Skip to main content

பாஜகவிற்கு வாங்க அமைச்சர் பதவி... எனக்கு அதிகாரம் வேணும்... மோடி, வாசன் சந்திப்பில் வெளிவராத தகவல்!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

இரண்டு சந்திப்புகள் தமிழக அரசியலில் விவாதிக்கப்படுகின்றன. ஒன்று, பிரதமர் மோடி -த.மா.கா. தலைவர் வாசன் சந்திப்பு. அடுத்தது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி -கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு. கவர்னரை சந்திக்க எடப்பாடி கிளம்புகிறார் என தகவல் பரவியதும் அமைச்சர்கள் பலருக்கும் கிலியை ஏற்படுத்தியிருந்தது. அமைச்சரவை மாற்றம் இல்லை என தெரிந்ததும்தான் அமைச்சர்கள் பலரும் பெருமூச்சு விட்டனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மோடியை சந்திக்க வாசன் டெல்லி பறந்துள்ளார் என்கிற செய்தி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, பா.ஜ.க.வுடன் த.மா.கா.வை இணைக்க பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே மோடியை வாசன் சந்திக்கிறார் என்கிற அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கடந்த 6-ந் தேதி பிரதமர் இல்லத்தில் மோடியை சந்தித்தார் வாசன். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.


முதன்முறையாக மோடி பிரதமரானதும் (2014) பா.ஜ.க. எடுத்த முதல் அஸ்திரம் காங்கிரஸ் கட்சியை பலகீனப்படுத்துவதுதான். அதற்கேற்ப காங்கிரஸ் தலைவர்கள் மூலமாக காங்கிரஸை உடைப்பது என்பது முதல் அஜெண்டா. அந்த வகையில், மோடியின் வலையில் முதலில் சிக்கியவர் ஜி.கே.வாசன். குஜராத் தொழிலதிபர் அதானி மூலம் தமிழக காங்கிரஸிலிருந்து வாசனை வெளியேற வைத்து காங்கிரஸை உடைத்தது பா.ஜ.க., காங்கிரசுக்கு எதிராக மீண்டும் த.மா.கா.வை கட்டி எழுப்பினார் வாசன்.

 

 

bjp



ஆனால், "தி.மு.க. -காங்கிரஸ் கூட் டணி வலுவாக இருந்ததால் காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க. தலைமையும் வாசனும் போட்ட திட்டம் சோபிக்கவில்லை. குறிப்பாக, த.மா.கா. மீண்டும் உருவானதற்குப் பிறகு வந்த எந்த தேர்தலிலும் வாசன் அதிரடி அரசியல் செய்யுமளவுக்கு தேர்தல் முடிவுகள் அவருக்கு சாதகமாக அமையவில்லை. இதனால், காங்கிரசை உடைத்து வாசனுடன் த.மா.கா.வுக்கு வந்த அரசியல் வி.ஐ.பி.க்கள் பலர் தாய்க் கட்சியான காங்கிரசுக்கும் மாற்று கட்சிகளுக்கும் தாவினார்கள். இதனால், வாசனின் அரசியல் செல்வாக்கில் மந்தநிலை ஏற்பட்டது.


முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் வாசன். அப்போது, மீண்டும் காங்கிரஸில் இணைந்துவிடலாமா என்கிற யோசனை அங்கு ஆலோசிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் இது குறித்துப் பேசினார் முகர்ஜி. வாசனை சேர்த்துக்கொள்ள சோனியா விரும்பினாலும், ராகுல்காந்தி ஏற்கவில்லை. "பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் மீண்டும் சேர்த்துக் கொள்கிறோம்... வாசனை மட்டும் ஏற்க முடியாது' என கறாராக சொல்லிவிட்டார் ராகுல்காந்தி. இதனால் மீண்டும் காங்கிரஸ் த.மா.கா. இணைப்பு நடக்கவில்லை. இந்த நிலையில், சில மாதங்கள் கழித்து மீண்டும் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் வாசன். அப்போது, பா.ஜ.க.வில் இணைந்துவிட யோசனை சொன்னார் முகர்ஜி. அதனை அப்போது வாசன் ஏற்கவில்லை.

