கடன் சுமையும், நிதி நெருக்கடியும் கடுமையாகத் தாக்கும் சூழலிலும் "எல்லார்க்கும் எல்லாம்' எனும் தலைப்பில் வளர்ச்சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. நடப்பு நிதி ஆண்டுக்கான (2025-26) பட்ஜெட்தான், சட்டசபை தேர்தலுக்கு முந்தைய தி.மு.க. அரசின் முழுமையான பட்ஜெட் என்பதால், இதன் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறியதா?
இந்த பட்ஜெட் சொல்வது என்ன?
தமிழ்நாட்டின் மொத்த வருவாய் 3,31,569 கோடியாகவும், வருவாய் செலவினங்கள் 3,73,204 கோடியாகவும் பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டிருக் கிறது. அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் வரு வாய் பற்றாக்குறை 41,635 கோடியாக இருக்கும் என பட்ஜெட் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இதில் மாநிலத்தின் சொந்த வருவாய் என்பது 75.3 சதவீதமாக இருக்கிறது. மீதமுள்ள 24.7 சதவீத வருவாய் மத்திய அரசின் வரிப் பகிர்வுகள் மற்றும் மானியங்கள் மூலம் கிடைக்கின்றன.
அதாவது, ரூபாயாக இதனை கணக்கிட்டால் மாநிலத்தின் வருவாயில் வரிகள் மூலமாக 2,20,895 கோடியும், வரி அல்லாத இனங்கள் மூலம் 28,818 கோடியும், மத்திய அரசின் நிதிப் பகிர்வின் மூலம் 58,022 கோடியும், மானியங்கள் வழியாக 23,834 கோடியும் கிடைக்கிறது.
ஆனால், வருவாய்க்கும் செலவினங்களுக்கும் இடைவெளி இருக்கிறது. அதாவது வருவாயைவிட 41,635 கோடி ரூபாய் கூடுதல் செலவினங்களாக இருக்கிறது. வருவாயைவிட செலவினங்கள் கூடுதலாக இருப்பதற்கு காரணம், உதவித் தொகைகளுக்கும், மானியங்களுக்கும் இலவசங்களுக்கும், அரசு ஊழியர்களின் சம்பளத்திற்குமே மொத்த வருவாயின் பெரும்பகுதி செலவிடப்படுவதுதான். இதனை அரசின் நிர்வாகக் குறையாக விமர்சிக்கின்றனர்.
அதேசமயம், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் தமிழகத்தில், அவர்களின் வாழ்வாதாரத்திற்காக உதவித் தொகைகள், இலவசங்கள் கொடுப்பது தவறானது கிடையாது. இதற்காக ஏற்படும் செலவினங்களை சுமையாகக் கருதக்கூடாது. மக்களுக்கான அரசு என்பது ஏழைகளைப்பற்றி அதிகம் கவலைப்படவேண்டும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
குறிப்பாக, தி.மு.க. அரசுக்கு இருக்கும் வருவாய் பற்றாக்குறையையும், நிதி நெருக்கடிகளையும் ஆராய்ந்தால், இந்த பட்ஜெட் சிறந்த பட்ஜெட்தான். முடிந்தளவுக்கு தமிழகத்தின் ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத் தினரையும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை யும் மனதில் நிறுத்தி, பட்ஜெட் தயாரிக்கப்பட் டுள்ளது. இதற்காக பொருளாதார ஆய்வறிக் கையை உருவாக்கி, சிறந்த பட்ஜெட்டை தயாரிக்க உழைத்திருக்கிறது தி.மு.க. அரசு.
