தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை பாய்வது ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில்தான் என்கிறார்கள் பா.ஜ.க.வினர். இந்தத் திட்டத்தை சரிவரச் செய்யவில்லையென நிர்மலா மீதும் தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் மீதும் பாய்ந்து கடித்துக் குதறியிருக்கிறார் மோடி என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள். மோடி 75 வயதை நெருங்குகிறார். வயதைக் காரணம் காட்டித்தான் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மோடிக்கு சீனியர்களான தலைவர்களை ஆர்.எஸ்.எஸ். வீட்டுக்கு அனுப்பி வைத்தது. ஆர்.எஸ்.எஸ். நேரடியாக அரசியலில் ஈடுபடாது என வல்லபபாய் படேலுக்கு ஆர்.எஸ்.எஸ். கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில் தான் காந்தி படுகொலையில் சம்பந்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். மீதான தடை அப்போது நீக்கப்பட்டது. அதன் பிறகு ஆர்.எஸ்.எஸ். பல்வேறு பெயர்களில் இயங்கிவந்தாலும் பாரதிய ஜனதா கட்சி என்கிற ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல் மாடல்தான் வெற்றிகரமான மாடல். அதில் நரேந்திர மோடிதான் மிகவும் வெற்றிகரமான தலைவர்.
மூன்றுமுறை பிரதமரான மோடியை வீட்டுக்கு அனுப்ப நினைக்கும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.விற்கு புதிய தலைவரை நியமிக்க நினைக்கிறது. ஆர்.எஸ்.எஸ். நியமிக்கும் தலைவர் மோடியை வீட்டுக்குப் போகச் சொன்னால் மோடி போய்த்தான் தீர வேண்டும். அதைத் தடுக்கவே பா.ஜ.க.விற்கு புதிய தலைவரை நியமிக்காமல் தடுக்கிறார் மோடி. மொத்தமுள்ள இந்திய மாநிலங்களில் பாதிக்கும் மேல் மாநிலத் தலைவர்கள் நியமிக்கப்பட்டால் அகில இந்தியத் தலைவர் நியமிக் கப்பட வேண்டும் என்பது பா.ஜ.க.வின் அமைப்புச் சட்டம். தேர்தல் கமிஷனில் பதிவான இந்த அமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதித்து மாநிலத் தலைவர்கள் பதவிகள் நியமிக்காமல் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் தேர்தலே நடத்தாமல் வைத்திருக்கிறார்கள். தமிழகத்திலும் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாவட்டத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாநில நிர்வாகிகள் கூட்டம் நடத்தி தற்போதைய மாநிலத் தலைவருக்குப் பதிலாக புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
பெரியாரின் சிந்தனையால் உரமேறி யிருக்கும் தமிழகம் ஆர்.எஸ்.எஸ்.ஸை பொறுத்தவரை மிக முக்கியமான ஒரு மாநிலம். இங்கு இந்தி எதிர்ப்பு ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான செய்கைகள் என தி.மு.க. இந்துத்துவாவுக்கு எதிராகத் தீவிரமாகக் களம் காண்கிறது. அதை முறியடிக்க டாஸ்மாக் ரெய்டு போன்ற ஊழல் விசயங்களை பா.ஜ.க. கிளப்புகிறது. சமீபத்தில் நடந்த டாஸ்மாக் ரெய்டில் அமலாக்கத்துறையால் கடைகளில் விற்கப்படும் பாட்டில்களில் நடைபெறும் 10 ரூபாய் 30 ரூபாய் சில்லறை ஊழலைத் தவிர பெரிதாக ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. சத்தீஷ்கர், டெல்லி போன்ற மாநிலங்களில் முதலமைச்சர்களுக்கு எதிராக கண்டுபிடித்தது போல் இங்கு பெரிதாக ஒன்றும் கிடைக்க வில்லை. தொடர்ந்து ஊழல் விசயத்தை தி.மு.க.விற்கு எதிராகக் கொண்டுசெல்ல வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கட்டளை யை ஏற்று தமிழக அரசியல் கட்சிகளான விஜய்யின் த.வெ.க., எடப்பாடியின் அ.தி.மு.க., பா.ஜ.க. மா.த. ஆகியோர் ஒன்றிணைந்து பெரிதாக டாஸ்மாக் ஊழலைப்பற்றி செய்திகள் பரப்பினாலும் அது எடுபடவில்லை.
