Skip to main content

தலைமைக்கு தேவை திறமை மட்டுமா?? - தலைவா #2

Published on 18/06/2018 | Edited on 21/06/2018

ஒரு தலைவனுக்கான தகுதிகள் என்பது, தான் ஒற்றை மனிதன் என்ற பண்பை குறைத்துக்கொண்டு தன் குழுவின் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு பொதுவுடைமையுடையவனாக இருக்க வேண்டும் என்பதுதான். அதன்படி ஒரு தலைவன் பின்னரும் கூறுகளுக்குடைய தகுதிகளை வளர்த்து கொண்டிருக்க வேண்டும் அவைகள் யாவெனில், 

 

பக்குவம்

மனப்பக்குவம் கொண்டவராக ஒரு தலைவர் இருக்க வேண்டும். இதற்கு ஒரு செயலை செய்து முடிப்பதற்கான திறமையும் தலைவராக இருந்து செயல்படும் விருப்பமும் அவருக்கு வேண்டும். அப்படியானால் ஒருதலைவர் தனது செயல்  குறித்த உந்து சக்தி கொண்டவராகவும், எந்தச் செயலை நிறைவேற்றப் போகிறாரோ அதைப் பற்றிய விரிவான அறிவாற்றல் பெற்றவராகவும் அவர் இருக்க வேண்டும்.

 

leader

 

விருப்பம் இருந்து திறமை இல்லையென்றால் பயனில்லை. எந்த ஒரு பணியையும் நிறைவேற்றும் திறமை இருந்து செய்வதற்கு விருப்பம் இல்லை என்றாலும் பயனில்லை. விருப்பம் நிறைவேற உள்ளத்தில் உந்துசக்தி வேண்டும். ஓர் உந்துசக்தி இல்லாத நிலையில் விருப்பத்தை செயலுக்குக் கொண்டுவருவது தாமதம் ஆகிக் கொண்டே இருக்கும். உந்து சக்தியானது செயலை செய்து முடிக்க தூண்டுகோலாய் இருப்பதுடன், செயலை சரியாகச் செய்து முடிக்கத் தேவையான தகவலை திரட்டுவதற்கும் ஊக்கம் அளிக்கும். ஒரு பணிகுறித்த அறிவாற்றல் தளம் வலுவாக இருக்கவேண்டும். செயலூக்கமுள்ள ஒரு தலைவர் ஊக்கமுடையவராக இருப்பார். தலைவராக இருப்பவர் முதலில் தலைவராக இருப்பதை விரும்ப வேண்டும். பலர் அதை விரும்புவதில்லை. ஏனெனில் தலைமைப் பொறுப்பு சுலபமானது அல்ல. அது பெரும்பணியாகும். விருப்பமும் திறமையும் கொண்ட ஒரு தலைவர் தனது பொறுப்புணர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் தனது செயல்வீரர்களுக்கு மட்டுமல்ல, தனது குழுவினரின் அல்லது தன்னைப் பின்பற்றுகிறவர்களின் செயல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

 

திறமை 

சுருக்கமாகச் சொன்னால் விருப்பமுள்ள திறமையும் பக்குவமான மனநிலைக்கு அவசியம்.

''திறமை இருக்கிறதா?''

தலைவரின் திறமை என்பது அவர் எந்தப் பொறுப்பை , செயலை ஏற்றுக்கொண்டிருக்கிறாரோ அதைப் பற்றிய விரிவான ஞானம் அவருக்கு இருப்பதைப் பொருத்தது என்று கூறலாம். அந்தத் தலைவர் கையாளுகிற பிரச்சினை குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும். அந்தப் பிரச்சினையின் வலு என்ன? அந்தப் பிரச்சினை எந்த அளவுக்கு நீடித்திருக்கும்? அதாவது அந்தப் பிரச்சினையின் வரம்பு எதுவரை என்பதை தலைவர் தெரிந்து கொள்ள வேண்டும்.


 

leader

 

மேலும் நீண்டகாலப் பிரச்சினையானாலும் அல்லது குறுகியகால பிரச்சினையானாலும் அதை முடிவுக்கு கொண்டு வரும் விருப்பம் தலைவருக்கு வேண்டும். அதாவது அந்தப் பிரச்சினையின் வரம்புகள் விரிவடையாமல் சுருங்கும்படி செய்யும் விருப்பம் கொண்டவராக அவர் இருக்க வேண்டும். மேலும் தனது பணியை, பொறுப்பை நிறைவேற்றுவதற்குத் தேவையான மனிதவளம், பொருள்வகை ஆதாரங்கள் குறித்தும் நன்கு அறிந்தவராக தலைவர் இருக்க வேண்டும். அது அவரும் அவரது குழுவினரும் மேற்கொள்ளும் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும். அறிவாற்றலை ஒரு தலைவர் பெற்றிருப்பது எந்த அளவுக்கு என்பதில் வேறுபாடு இருப்பது இயல்புதான்.

