Skip to main content

நீங்க நல்லவங்களா, கெட்டவங்களா? - இந்தியாவிலேயே வித்தியாசமான கேரளா! முதல்வரைத் தெரியுமா #3

Published on 30/04/2018 | Edited on 05/05/2018

 

muthalvar

 

'மக்கள் விரோத காங்கிரஸ் அரசாங்கத்தை தூக்கியெறிய வேண்டும். ஒரு உண்மையான மக்கள் ஜனநாயக அரசாங்கத்தை அமைக்க வேண்டும்' என்று கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது. குறிப்பிட்ட ஆண்டு 2014 அல்ல. நாடு முழுவதும் காங்கிரஸ் அலை வீசிக்கொண்டிருந்த காலகட்டம். இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த கட்சி என்கிற பிம்பம் பெரியதாக இருந்த காலக்கட்டம். காங்கிரசை எதிர்ப்பவர்கள் துரோகிகள் என மக்களே முன்வந்து நினைத்த காலகட்டமான 1950ல்தான் கேரளா மாநில கம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படையாக தேர்தல் அறிக்கையில் இப்படி கூறியிருந்தது. 
 

இந்த அறிக்கையை இந்தியாவின் பிற மாநிலங்கள் ஆச்சர்யத்தோடும், அதிர்ச்சியோடும் நோக்கினார்கள். கேரளா மக்கள் அப்படி நோக்கவில்லை என்பது தேர்தல் முடிவில் எதிரொலித்தது. கேரளா சட்டமன்றத்தில் அப்போதிருந்த 108 இடங்களில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. மீதியிடங்களில் கம்யூனிஸ்ட்களும், அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்ற்றிருந்தது. கூட்டணிக்குள் ஏற்பட்ட குழப்பத்தால் அப்போது இடதுசாரிகளால் ஆட்சியமைக்க முடியவில்லை. 1957ல் நடைபெற்ற சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் வெற்றி பெற்றது. ஏப்ரல் 7ந்தேதி இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் முதல்வராக பொறுப்பு ஏற்றார். இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கமாக இருந்தது அது. இது மத்தியில் ஆட்சி புரிந்த காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. முக்கியமாக பிரதமர் நேருவை. இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனையை காரணம் காட்டி சீனாவுக்கு கம்யூனிஸ்ட்கள் ஆதரவு தருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை வைத்து 1959ல் கேரளாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை குடியரசுதலைவர் மூலம் ரத்து செய்ய வைத்தார் ஜனநாயகவாதியாக அடையாளப்படுத்தப்பட்ட பிரதமர் நேரு.
 

இந்திய மக்கள் காங்கிரசை கொண்டாட கேரளா மக்கள் கம்யூனிஸ்ட்களை கொண்டாடினார்கள். அந்தளவுக்கு வித்தியாசமானர்கள் சேரளர்கள். சேரளம் (மலைச்சரிவு) பகுதியில் வாழ்ந்த மக்களை சோழர்கள், பாண்டியர்கள் காலத்திலும், வணிகத்துக்காக உலகம் முழுவதும் சுற்றிய ரோமாணியர்கள் சேரபுத்ரா (சேரளம் மக்கள்) என்றே அழைத்தனர். கிபி 3ஆம் நூற்றாண்டில் அசோக மன்னர் ஆட்சி காலத்தில் தான் சேரளம் என்கிற கேரளம் என்கிற பெயர் அதிகாரபூர்வமாக கல்வெட்டில் இடம்பெற்றது. அதன் பின் அந்த பெயரே நிலைத்தது. கேரளாவின் மொழி மலையாளம். இதன் தாய்மொழி தமிழ்மொழி. மொழியில் மட்டுமல்ல உணவு, கலாச்சாரம் என பெரும்பாலானவற்றில் அவர்கள் தமிழர்களோடு கலந்தவர்கள். கேரளாவுக்கென தனி கலையான கதகளி, வர்மக்கலை, களரி போன்றவை தனித்துவத்துடன் உள்ளன. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் படித்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம் கேரளாதான். கேரளாவுக்குள் மக்கள் கட்சிகளாக, மதங்களாக, சாதிகளாக பிரிந்திருந்தாலும் தங்கள் மாநிலத்துக்கு ஒரு பிரச்சனையென வரும்போதும், மாநிலத்துக்கு வெளியே, நாட்டுக்கு வெளியே தொழில் நிமித்தமாக இடப்பெயர்வில் சென்றிருந்தால் சாதி, அரசியல், மதத்தை மறந்து சேட்டன்களாகிவிடுவார்கள். அப்படி பக்குவத்தோடு இருந்தாலும், அதே மக்கள் தான் பிற்போக்குவாதிகளாகவும் இருக்கிறார்கள். 
 

