Skip to main content

"சிஏஏ மற்றும் என்ஆர்சி இரண்டும் ஒரே அம்மா பெற்ற இரட்டை குழந்தைகள்.." - புதுக்கோட்டை அப்துல்லா அதிரடி பேட்டி!

Published on 23/12/2019 | Edited on 24/12/2019

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், திமுக-வை சேர்ந்த புதுக்கோட்டை அப்துல்லாவிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்கிறது. இதை திமுக உள்ளிட்ட கூட்டணிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இந்தியாவில் இருக்கின்ற முஸ்லிம்களுக்கு இதனால், எந்த பாதிப்பு ஏற்பாடாது என்றும் என்று மத்திய அரசு தெரிவிக்கிறார்கள். இதை பற்றிய உங்களின் கருத்து என்ன?  

இந்த சட்டத்தை வெளிப்படையாக பார்த்தால் அதில் எந்த தவறும் இல்லை என்று தான் தோன்றும். ஆனால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் மதத்தவரை தவிர மீதமுள்ளவர்கள் ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார்கள். அதற்கு பல்வேறு காரணங்களை இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மூன்று நாடுகளில் இருந்து அகதிகள் என்ற பெயரில் தீவிரவாதிகள் ஊடுருவினால் நாட்டின் பாதுகாப்பு கேள்வி குறியாகும் என்று இந்திய அரசு தெரிவிக்கின்றது. இது கேட்பதற்கு நன்றாக இருக்கும். அதை யாரும் தவறு என்று சொல்லவில்லை. உலகில் உள்ள அனைத்து தேசங்களும் அண்டை நாடுகளால் தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்ளும். ஆனால், அதில் உள்நோக்கத்தோடு செயல்படுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது. 

இப்போது அடுத்ததாக குடிமக்கள் பதிவேடு என்கிற என்ஆர்சி சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். இன்னும் நாடு முழுவதும் அதை அமல்படுத்தவில்லையே என்கிறார்கள். அஸ்லாமில் அந்த சட்டத்தை அமல்படுத்திவிட்டு, அகதிகளுக்கான முகாம்களை கட்டி முடித்துள்ளார்கள். அடுத்ததாக நாடு முழுவதும் அதை அமல்படுத்த பார்ப்பார்கள். மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை என்றாலும், அவர்கள் கொண்டு வரும் அனைத்து சட்டங்களையும் ஆதரிக்க அதிமுகவும், பாமகவும் இருக்கிறார்கள். ஆகையால் எப்படியாவது அவர்கள் கொண்டு வரும் மசோதாக்களை சட்டமாக்கி விடுவார்கள். அதில் எந்த சந்தேகமும் இருக்கப் போவதில்லை. சிலர் சிஏஏ-யும், என்ஆர்சி-யும் வேறு வேறு தானே என்று கேட்கிறார்கள். இவை இரண்டும் ஒரு அம்மா பெற்ற இரட்டை பிள்கைகள் தான். இந்த சட்டத்தில் 80 வருடத்துக்கு முன்பு இங்கே வசித்ததற்கான ஆவணங்களை கேட்கிறார்கள். என்னிடம் இருந்தால், நான் கொடுத்துவிட போகிறேன். அப்படி இல்லை, என்னுடைய தாத்தா வசதி வாய்ப்பற்றவர் என்ற நிலையில் நான் எதை காட்ட முடியும். இதை வைத்து நான் இந்த நாட்டின் குடிமகன் இல்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியுமா? எதுவுமே இல்லாதவர்களின் நிலை என்ன. அவர்கள் எல்லாம் அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட வேண்டியவர்கள் தானா? இதற்கு இந்த அரசு இதுவரை முறையான பதில் சொல்லி உள்ளதா என்றால் அதுகுறித்து பேசுவதே இல்லை. 

இப்போது நான் ஒரு முஸ்லிமாக இருந்து, என்னிடம் 80 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணம் எதுவும் இல்லை என்றால், என்னை இவர்கள் என்ன சொல்வார்கள். நான் பாகிஸ்தானில் இருந்து வந்தவன், என் முன்னோர்கள் பாகிஸ்தான் குடிமக்கள், நான் தமிழநாட்டிற்கு வந்ததால் தமிழ் பேசுகிறேன் என்று கூறவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதே ஒரு இந்த குறிப்பிட்ட நாட்டில் இருந்து வந்திருந்தால், அவர் இந்தியாவில் ஆறு ஆண்டுகள் இருந்துள்ளார் என்று என்று சான்றிதழை காட்டினாலோ அல்லது போன் ரீசார்ஜ் செய்ததற்கான ஆவணங்களை ஆறு ஆண்டுகளுக்கு காட்டினாலோ அவர்கள் இந்திய குடியுரிமை பெறுவதற்கான தகுதிகள் இருப்பதாக புதிய சட்டத்தை காட்டி இவர்கள் சொல்கிறார்கள். அப்போது பாதிப்பு  யாருக்கு வருகிறது. ஆவணங்கள் இல்லாத இருவரிடம் மதத்தின் அடிப்படையில் ஒரு அரசு பாகுபாடு காட்டுகிறது என்றால் அதனை எப்படி எடுத்துக்கொள்வது. இது எவ்வளவு தவறான ஒரு விஷயம். ஒரு சாராருக்கு ஆதரவாகவும் மற்றொரு சாராருக்கு எதிராகவும் இருப்பதுதான் ஒரு மதச்சார்பற்ற நாட்டுக்கு நல்லதா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.