“நீங்கள் இதுவரை பதிந்த வழக்குகளில் எத்தனை வழக்குகளை நிரூபித்துள்ளீர்கள்” என அமலாக்கத்துறையை நோக்கி கேள்வி கேட்ட சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில் இந்த ரெய்டுகள் எல்லாம் நிற்காது. இது தி.மு.க. அரசுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு உதவுமே தவிர சட்ட ரீதியாக எதுவும் செய்ய முடியாது என ஆர்.எஸ்.எஸ். சுட்டிக்காட்டுவதால் பிரதமர் மோடி அமலாக்கத்துறை மீது கடுப்பில் இருக்கின்றார். செந்தில்பாலாஜி மீதான தனிப்பட்ட பகையினால் டாஸ்மாக் ரெய்டு விசயத்தை முன்னெடுக்கச் செய்தார் பா.ஜ.க. மா.த. இதற்கு முன்பு செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டபோது டாஸ்மாக்கில் இதுபோல ரெய்டு நடத்தவில்லை. கைதுக்குப் பிறகு கணக்கு வழக்கு விவகாரங்களில் எச்சரிக்கையாக இருந்த பாலாஜி, சிறு துரும்பைக்கூட அமலாக்கத்துறைக்கு விட்டுவைக்கவில்லை. மணல் விவகாரத்தில் நாலாயிரம் கோடி ஊழல் என ஏழு மாவட்ட ஆட்சித் தலைவர்களை கோர்ட்டுக்கு அழைத்த அமலாக்கத்துறையால், அந்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் உட்பட யாரையும் கைது செய்ய முடியவில்லை. அதைவிட நாலு மடங்கு குறைவாக ஆயிரம் கோடி முறைகேட்டை கண்டுபிடித்தோம், சட்ட விரோத பணப்பரிமாற்ற நெட்வொர்க் ஒன்று டாஸ்மாக்கில் இறங்கி தி.மு.க.விற்கு பணம் கொடுக்கிறது எனச் சொல்லும் அமலாக்கத்துறை, எவ்வளவு பணம் எந்த வங்கியிலிருந்து யாருக்குச் சென்றது என்பது பற்றிய விவரங்களைத் திரட்ட முடியவில்லை.
வெறுமனே 40000 கோடி ஊழல் என பா.ஜ.க. மா.த., எடப்பாடி, விஜய் ஆகியோர் கத்துவதுதான் கேட்கிறது. இதனால் டென்ஷனான மோடி, பா.ஜ.க. தலைமை யிடம் ‘நிர்மலாவின் அமலாக்கத்துறை சரியாக செயல்படவில்லை’ என எகிறியிருக்கிறார். மோடியின் இந்த எகிறல் பா.ஜ.க. மா.த.வுக்கும் பாஸ் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க. தலைமையில் நிலவும் தலைவர் பதவி குழப்பத்தால் பதவி நீட்டிப்பு பெற்றி ருக்கும் மா.த., செங்கோட்டையன் விவகாரத்தை வைத்து அ.தி.மு.க.வை மிரட்டிவந்த நிலையில்... அவருக்கு டாஸ்மாக் விவகாரத்தில் பல்லிளித்த அமலாக்கத்துறை பற்றிய செய்தியும், அதில் மோடி அடைந்த டென்ஷன் போன்றவையும் பேரிடிகளாக வந்து இறங்கியுள்ளது. அதைச் சமாளிக்க போராட்டம், ஆர்ப்பாட்டம் என களத்தில் குதித்திருக்கிறார் பா.ஜ.க. மா.த. என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள்.