எந்தெந்த திட்டங்கள் மக்களிடம் தாக்கத்தையும், நன்மையையும் ஏற்படுத்தி யிருக்கிறதோ அவைகளை மேலும் வலிமை யாக்கியிருக்கிறார்கள். அதாவது, மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன், காலை உணவு, மகளிர் விடியல் பேருந்து, தோழியர்கள் விடுதி உள்ளிட்ட பல திட்டங்கள் விரிவுபடுத் தப்பட்டுள்ளன. இத்தகைய விரிவாக்கம் அவசிய மானது. மகளிர் விடியல் பயணம் திட்டத்திற் காக மட்டும் 3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், தமிழக மாவட்டங்களுக்கிடையே சமமான வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதையும் கவனித்து மாவட்ட வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப் பட்டுள்ளது என்கின்றனர் பொருளாதார வல்லுநர் கள். மேலும், கல்வி, சுகாதாரம், உள் கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை ஆரோக்கியமானதாக வரவேற்கின்றனர். மகளிர் உரிமைத் தொகை பெறுவதில் அனைத்து பெண்களும் பெறும்வகையில் உறுதி செய்திருப்பது, 10 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1 சதவீத கட்டணம் குறைப்பு, பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தீர்க்க அரசே இலவச மருத்துவம் தருதல், போக்குவரத்து நெருக்கடிகளை ஒழுங்குப் படுத்தும் பணிகளில் திருநங்கைகளை ஈடுபடுத்துதல், மாணவ மாணவிகளிடம் பரவிவரும் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுத்து, அவர்களை வழிநடத்த கவுன்சிலர் கள் நியமனம், பெற்றோர் இல்லாத குழந்தைகளை பராமரிக்க தாயுமானவன் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டத்திற்கு 74 கோடி மானிய நிதி ஒதுக்கீடு, ஆதரவற் றோர்களுக்கு அன்புச்சோலை திட்டம், சிறு, குறு தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்கவும், வளர்த்தெடுக்கவும் 2.5 லட்சம் கோடி கடனுதவி, இந்த ஆண்டின் இறுதிக்குள் 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், அரசு கல்லூரிகளில் 15,000 மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரித்தல் உள்ளிட்ட பல விசயங்கள் வரவேற்கப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேசமயம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்கிற தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லாததால், 13 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களிடம் அதிருப்தியை அதிகரிக்கச் செய்திருக் கிறது. சரண் விடுப்பில் 15 நாட்களுக்கான ஊதியத்தை பெறும் அறிவிப்பை செய்தாலும், அந்த ஒரு கோரிக்கை மட்டுமே அரசு ஊழியர் களை திருப்திப்படுத்தவில்லை. அதேபோல, மாதாந்திர மின் கட்டணக் கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்கிற அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் வரவில்லை. இது நடுத்தர மக்களிடம் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
இதற்கிடையே, பட்ஜெட்டில் 80 சதவீதம் ஆரோக்கியமாக இருந்தாலும், யாருக்கும் எதுவும் இல்லை என்கிற விமர்சனங்களை அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. கட்சிகள் முன் வைக்கின்றன. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் நிழல் நிதி அறிக்கை வெளியிடும் பா.ம.க. நிறு வனர் டாக்டர் ராமதாஸ், ‘’தமிழ்நாட்டில் சமூக நீதியை நிலை நாட்ட சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. வழக்கம் போல மத்திய அரசை கைகாட்டி ஒதுங்கிக் கொண்டது தமிழக அரசு. இது, சமூகநீதிக்கு தி.மு.க. அரசு செய்யும் பெரும் துரோகம். பள்ளிக் கல்வித்துறை மிகவும் முக்கியமானது. மொத்த உற்பத்தி மதிப்பில் இத்துறைக்கு 6 சதவீத நிதி அதாவது 2.14 லட்சம் கோடி ஒதுக் கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 46,767 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப் பட்டிருக்கிறது. கடந்த காலங்களை ஒப்பிடுகிற போது இந்த முறை இத்துறைக்கு மிகவும் குறைவாகவே நிதி ஒதுக்கியிருக்கிறார்கள்.
தி.மு.க. ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரிகூட தொடங்கப்பட வில்லை. இது பெரும் ஏமாற்றம். 100 நாள் வேலை திட்டத்தின் நாட்கள் 150 ஆக உயர்த்தப் படும் என சொல்லப்பட்ட நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடு இல்லை. மாதந்தோறும் மின் கணக்கீடு எடுப்பதும் சொல்லப்படவில்லை. அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர் களுக்கு மடிக்கணினி அல்லது கையடக்க கணினி வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இந்த ஆட்சி முடிய இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், இது வெற்று அறிவிப்புதான்'' என்று குற்றம்சாட்டுகிறார் டாக்டர் ராமதாஸ்.
பொருளாதார மற்றும் தொழில்துறை வல்லுநர்களிடமும் இதே கருத்து நிலைகொண்டிருக்கிறது. ஆனால், இதனை மறுத்துப் பேசியுள்ள நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., "மாநில அரசு வாங்கும் கடன்களும், வருவாய் பற்றாகுறையும் ஒன்றிய அரசு விதித்துள்ள வரம்பிற்குள் இருக்கின்றன''’என்று விளக்கமளிக்கிறார்.
இந்த சூழலில், பட்ஜெட் குறித்து விரிவாகப் பேசியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், ” "முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் உள்ள பொருளாதார அறிஞர்கள் எஸ்தர் டப்ளோ, ரகுராம்ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், நாராயணன் ஆகியோரின் ஆலோசனைகள், அடித்தட்டு மக்களின் தேவைகள், மற்ற நாடுகள், மாநில மக்களிடம் பிரபலமாக உள்ள திட்டங்களை ஆய்வு செய்தல் ஆகியவற்றைக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டது. இதற்காக தலைமைச் செயலகத்தில் பல நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அதிகாரிகள், அமைச்சர்களிடம் விவாதித்தனர். பட்ஜெட் பற்றி நான் சொல்வதை விட பிரபல பத்திரி கைகளே பாராட்டியுள்ளன. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களில் வன்மம் மட்டுமே தெரிகிறது.