 

ஆனால் அறிவாற்றல்தனத்தை அவர் பெற்றிருப்பது அவசியம். அது இல்லாவிட்டால் அவரது செயல்பாடுகளில் செயலூக்கம் இருக்காது, அவரும் செயலூக்கமுள்ள தலைவராக இருக்க முடியாது! ஒரு தலைவர் தான் கையாளும் ஒரு விஷயம் குறித்த விரிந்து பரந்த அறிவாற்றல் பெற்றிராத நிலையில் அவர் தனது தலைமைப்பணியின் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது. ஏதோ ஒரு இறுக்கமான மனநிலை அவருக்குள் உறுத்தலாக இருந்துவரும். எனவே ஒரு தலைவர் தெளிவாகவும் ராஜதந்திரத்துடனும் சிந்திக்க வேண்டும்.

 

ஒரு தலைவர் தெளிவாக சிந்திப்பது, திட்டவட்டமாக செயல்படுவது எல்லாம் எதற்காக? ஒரு குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக! ஒரு தலைவர் தனது குறிக்கோளில் ஈடுபாடு உடையவராக இருக்க வேண்டும். அப்படி ஒரு குறிக்கோளை நிறைவேற்றவேண்டும் என்று முழு மூச்சாக பாடுபடும் ஒரு தலைவருக்குத் தனது குறிக்கோள் குறித்த மதிப்பிடும் விழிப்புணர்வும் இடையறாது இருந்துவர வேண்டும்.

குறிக்கோளை அடைய வேண்டுமானால் அதனுடன் பல கூறுகள் தொட்டுக்கொண்டுள்ளன. பணம், மனிதவளம், கால அவகாசம் ஆகியவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம். இந்தக் குறிக்கோளானது நிறைவேற்றுவதற்கு சாத்தியமானதாகவும் தகுதியானதாகவும் இருக்க வேண்டும்.

தொலைதூர குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக குறுகியகால குறிக்கோள்களை தலைவர் நிர்ணயிக்க வேண்டும். மேலும் இந்தக் குறிக்கோள்களைப் பற்றி தலைவர் தனது தொண்டர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அவை நிறைவேற உதவி புரிய வேண்டும். இதன் மூலம் தொலைதூரக் குறிக்கோள் நிறைவேறுவதற்கு உதவ முடியும்.

 

அதிகாரம்

 

தலைமைத்துவம் என்றாலே அதில் அதிகாரமும் உண்டு. அதிகாரத்தை அடைவது, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வு தலைவருக்கு அவசியம். ஒரு தலைவர் தனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பதவியை அடைவதன் மூலம் சாதாரணமாக ஒருவருக்கு அதிகாரம் வந்து சேர்கிறது. நிறுவனத்தில் மேல்நிலையில் இருப்பவர் ஒரு பணியை நிறைவேற்ற அதிகாரம் பெறுகிறார். ஒரு குழுவும் தனது தலைவருக்குத் தேவையான அதிகாரம் அளிக்கிறது. ஏனெனில் குழுவில் ஒரு விஷயம் குறித்து ஒருமித்த கருத்து வராத நிலையில் தங்கள் நம்பிக்கைக்குரிய தலைவர் எந்த முடிவை எடுத்தாலும் ஏற்கத் தயார் என்ற மனநிலைக்கு வந்த உறுப்பினர்கள், தங்கள் தலைவருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வழங்குகின்றனர் தனது சொந்த முயற்சிகளின் மூலம் நடவடிக்கைகளின் மீது செல்வாக்கு அளிக்கும் அளவுக்குத் தனிப்பட்ட அதிகாரம் விரிவடைந்து செல்கிறது.

 

leader

 

அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் தலைவர் அறிந்திருக்க வேண்டும். அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருப்பது அதை விரயம் செய்வதுபோல. அதிகாரம் என்றால் அதை சரியான முறையில் உரிய தருணத்தில் பயன்படுத்த வேண்டும். தலைவர் தான் நினைத்ததை தன் ஆதரவாளர்களைச் செய்ய வைப்பதற்கு அதிகாரம் பயன்படுகிறது. தன்னல நோக்கத்திலும் ஒரு தலைவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்வதுண்டு. தன் குழுவினருடன் அதிகாரத்தை சமமாகப் பகிர்ந்து கொள்வதும் உண்டு. குழுவினருடன் தலைவர் இடையறாத உறவு கொண்டிருப்பதன் மூலம் அந்தக் குழுவுக்கென ஓர் அதிகார தளம் ஏற்பட்டு விடுகிறது. அந்த பலத்தை, குறிக்கோளை அடைய அந்தக் குழு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 

ஆளுமைத் திறன்

 

