதியில் மனித உயிரிழப்பை ஏற்படுத்திய அந்த தாக்கம் மினாமிடா என்ற பெயராலே குறிப்பிட்டபட்டுவருகிறது. இன்று சமதளத்திலும் குப்பை மேடுகளிலும் கொட்டப்படும் சி.எப்.எல் பல்புகளிலிருந்து வெளிப்படும் பாதரசம் எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்கும் என்பது நாம் பெரிதாக கவனிக்காத ஆபத்தின் கேள்விக்குறிதான்.