அரசு சிறப்பாக செயல்பட்டதற்கு சில ஆதாரங்களைத் தருகிறேன். கடந்த 2011-16 வரை தமிழ்நாட்டின் கடன் வளர்ச்சி 108 சதவீதமாக இருந்தது. 2016-21 காலக் கட்டத்தில் 128 சதவீதமாக அதிகரித்தது. திராவிட மாடல் அரசு பதவியேற்றதிலிருந்து தற்போதுவரை அதனை 93 சதவீதமாகக் குறைத்துள்ளோம். கடன் வாங்காத அரசு இல்லை. ஆனால், அதனை ஆக்கப்பூர்வ மாக செலவிடுகிறோமா? என்பதுதான் முக்கியம். அந்த வகையில் எதிர்கால தலைமுறையினரை கருத்தில்கொண்டு முதலீடு செய்துள்ளோம். தமிழ்நாட்டின் கடன் கட்டுக்குள் இருக்கிறது. மாநிலத்தின் நிதிக்கும் நீதிக்கும் கடுமையாகப் போராடவேண்டியதிருக்கிறது. 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு 1 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சியை எட்டி அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை கொண்டுவரும் வரையில் எனக்கு ஓய்வே கிடையாது''’என்கிறார் மிக அழுத்தமாக. பொது பட்ஜெட் தாக்கலுக்கு மறுநாள் விவசாயத்திற்கான தனி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். இந்த பட்ஜெட்டிற்கும் வரவேற்பும் எதிர்ப்பும் சமமாகவே எதிரொலிக்கின்றன.
இந்த நிலையில், "பட்ஜெட் மீதான விவாதம் திங்கள்கிழமை முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது. இதனையடுத்து ஏப்ரல் 30வரை துறைரீதியான மானியக் கோரிக்கை மீது விவாதமும் அதனை நிறைவேற்றுவதும் நடக்க வுள்ளன. அந்த வகையில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி அமளியில் ஈடுபடத்திட்டமிட்டுள் ளன. அதனை எப்படி சமாளிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தேவைப்படும் இடங்களில் எதிர்க்கட்சிகளுக்கு நேரடியாக பதிலடி தர முதல்வரும் தயாராகியிருக்கிறார். இதனால், இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சுவாரஸ்யங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது' என்கின்றனர்.
_____________
இறுதி சுற்று
வாக்கெடுப்பு தோல்வி!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் 17-ந் தேதி தொடங்கியது. சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்க வலியுறுத்தி அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க. கொண்டு வந்தது. இது குறித்து அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களுடன், பேரவை துவங்கு வதற்கு முன்பு தனது அறையில் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்திருந்தார். இதனை சீனியர்கள் ரசிக்கவில்லை. பேரவை துவங்கியதும் கேள்வி பேரவைக்குள்ளேயே செங்கோட் டையனிடம், "அ.தி.மு.க. கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண் டும். நமக் குள் இருக்கும் உள் கட்சி பிரச்ச னைகளை இங்கு பெரிதுப்படுத்தா தீர்கள்" என்று கே.பி.முனுசாமி, கடம்பூர் ராஜு, தங்கமணி, வேலுமணி ஆகியோர் செங்கோட்டையனை கேட்டுக் கொண்டனர். இந்த சூழலில், கேள்வி நேரம் முடிந்ததும் அ.தி. மு.க. துணைத்தலைவர் உதயக் குமார் கொடுத்த நம்பிக்கை யில்லா தீர்மானம் எடுத்துக்கொள் ளப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் இதனை ஆதரித்து எழுந்து நின்றதால். தீர்மானம் விவாதத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இதை யடுத்து, அப்பாவுவிற்கு எதிராக கடுமையான வாதத்தை முன்வைத்துப் பேசினார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும், சபாநாயகருக்கு ஆதரவாக பேசின. முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, " தற்போதைய சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படுபவர். ஜனநாயக உரிமைகளை மதிப்பவர். அ.தி. மு.க. ஆட்சியில் சபாநாயகர்கள் எப்படி செயல்பட்டனர் என்பதை மக்கள் அறிவார்கள்'' என்றார்.
இறுதியில், தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அதில், சபாநாயகர் எதி ரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. குரல் வாக் கெடுப்பு தோல்வியடைந்ததால் டிவிசன் முறை வாக்கெடுப்பை நடத்த அ.தி.மு.க. வலியுறுத்தி யது. இதிலும், சபாநாயகருக்கு ஆதரவு அதிகம் இருந்ததால் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.