 

 

bjp



அதேசமயம், ரஜினியை அரசியலுக்குள் கொண்டுவந்து அவரை பா.ஜ.க.வில் இணைக்க வைக்கும் முயற்சியை பா.ஜ.க. தேசிய தலைமை எடுத்துக்கொண்டிருந்ததால் வாசன் குறித்து பா.ஜ. க.வும் யோசிக்கவில்லை. பா.ஜ.க.வின் திட்டத்துக்கு ரஜினி ஒத்துழைக்காத நிலையில்தான், நாடாளுமன்ற தேர்தலில் த.மா.கா.வையும் தங்கள் கூட் டணிக்குள் கொண்டு வந்தது பா.ஜ.க.. அதிலிருந்தே மோடி மீது நம்பிக்கை வைத்தார் வாசன். அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய சந்திப்பு நடந்துள்ளது. மோடியும் வாசனும் தங்களுக்குரிய விருப்பத்தை விவாதித்திருக்கிறார்கள். விரைவில், பா.ஜ.க.வில் வாசன் இணைவார்'' என்கின்றனர் ராகுல்காந்தியின் அறிவுஜீவி குழுவில் உள்ள தமிழக காங்கிரஸ் பிரபலங்கள்.

பா.ஜ.க.வின் தேசிய தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் கொள்கை வகுப்பாளர்களிடம் விசாரித்தபோது, "இரண்டாவது முறையாக மோடி பிரதமரானதைத் தொடர்ந்து அவரை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருந்தார் வாசன். அந்த அப்பாயின்ட்மெண்ட் நிலுவையிலேயே இருந்தது. சமீபத்தில் வாசனின் அப்பாயின்ட் மெண்ட் குறித்து மோடியிடம் பிரணாப் முகர்ஜி நினைவுப்படுத்தியிருக்கிறார். அந்த சமயத்தில்தான் சீன அதிபரை சந்திக்க சென்னை வந்த மோடியை ஏர்போர்ட்டில் சந்தித்த வாசனிடம், "டெல்லிக்கு வாங்க; சந்திக்கலாம் ; அப்பாயின்ட்மெண்ட் என்னைக்குன்னு உங்களுக்கு தகவல் வரும்' என சொல்லிவிட்டுப் போனார் மோடி. இதற்கு இன்னொரு பின்னணியும் இருக்கிறது.

அதாவது, தமிழக பா.ஜ.க.வுக்கு தற்போது தலைவர் இல்லை. டிசம்பருக்குள் தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அமித்ஷா. ஆனால், தமிழக மக்களிடமிருந்து அந்நியப் பட்டு நிற்கும் பா.ஜ.க.வுக்கு தற்போதைய தமிழக பா.ஜ.க. பிரபலங்கள் யாரையும் தலைவராக்க அமித்ஷா விரும்பவில்லை. அதற்கேற்ப தமிழகத்திலிருந்து டெல்லிக்கு தகவல் அனுப்பும் அரசியலுக்கு அப்பாற்பட்ட வியூகம் வகுப்பாளர்கள், "தமிழக பா.ஜ.க.வுக்கு இந்துத்துவா பின்னணியில்லாத ஒருவரை தலைவராக்குங்கள். அவர், தமிழக மக்களுக்கு தெரிந்தவராகவும் இருக்கவேண்டும். அந்த வகையில் ஜி.கே.வாசனை பா.ஜ.க.வுக்குள் கொண்டு வரலாம்' என தொடர்ந்து சொல்லி வருகின்றனர். இந்த பின்னணியில்தான், மோடியை சந்திக்க வாசனுக்கு அப்பாயின்ட்மெண்ட் தரப்பட்டது'' என்கின்றனர்.

 

Seshan



மேலும் நம்மிடம் பேசிய கொள்கை வகுப்பாளர்கள், "மோடி வாசன் சந்திப்பில் தமிழக அரசியல் விவகாரங்களை கடந்து, த.மா.கா. -பா.ஜ.க. இணைப்பு பற்றிதான் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இணைப்பு பற்றி பேசிய மோடி, "உங்கள் கட்சியை பா.ஜ.க.வுக்குள் இணைத்து விடுங்கள். பா.ஜ.க.வின் தமிழக தலைவர் பதவியும் ராஜ்யசபா எம்.பி.யும் உங்களுக்கு கிடைக்கும்' என தனது விருப்பத்தை மோடி சொல்ல... கட்சியை பா.ஜ.க.வுடன் இணைப்பதை ஏற்க மறுத்துள்ளார் வாசன். அதேசமயம், "தோழமை கட்சியாகவே இருந்து உங்களுக்கு நம்பிக்கைக்குரியவனாக இருக்கிறேன். தோழமை கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தரும் வகையில் என்னை அமைச்சராக்குங்கள். உங்களுக்கு விசுவாசமாக இருப்பேன்' என சொல்லியிருக்கிறார் வாசன். அப்போது, ""பா.ஜ.க.வில் நீங்கள் இணைவதன் மூலம்தான் உங்களை அமைச்சராக்க முடியும்' என மோடி சொல்ல, "அப்படியானால், சுதந்திரமாக நான் இயங்கும் வகையில் அனைத்து அதிகாரங்களும் எனக்கு கிடைக்குமா?' என வாசன் கேட்க, "என்ன சொல்ல வருகிறார்...' என்கிற தொனியில் வாசனை நிமிர்ந்து பார்த்தார் மோடி.