sabarimala

 

சபரிமலை, குருவாயூர் போன்றவை அதற்கு உதாரணம். சபரிமலை ஜோதியை மனிதர்கள்தான் ஏற்றுகிறார்கள் என கேரளா அரசே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பின்பும் தை மாத ஜோதியை தீவிர பக்தியாக பார்க்கிறார்கள், அதோடு, ஆணுக்குப் பெண் சமம் என்கிற கருத்தை கொண்ட கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் கூட சபரிமலை கோயிலில் பெண்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. முதல்வர் பினராயி விஜயன் நிறைவேற்றிய தலித் சாதியினர் அர்ச்சகராகலாம் என்கிற சட்டம் பெரும் வரலாற்று ஆண்களை விட பெண்கள் அதிகமுள்ள மாநிலமான கேரளாவில் இந்தியாவில் 100 சதவிதம் கல்வியறிவு பெற்ற மாநிலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகரகலாம் சட்டத்தின்படி தலித் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட அந்த அர்ச்சகர்களை பெண்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. பக்தி விவகாரத்தில் இருக்கும் பிற்போக்குத்தனம் சாதி விவகாரத்திலும் உள்ளது. 
 

பசிக்காக திருடிய பழங்குடி இளைஞனான மதுவை அடித்து உதைத்துக் கொன்றது படித்தவர்கள் நிரம்பிய கேரளாவில்தான். சாதி அடுக்கில் நம்பூதிரி, சத்திரியர்கள், வைசீயர்கள், நாயர்கள், பஞ்சமர்கள் (பறையர் என்கிற புலையர்) என சாதியாக மக்களை பிரித்துவைத்துள்ளனர். மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தியில் முதலில் இந்து, பின்பு இஸ்லாமியர், அடுத்து கிருஸ்த்துவர், அதன்பிறகு பிற மதத்தினர் உள்ளனர். 

தற்போதைய கேரளா சுதந்திரத்துக்கு முன்புவரை மலபார்–திருவிதாங்கூர்-கொச்சி என மூன்று சமஸ்தானங்களாக இருந்தது. அதோடு சென்னை மாகாணத்தோடும் சில பகுதிகள் இருந்து வந்தன. 1498ல் வாஸ்கோடகாமா கோழிக்கோட்டில் வந்து இறங்கினார். வணிகத்துக்கென வந்து நாடு பிடித்தபோது ஆட்சி செய்தபோதும் பிரிட்டிஷார் திருவிதாங்சூர், கொச்சி, மலபார் சாம்ராஜ்ஜியங்களை தனித்தனியாவே ஆட்சி செய்தனர். சுதந்திரத்துக்கு பின்பு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கியபோது 1956 நவம்பர் 1ந்தேதி ஐக்கிய கேரளா உருவானது. இதற்கு கேரளாவில் அடித்தளம் அமைத்தவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட். கேரளாவை ஆண்டுவந்த காங்கிரஸ் அரசாங்கத்தை அது வலிமையாக இருந்தபோதே எதிர்த்து நின்று கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்த மிக முக்கியமானவர்களில் மூத்தவர் நம்பூதிரிபாட். 
 

