Skip to main content

"கமல், ஒருத்தரை பார்த்த உடனே ரெண்டு விஷயத்தை கண்டுபிடிச்சுருவார்!" -முரளி அப்பாஸ் சிறப்பு பேட்டி

Published on 07/11/2020 | Edited on 07/11/2020
Murali Abbas

 

 

முரளி அப்பாஸ்... கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் குரலாக தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருப்பவர். கமல் மனதில் நினைப்பதை செய்தியாக்குபவர். தனது சினிமா இயக்குனர் அடையாளத்தை விடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டராக பங்காற்றி வருபவர். கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு பரபரப்பாக இருந்த மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸை அழைத்து சிறிது நேரம் பேசினோம்.  

 

கமல்ஹாசனை நடிகராக சந்தித்தீர்களா? கட்சி தலைவராக சந்தித்தீர்களா? முதல் சந்திப்பு எப்போது?

 

1983ல் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நான், அசிஸ்டெண்ட் டைரக்டர், டைரக்டராக இருந்திருக்கிறேன். 2018 வரையில் கமல்ஹாசனை சந்தித்ததில்லை. நான் ஒரு சினிமா இயக்குநர் என்ற முறையில் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்வது வழக்கம். பெரும்பாலும் நான் பங்கேற்கும் விவாதம் அரசியல் சார்ந்தவையாக சென்றது. நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா என்ற விவாதத்தில் வரலாம் என்று பேச ஆரம்பித்தேன். அதனுடைய நீட்சியாக ம.நீ.ம. கட்சியில் இணைந்தேன்.

 

ம.நீ.ம. கட்சி 21.பிப்.2018ல் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 15ஆம் தேதி கமலை சந்தித்து இந்த கட்சியில் இணைந்தேன். ஆறு நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்து கட்சியில் இணைந்தேன். ஏறத்தாழ 30 ஆண்டுகள் சினிமாவில் இருந்தும் அவரை நான் பார்த்தது இல்லை. ஒரு பொதுநிகழ்ச்சியில் கூட நான் பார்த்தது இல்லை. நான் முதல் முதலில் பார்த்தது 15.பிப்.2018ல்தான். எங்கள் தலைவருடன் சேர்ந்து பயணிக்கத்தான் சென்னைக்கே வந்தேன் என்று இப்பத்தான் தெரிகிறது.

 

கமலுடனான உங்கள் மனதுக்கு நெருக்கமான தருணம் என்று எதை சொல்வீர்கள்?

 

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதால் அதனை தொடர்ந்து கமல் கவனிப்பார். அரசியலில் தெளிவு இருக்கிறது என்பதால் என்னை செய்தித் தொடர்பாளராக நியமித்தார். செய்தித் தொடர்பாளர் என்பது கட்சியின் குரல் போன்றது. அதனால் தலைவரின் கொள்கையை கவனமாக கையாள வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அத்தகைய பொறுப்பை உடனே கொடுத்தது என் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை புரிந்து கொண்டேன். அவர் ஏதாவது செய்தி சொல்லிவிட்டு, அதைப் பற்றிய விவாதம் வந்தால் அதை இப்படி சொல்லுங்கள் என்று என்னிடம் இதுவரை சொன்னதே இல்லை. நானும் கேட்டுக்கொண்டதும் இல்லை. அவர் சொன்னதை புரிந்துகொண்டு விவாதங்களில் பங்கேற்பேன்.

 

தினமும் விவாதங்களுக்கு போறீங்களே? உங்க தலைவர் உங்களை பாராட்டுவாரா? என என் மனைவி என்னிடம் ஒரு முறை கேட்டார். பாராட்டியதில்லை. ஆனால் ஏதாவது தவறாக பேசியிருந்தால் ஐந்து நிமிடத்தில் கூப்பிட்டிருப்பார். இதை தவிர்த்திருக்கலாம், அப்படி சொல்லியிருக்கலாம் என்று மற்றவர்களுக்கு சொல்லியதை கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த இரண்டரை வருடத்தில் என்னை அப்படி கூப்பிட்டு சொன்னதில்லை. இதைவிட பெரிய பாராட்டு இல்லை. பிப்ரவரியில் கட்சி தொடங்கப்பட்டது, செப்டம்பரில் இந்த பதவியை எனக்கு கொடுத்தார். மிகச்சிறந்த தேர்வாளர் கமல். 40 வருடத்தில் சினிமாத்துறையில் பல அனுபவங்களை பெற்றவர். ஒரு மனிதரை சீக்கிரம் எடை போட்டுவிடுவார். அவரது பார்வையில் இரண்டு விசயங்களை பிடித்துவிடுவார். ஒன்று திறமை. இன்னொன்று நேர்மை. திறமை கம்மியாக இருந்தால் கூட அதனை தயார் செய்வார். ஆனால் நேர்மை கம்மியாக இருந்தால் அவரிடம் ஒட்ட முடியாது. ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