அதாவது, "தமிழக பா.ஜ.க.வின் சீனியர் லீடர் களையெல்லாம் பா.ஜ.க.வில் ஆளுமை செலுத்தாத வகையில் அவர்களை தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு மாற்றிவிடுங்கள். தமிழிசை சௌந்திரராஜனை தெலுங்கானா கவர்னராக நியமித்தது போல மற்றவர்களுக்கும் பதவிகள் கொடுத்துவிட்டால் அவர்களின் ஆளுமை தமிழக பா.ஜ.க.வில் இருக்காது. அப்போது சுதந்திரமாக என்னால் செயல்படமுடியும்' என சாதுர்யமாக காய்களை நகர்த்தியிருக்கிறார் வாசன். ஆனால் அவரது விருப்பத்தை ஏற்க மறுத்த மோடி, "அடுத்த வாரம் அமித்ஷாவை சந்தியுங்கள். அவர் உங்களிடம் விவாதிப்பார்' எனச் சொல்லி சந்திப்பை முடித்துக்கொண்டார்'' ‘-என சந்திப்பில் நடந்தவற்றை விவரித்தனர்.

மோடியை சந்தித்துவிட்டு வெளியே வந்த வாசன், "த.மா.கா.வை பா.ஜ.க.வில் இணைப்பதெல்லாம் ஹேஸ்யம், ஜோஸ்யம் தான். இது மரியாதை நிமித்தமான சந்திப்பைத் தவிர வேறில்லை'' என சொல்லிவிட்டுப் பறந்தார்.

 

tmc



"வாசனை சுற்றி என்ன நடக்கிறது?' என த.மா.கா. தரப்பில் விசாரித்தபோது, "த.மா.கா. மாநில கட்சி என்றாலும் முதல்வர் வேட்பாளர் கனவு வாசனுக்கு கிடையாது. அவரை பொறுத்தவரை, டெல்லி அரசியலில் கோலோச்ச வேண்டுமென்பதுதான் விருப்பம். அதற்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும். அந்த பதவியும் அதிகாரமும் இருந்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் தமாகாவை காப்பாற்ற முடியும். ஆனால், இனி 5 ஆண்டுகள் வரை லோக்சபா தேர்தலுக்கு வாய்ப்பில்லை. அதுவரை இப்போதைய நிலையே த.மா.கா.வுக்கு இருக்கும்பட்சத்தில் அதன் அரசியல் எதிர்காலம் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது.

உள்ளாட்சித் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் பிரதான கட்சியின் கூட்டணியில் போட்டியிட்டாலும் த.மா.கா. ஜெயிக்கும்ங்கிறதுக்கு உத்தரவாதம் கிடையாது. அதனால், வாசனுக்கு உடனடியாக ஒரு வெற்றி தேவைப்படுகிறது. தேர்தல் மூலம் அது சாத்தியப் படாதென்பதால், ராஜ்யசபா எம்.பி.யானால் மட்டுமே தனது விருப்பம் நிறைவேறும் என்கிற மனநிலையில் இருக்கிறார் வாசன். ராஜ்யசபா சீட் வேண்டுமெனில் அது பா.ஜ.க.வால் மட்டுமே சாத்தியம். அதனால்தான் பா.ஜ.க.வை நோக்கி சில காய்களை அண்மைக்காலமாக நகர்த்தியிருந்தார். ஆனால், பா.ஜ.க.வில் இணைந்தால் மட்டுமே வாசனின் விருப்பத்தை மோடியும் அமித்ஷாவும் ஏற்பார்கள். அதனால் இணைப்பு விசயத்தில் வாசன் இன்னும் முடிவெடுக்கவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்கிறார்கள் த.மா.கா. மூத்த தலைவர்கள் சிலர்.

 

Ayodhya



 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.