Skip to main content

முன்னாள் மேயர் உட்பட மூவர் கொலையில் வட மாநில கூலிப்படை? யார் அந்த "லால்"?

Published on 25/07/2019 | Edited on 25/07/2019


 

ஒரே வீட்டில் மூன்று கொலைகள், அதுவும் எதிர்க்கட்சியிலுள்ள முக்கிய அரசியல் பிரமுகர் என அதிகளவில் அழுத்தத்தைத் தர, தற்பொழுது தான் தடயங்களை சேகரித்து கொலைக்கான காரணத்தையும், கொலையாளியையும் கண்டுபிடிக்க அக்கறைக்காட்டி வருகின்றனர் நெல்லைப் போலீசார். 
 

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவன் மற்றும் வேலைக்காரப்பெண்ணுடன் கொலையான ரெட்டியாப்பட்டி வீட்டின் 100 மீட்டர் தூரத்தினில் மூத்த மகள் பேராசிரியை கார்த்திகா வீடு, சற்று தள்ளி பெந்தோகொஸ்தே ஆலயம், நியூ ருசி புரோட்டா கடை என இருந்தாலும் அடுத்த 500 மீட்டர் தூரத்தினில் இருக்கின்றது மற்ற வீடுகள். இதில் புரோட்டாக்கடை மற்றும் பெந்தோகொஸ்தே ஆலயத்திலுள்ள சி.சி.டி.வி. கேமராக்களே கொலையைக் கண்டுபிடிக்க முக்கிய தடயமாய் இருந்திருக்கின்றது நெல்லைப் போலீசாருக்கு. 
 

இதில் ஒரு சி.சி.டி.வியில் பதிவான காட்சிகளில் இரு வட மாநில வாலிபர்கள் அந்தப்பகுதியை கடந்து சென்றதும், அந்த இரு வாலிபர்களில் இருவரும் ஜீன்ஸ் ரக பேண்ட்களும், ஒருவன் மஞ்சள் நிறமும், மற்றொருவன் பச்சை நிறமும் கொண்ட டி சர்ட்டும் அணிந்திருந்தது தெளிவாக உள்ளது. இதனை வைத்துக்கொண்டு இந்த கொலையில் வட மாநில கூலிப்படை சம்பந்தப்பட்டிருக்கலாமோ..? என்ற கோணத்தில் விசாரணையை துவக்கியுள்ள போலீசாருக்கு "லால்" எனும் பெயர் சந்தேகத்தினை கிளப்ப, அந்த "லால்" வட மாநில கூலிப்படை வாலிபனாக இருக்கலாம்? என்ற ரீதியிலும் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர் என்கின்றது உளவுத் தகவல்.