 

இப்போது உள்ள அரசியல் சூழலில் எந்த நம்பிக்கையில் அவருடன் பயணிக்கிறீர்கள்?

 

நம்பிக்கை எது சார்ந்தது என்பதை பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் நான் சினிமாத்துறையில் நுழைந்ததில் இருந்து அரசியலை கவனித்து வருகிறேன். அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்தபோது அரசியல் பேசிக்கொண்டிருப்பேன். அந்த அரசியல் இன்று பயன்படுகிறது. நான் பேசிய அரசியலை பார்த்த எனது நண்பர்கள், இதைத் தவிர வேறு அரசியல் கட்சிக்கு நான் போயிருந்தால் நிச்சயமாக என்னை கேலி செய்திருப்பார்கள், சிரித்திருப்பார்கள். இங்க வந்ததால்தான் என்னை கௌரவமாக பார்த்தார்கள்.

 

நான் எனது கட்சியை விரும்புகிறேன். விரும்புவதற்கு காரணம், ஐம்பது ஆண்டு அரசியலில் இருந்து வேறொரு அரசியல் தமிழ்நாட்டுக்கு வரவேண்டுமென்றால் ஒரே கதவு கமல்தான். 67க்குப் பிறகு திமுக அரசியலை மாற்றியது. தற்போது தமிழகம் மீண்டும் மாற வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டது. ஏனென்றால் அது மிகப்பெரிய பழையதாகப் போய்விட்டது.

 

அரசியல் மாற்றம் புதுப்பிக்கப்பட வேண்டும். அதற்கு கமல்தான் வரவேண்டும். வருவாரா வரமாட்டாரா என்ற கேள்வியை நான் பார்ப்பது இல்லை. வரவைக்கணும், வந்தாகணும். எவ்வளவு சாதகமான அம்சங்கள் இருக்கிறது, பாதகமான அம்சங்கள் இருக்கிறது என்று எங்களுக்கு தெரியும். பாதகமான அம்சங்களை பார்த்து நாங்கள் தளரவில்லை. அதனை உடைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் தலைவர் சொல்லுவார் 'என்னுடைய மிச்ச காலம் மக்களுக்காக' என்று. நான் தெளிவாக சொல்கிறேன், என்னுடைய மிச்ச காலம் அவருக்காக பிரச்சாரம் செய்வதுதான். நான் என்னுடைய அனுபவத்தில் இவ்வளவு நேர்மையான மனிதரை சந்தித்தது இல்லை. தைரியமான மனிதரை பார்த்திருக்கலாம், திறமையான மனிதரை பார்த்திருக்கலாம். இந்த மூன்றையும் ஒன்றாக நான் அவரிடம் பார்க்கிறேன்.

 

இந்த நேர்மை நம்ம அரசியலுக்கு தேவைப்படுகிறது. இந்த திறமை தமிழ்நாட்டுக்கு தேவைப்படுகிறது. இந்த தைரியம் இன்று ரொம்ப அவசியமாக தேவைப்படுகிறது. பிராந்திய மாநிலத்தில் இருந்து சென்ட்ரலில் மோதி காரியம் சாதிக்க வேண்டுமென்றால் தைரியம் தேவைப்படுகிறது. பயன்படுத்திக்கொண்டால் தமிழ்நாட்டுக்கு அதிர்ஷ்டம். பயன்படுத்தாமல் விட்டால் துரதிருஷ்டம். இந்த கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதே எங்களது நோக்கம். அதனைத் தவிர வேறு எதுவும் நாங்கள் சிந்திக்கவில்லை.