Skip to main content

மதிமுகவின் ஒரே வேட்பாளர் எப்படிப்பட்டவர்?  

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

கடந்த வாரத்தில் திமுக கூட்டணியின் தேர்தல் பங்கீடு குறித்த அறிவிப்பு வெளிவந்தது. மதிமுகவுடன் 2,3 சுற்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பும் வழங்கப்படும் என்று திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டது.
 

ganeshamoorthy



அறிவிப்புக்கு முன்பு வரை, மதிமுக தொண்டர்கள், அரசியல் பார்வையாளர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் பல கணிப்புகள் வந்தன. விருதுநகர், திருச்சி, ஈரோடு, காஞ்சிபுரம் தொகுதிகள் கேட்கப்பட்டிருப்பதாகவும், இரண்டு உறுதி என்பதாகவும் இருந்தன அந்த கணிப்புகள். இறுதியில் மக்களவை தேர்தலில் ஒரு தொகுதி என்று அறிவிக்கப்பட்டது. கணிப்புகளிலும் சரி, கட்சியிலும் சரி, 'இவர் தேர்தலில் போட்டியிட வேண்டும்' என்று அனைவராலும் வைகோவுக்கு அடுத்ததாக எதிர்பார்க்கப்பட்ட பெயர் கணேசமூர்த்தி. ஆம், ஈரோட்டின் திராவிட அரசியலில் நெடுநாளாக அங்கம் வகிக்கும் முகம்.        
 

கணேசமூர்த்தி மதிமுகவின் வேட்பாளராக ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் மதிமுகவின் ஒரே வேட்பாளர். இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ள இவர் ஈரோடு மாவட்டம் கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர். இளங்கலை பொருளியல் படிப்பை முடித்துவிட்ட சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். 1984ல் திமுகவின் ஈரோடு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.
 

பின் 1994ல் திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது அவருடன் வெளியே வந்தார். பின் மதிமுக உதயமானதும், மதிமுகவின் முக்கியமானவர்களில் இவரும் ஒருவரானார். 1994ம் ஆண்டிலிருந்து மதிமுகவின் ஈரோடு மாவட்டச் செயலாளராக இருந்தார். அதன்பின் அக்கட்சியின் மாநில பொருளாளராக தேர்வானார். தற்போதும் அவர் அவ்வாறே தொடர்கிறார்.
 

கணேசமூர்த்தியின் தேர்தல் பயணம் 1998ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அந்தாண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் பழனி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். 2009ம் ஆண்டு ஈரோடு மக்களவைத் தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற ஒரேயொரு மதிமுக வேட்பாளர் இவர்தான். 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் ஈரோடு தொகுதியில் நின்றார். ஆனால் இந்தமுறை அவர் வெற்றி பெறவில்லை. தற்போது மீண்டும் ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறார். 
 

எந்த நேரமும் யாரும் சந்திக்கக் கூடிய எளிமையும் தொகுதி நிதியை முழுதாகப் பயன்படுத்தினார் என்ற பெயரும் நாடாளுமன்றத்தில் திறன்பட செயல்பட்டார் என்ற நன்மதிப்பும் கணேசமூர்த்திக்கு சாதகமாக இருப்பவை. திமுக கூட்டணியின் ஈரோடு தொகுதி வேட்பாளர், மதிமுகவின் ஒரே வேட்பாளர் வென்று மீண்டும் நாடாளுமன்றம் செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.