கேரளாவில் மிக வேகமாக இடதுசாரி கட்சிகள் வளரக்காரணம் சாதி பிரிவினை. கேரளாவில் நம்பூதிரிகள், நாயர்கள், ஈழவர்கள் என சாதி விகிதாச்சாரத்தில் இருந்தாலும் ஆட்சியதிகாரம், நில உடமையாளர்களாக ஒரு காலத்தில் இருந்த ஆதிக்கம் செலுத்திய உயர் சாதியினர் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். இதனால் முழுக்க மலை சார்ந்த பகுதியான கேரளாவின் தொழிலாளர்களிடையேவும், ஒடுக்கப்பட்ட மக்களிடம் வெகுவேகமாக தங்களது கட்டமைப்பை இடதுசாரிகளால் உருவாக்க முடிந்தது. பணக்காரன் – ஏழை, முதலாளி – தொழிலாளி இந்த முரண்பாடுகளில் பெரும்பான்மை பிரிவை சார்ந்த ஏழை, தொழிலாளி, ஒடுக்கப்பட்ட சாதியினர் இடதுசாரிகள் பக்கம் நின்றனர். பணக்காரன், முதலாளிகள், உயர் சாதியினர் என அடையாளப்படப்பட்டவர்கள் காங்கிரஸ் பக்கம் நின்றனர். காலப்போக்கில் காங்கிரஸ் சிறுபான்மை இன மக்களின் நலக்கட்சியாக கேரளாவில் உருமாறியது. இதனாலயே கேரளா இந்த இரு கட்சிகளின் கைபிடிக்குள்ளேயே இதுவரை இருந்து வருகிறது.
 

 

EMS


 

கேரளா மாநிலம் உருவான பின் 1957ல் நடந்த முதல் சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் முதல்வராக பொறுப்பு ஏற்றார். 1959 வரை அந்த பதவியில் இருந்தார். முதல்வர் பதவியில் அமர்ந்ததும் கேரளாவில் நிலச்சீர்த்திருத்தம் செய்து சாதித்தவர் இ.எம்.எஸ்.நம்பூதிபட். அதுவே விவசாய தொழிலாள மக்களிடம் கம்யூனிஸ்ட் கட்சி வளர பெரும் துணை புரிந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி கலைக்கப்பட்டு 6 மாதம் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு பின்பு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் முதன் முதலில் 356வது சட்டப்பிரிவை மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி கலைக்கப்பட்டது கேரளாவில் தான். 
 

மக்கள் விரும்புவதை அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்பமாட்டார்கள் என்பது மற்ற மாநிலங்களை விட கேரளாவுக்கு பொருந்தும். ஏனெனில் அதன் புராணகால வரலாறே அப்படித்தான் கூறுகிறது. கேரளாவை மகாபலி சக்கரவர்த்தி என்கிற அசுர அரசன் கேரளாவை சிறப்பாக ஆண்டுவந்தார். இந்த அரசை மக்கள் விரும்பினர். இந்த அரசை விரும்பாத கடவுள் மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து வந்து மகாபலி சக்கரவர்த்தியை தன் காலால் பூமிக்குள் அழுத்திக் கொலை செய்தார். அந்த மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக ஆண்டு தோறும் மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். மக்கள் விரும்பிய மகாபலி அரசாங்கத்தைப் போல கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை மக்கள் விரும்பினர். மகாபலி அரசை விரும்பாத மகாவிஷ்ணு போல கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை விரும்பாத பிரதமர் நேரு, தன் அதிகாரத்தை கொண்டு ஆசியாவில் முதன்முதலாக அமைந்த இடதுசாரி அரசாங்கத்தை கலைத்தார். 
 

மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கம் கலைக்கப்பட்டது. மக்கள் எப்படி எதிர்கொண்டனர்? வரும் வெள்ளி (04-மே-2018) தெரிந்துகொள்வோம்.