தலைவரது ஆளுமைத்திறனை கவனமாக மதிப்பீடு செய்வதும், அவரைப் பிறர் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதும் முக்கியமானது. தலைவர்கள் தங்களது தன்னம்பிக்கை, நெளிவு சுழிவான தன்மை, படைப்பாக்கத்திறன், நேர்மை, உண்மையாக நடந்துகொள்ளுதல், உத்திகளை வகுக்கும் தன்மை, நட்புணர்ச்சி போன்றவற்றின் விரிவாக்கம் எதுவரை என்பதைப் பற்றிய விழிப்புணர்வு தலைவர்களுக்குத் தேவை. இந்த விழிப்புணர்வானது, அவர்கள் பிறர்மீது செலுத்தும் தாக்கத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும். தலைவர் தன்னுடைய சொந்தத் தோற்றத்திலும் கவனம் செலுத்துவது அவசியம். தலைவரது ஆளுமைத்திறன்கள் சிறப்பாக வெளிப்படும்போது, அவரது செல்வாக்கும் அதற்கேற்ப உயரும்.

Next Story

டெல்லியில் இன்று தொடங்குகிறது ஜி20 உச்சி மாநாடு

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

G20 summit begins today in Delhi

 

ஜி20 உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வந்தன. இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்றும், நாளையும் என இரு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

 

இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மன் அதிபர் பிராங் வால்டர் சென்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ், ஆப்பிரிக்க ஒன்றிய தலைவரும் கொமோரஸ் அதிபருமான அசாலி அசவுமானி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜெய் லவ்ரோ, ஓமன் துணை பிரதமர் சயித் பகத் மின் மக்மூத் அல் சாயித், ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், சர்வதேச நிதியத் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் டெல்லி வந்துள்ளனர். 

 

 

Next Story

மணிப்பூர் வீடியோ விவகாரம்; தலைவர்கள் கடும் கண்டனம்

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

Manipur Video Affair Leaders strongly condemned

 

மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளை களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து உள்ளனர். இது சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கொலை, கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட வழக்கில் முக்கிய நபர்களில் ஒருவரான  ஹேராதாஸ் என்பவரை கைது செய்திருப்பதாக மணிப்பூர் காவல்துறை தரப்பில் இருந்து தகவல் அளித்துள்ளனர். மேலும் நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து மணிப்பூர் மாநில முதல்வர் பைரன் சிங் தனது டுவிட்டரில், “பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரங்கள் இதயத்தை கனக்க செய்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்து இருந்தார்.

 

Manipur Video Affair Leaders strongly condemned

 

இந்நிலையில் அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டுவிட்டரில், “மணிப்பூரில் மனிதநேயம் மரணித்துவிட்டது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் மௌனத்தை இந்திய மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் மணிப்பூர் மக்களுடன் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மாநிலத்தின் சமூக அமைதியை மோசமான வழியில் மோடி அரசு அழித்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.

 

Manipur Video Affair Leaders strongly condemned

 

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரம் எம்.பி. தனது டுவிட்டரில், “மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். பல்வேறு நாடுகள், மாநிலங்களுக்குச் சென்ற பிரதமர் மோடி, மணிப்பூரை பற்றி சிந்திக்கக்கூட நேரம் ஒதுக்கவில்லை. மணிப்பூரை நினைவுகூர அவரைத் தூண்டியது எது என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பிரதமர் மோடி செய்ய வேண்டிய முதல் வேலை, மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனே அமல்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

Manipur Video Affair Leaders strongly condemned

 

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பதிவில், “மணிப்பூரில் இருந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை படங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் அளவு குறைவாக உள்ளது. சமூகத்தில் வன்முறையின் உச்சக்கட்ட சுமையை பெண்களும் குழந்தைகளும் சுமக்க வேண்டியுள்ளது. மணிப்பூரில் அமைதிக்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் போது நாம் அனைவரும் வன்முறைக்கு எதிராக ஓர் அணியில் குரல் எழுப்ப வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்ற உறுப்பினரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான  சாகேத் கோகலே, “இரண்டு பெண்கள் பாலியல் துன்புறத்துலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கண்டறிந்திருக்கிறார். அதே சமயம் இந்தச் சம்பவம் நடந்தது மே 4ஆம் தேதி என்றும் அப்போதே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் மணிப்பூர் காவல்துறை தெரிவிக்கிறது. இதுபோன்ற அதிமுக்கியமான சட்ட ஒழுங்கு பிரச்சனைகளின் போதுகூட மாநில காவல் தலைமை இயக்குநரும்,  மாநில முதல்வரும் கலந்து பேசிக்கொள்வதில்லையா” என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், “மணிப்பூர் வீடியோவைப் பார்த்த பிறகு என்னால் தூங்க முடியவில்லை. கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், இதுவரை இதில் சம்பந்தப்பட்ட யாரும் கைது செய்யப்படவில்லை. யாரும் கைது செய்யப்படாததை நினைத்து வெட்கப்படுகிறேன். மத்திய அரசு இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கிறது. பிரதமர் ஒரு அறிக்கை கூட இது குறித்து வெளியிடவில்லை. மணிப்பூரில்  நிகழ்ந்து வரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், சரியான நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மணிப்பூர் மாநில முதல்வர் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.