Skip to main content

நாஞ்சில் சம்பத் உழைப்பை மதிக்கிறோம்: தங்கத்தமிழ்ச்செல்வன் பேட்டி

Published on 19/03/2018 | Edited on 19/03/2018
thanga tamilselvan


அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த நாஞ்சில் சம்பத் நல்ல மனிதர், வாய்ப்பு கிடைத்தால் அவரிடம் பேசி பார்ப்போம் என்று கூறியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கைப் பரப்பு செயலாளர் தங்கத்தமிழ் செல்வன்.
 

நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:
 

தினகரனுக்கு குக்கர் சின்னம் மற்றும் பெயர் ஒதுக்கியதை எதிர்த்து செம்மலை மற்றும் மதுசூதனன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதே?
 

அதிமுகவையும், இரட்டை இலையையும் கேட்டோம். கொடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் ஆதரவோடும், மத்திய அரசின் ஆதரவோடும் வாங்கிக்கொண்டார்கள். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றோம். எங்களுக்குத்தான் தொண்டர்கள் ஆதரவும், மக்களின் ஆதரவும் இருக்கிறது என்றோம். அதையும் நம்பவில்லை. அதிமுக, இரட்டை இலை விவகாரம் கோர்ட்டில் உள்ளது. அதுவரை தேர்தலை சந்திக்க ஒரு கட்சியும், சின்னமும் வேண்டும் என்று கோர்ட்டுக்கு சென்றோம். டெல்லி ஐகோர்ட் எங்கள் கோரிக்கையை ஏற்றது. அதன்படி ஆர்.கே.நகருக்கு ஒதுக்கிய குக்கர் சின்னத்தையும், ஒரு அமைப்பையும் வைத்தோம். இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன. இது ஒரு தவறான அணுகுமுறை. 

 

semmalai Madhusudhanan.jpg


சுப்ரீம் கோர்ட்டுக்கு நாங்கள் போக வேண்டிய அவசியம் இல்லை. சுப்ரீம் கோர்ட்டே அவர்கள் விருப்பமான பெயர், சின்னத்தை வைத்துள்ளார்கள். விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிடும். அதிமுக பிளவுபட்டபோது, புரட்சித் தலைவி அம்மா அணியில் ஓ.பி.எஸ். இருந்தார். அதிமுக அம்மா அணி என நாங்கள் இருந்தோம். 6 மாதம் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. அதேபோல எங்கள் அமைப்பையும் இப்போது ஏற்றுக்கொண்டுள்ளது. அதிமுக, இரட்டை இலை வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அது முடிவுக்கு வரும் வரை இந்த அமைப்பில் செயல்படுவோம். இந்த விசயம் தெரிந்தும் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார்கள். ஏனென்றால் எங்களை பார்த்து அவர்களுக்கு பயம். 
 

கொடியில் ஜெயலலிதா படத்தை வைத்துள்ளார்கள், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் எங்கள் பக்கம் வந்துவிடுவார்கள், டிடிவி தினகரன் பக்கம் ஆதரவு கூடிவிடும் என்பதை புரிந்துகொண்டு, அம்மா பெயர் இருக்கக் கூடாது, ஜெயலலிதா படம் இருக்கக் கூடாது என்று மாற்ற முயற்சிக்கிறார்கள். நாங்கள் கோர்ட்டில் முறையிட்டு, கோர்ட்டின் உத்தரவைப் பெற்றுதான் பெயர் எங்கள் அணியை வழிநடத்தி செல்கிறோம். தனிப்பட்ட முறையில் எதுவும் செய்யவில்லை. நிச்சயமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தையும், குக்கர் சின்னத்தையும் மாற்ற முடியாது. 

 

nanjil sambath 340.jpg


 

தினகரனை சிகரத்திற்குக் கொண்டுச்செல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் என்னை பார்த்தார்கள்.என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை, அதனால்தான் கவலையோடு வெளியேறினேன் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளாரே?
 

நானும், வெற்றிவேலும் அவருக்கு பக்க பலமாக இருந்தோம். பல மேடைகளில் பேசியிருக்கிறார். அந்த உழைப்பை மதிக்கணும். என்ன காரணத்திற்காக போனார் என்று தெரியவில்லை. பேசி சமாதானம் ஆகிவிடலாம் என்பதே எங்கள் கருத்து. நாஞ்சில் சம்பத் நல்ல மனிதர். வாய்ப்பு இருந்தால் பேசி பார்ப்போம். 
 

கட்சியின் அடிப்படை விதியை யார் மீறினாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது. கே.சி. பழனிசாமியின் நீக்கத்திற்கு பின்னணியில் யாரும் இல்லை. கட்சியின் விதியை மீறி பேசினால் மாலையா போட முடியும்? என்று ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

 

jayakumar450.jpg


பாராளுமன்றத்தில் அதிமுகவை, பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சொல்லவில்லை. இயற்கையாகவே ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தெலுங்கு தேச எம்பிக்கள் விலகியுள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருகிறார்கள். அந்த தீர்மானம் கொண்டுவரும்போது அதனை ஆதரியுங்கள் என்று அனைவரும் சொல்கிறார்கள். இதில் தவறில்லையே. காவிரி மேலாண்மை வாரியம் கொண்டுவர வேண்டும் என்பதுதான் தற்போது தமிழ்நாட்டின் முக்கியமான பிரச்சனை. மொத்தமாக அனைத்து எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்துவிட்டு யாரும் தேர்தலை சந்திக்கக் கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த பிறகு தேர்தலை சந்திப்போம் என்று சொல்லுங்கள். அதை ஏன் சொல்லவில்லை. கர்நாடக தேர்தல்வரை காவிரி மேலாண்மை வாரியம் பற்றி மத்திய அரசு கண்டுகொள்ளாது. அதிமுக அரசும் எதிர்க்க மாட்டார்கள். பயப்படுவார்கள். அதை துணிச்சலாக சொன்ன கே.சி.பழனிசாமியை பாராட்டுகிறேன்.