
கடலூர் அருகே உள்ள சிப்காட்டில் தனியார் சாயப்பட்டறை தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்குச் சாயக் கழிவு நீரைச் சுத்திகரிப்பதற்கு இ.டி.எப். என்ற பாய்லர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாயப்பட்டறையில் உற்பத்தியாகும் கழிவு நீரைச் சுத்திகரித்து வெளியே அனுப்பப்படும். இந்த டேங்க் சுமார் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டது ஆகும். இந்நிலையில் இந்த டேங்கில் ஏற்பட்ட அதிக அளவு வெப்பம் காரணமாக இன்று (15.05.20250 அதிகாலையில் திடீரென பாய்லர் வெடித்துள்ளது.
இதனால் அருகே இருந்த தொழிற்சாலையின் மதில் சுவர் பெயர்ந்து விழுந்தது. அதே சமயம் பாய்லரில் இருந்த சுடுநீர் அருகில் உள்ள குடிகாடு கிராமத்தில் அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் பரவியது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து அங்கிருந்து வெளியேறினர். மேலும் பொதுமக்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டும் பாதிக்கப்படைந்தனர். அதோடு ரசாயன நீரில் கால் வைத்த பொதுமக்களுக்குக் கால் எரிச்சல் ஏற்பட்டதன் காரணமாகக் கடலூர் அரசு மருத்துவமனையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர். அதே சமயம் இது குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் அருகில் இருந்த பொதுமக்களை மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்து என்பது இ.டி.எப். டேங்கில் ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாக இந்த விபத்து நடைபெற்றிருக்கலாம் என முதல் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக உரியப் பாதுகாப்பு முன் எச்சரிக்கை எற்பாடுகளை மேற்கொள்ளாத தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் - சிதம்பரம் சாலையில் அப்பகுதி கிராம மக்கள் சிறிது நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வட்டாட்சியர் மகேஷ் தலைமையிலான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்து காரணமாக 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.