
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடித்த பாஜக மத்தியில் 9 ஆண்டுகளை நிறைவு செய்து 10 வது ஆண்டில் பயணித்து வருகிறது. ஊழலை ஓழிப்போம் என்று ஆட்சிக்கு வந்த பாஜக, கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறி கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஆனால் ஊழலை ஒழிப்போம் என்று ஆட்சிக்கு வந்த பாஜக ஆட்சியின் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மேலும் பாஜக ஆட்சி பெரும் பணக்காரர்களான அதானி மற்றும் அம்பானிக்கு சாதகமாக செயல்படுவதாகவும், அதிலும் குறிப்பாக பிரதமர் மோடி அதானிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி எம்.பி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கடந்த பிப்ரவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச் செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த விவகாரத்தின் சர்ச்சை அடங்குவதற்குள் தற்போது, அதானி நிறுவனத்தின் மீது மேலும் ஒரு புதிய மோசடி குற்றச்சாட்டை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் தடுப்பு (Organised Crime and Corruption Reporting Project) என்ற அமைப்பு முன்வைத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மொரிஷியஸில் இருந்து போலி நிறுவனங்கள் மூலம் இருவர் முறைகேடாக சுமார் 430 மில்லியன் டாலர் மதிப்பிலான தொகைக்கு அதானி நிறுவனத்தின் பங்குகளை வாங்கியும் விற்றும் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
அதானி குடும்பத்துடன் நீண்ட காலமாகத் தொடர்பிலிருந்து வரும் நாசர் அலி சபான் அலி, சாங் சுங் லிங் ஆகிய இருவரும் அதானி பங்குகளை வெளிநாட்டு நிறுவனம் மூலம் வாங்கி மொரிஷியஸ் போன்ற நாடுகளில் முறைகேடாக விற்றதாகவும், அதன் மூலம் அதானி குழுமத்திற்கு அதிகளவில் வருவாய் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. நாசர் அலி சபான் அலி, சாங் சுங் லிங் ஆகிய இருவரும் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியின் நிறுவனங்களில் இயக்குநர்களாகவும், பங்குதாரர்களாகவும் இருந்துள்ளனர். மேலும், இந்த மோசடி அதானி குழுமத்தின் இ-மெயில் தகவல்கள் மற்றும் மொரிஷியஸ் போன்ற நாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற ஆவணங்களை அடிப்படையாக வைத்து கண்டறியப்பட்டதாக ஓசிசிஆர்பி(OCCRP) அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக இந்தியாவின் கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்(சிஏஜி) அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில்(மருத்துவ காப்பீட்டு திட்டம்), 9999999999 என்ற போலி மொபைல் எண்ணைக் கொண்டு நாடு முழுவதும் 7.5 லட்சம் நபர்களின் ஆதார் இணைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில், வெறும் ஏழு ஆதார் அட்டைகளின் எண்ணைக் கொண்டு 4,761 ஆயுஷ்மான் பாரத் அட்டை பெறப்பட்டுள்ளது. குறிப்பாக நோயாளிகள் இறந்த பின்னரும், ஆயுஷ்மான் பாரத் மூலம் அவர்களின் பெயரில் சிகிச்சைக்கான பணம் செலவிடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மொத்தமாக இதுவரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், ரூ. 12 லட்சம் முதல் ரூ. 22 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக அந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், சுங்கச்சாவடி கட்டணங்கள் உள்ளிட்ட மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட 7 திட்டங்களில் கிட்டத்த 7 லட்சம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல், லஞ்சம், முறைகேடு, சட்ட விரோத பரிவர்த்தனை உள்ளிட்ட புகார்களை விசாரிக்கும் விசாரணை அமைப்புகளான சிபிஐ, என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை உள்ளிட்ட தேசிய விசாரணை அமைப்புகள் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். தேசிய விசாரணை அமைப்புகள் மூலம் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியில் இருப்பவர்கள் தவறு செய்திருந்தால், அதனைக் கண்டுகொள்ளாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து வருகிறது பாஜக என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூறிவருகின்றனர். இது ஒரு புறமிருக்க டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க மதுபான தொழிலதிபர் அமன்தீப் தாலிடம் இருந்து ரூ. 5 கோடி லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பவன் கத்ரி மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இப்படி பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகளில் பட்டியல்கள் தொடர்ந்து வெளி வந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பாஜக, மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் வெளி வந்த வண்ணம் இருப்பது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை கையில் எடுத்துள்ளனர். ஆனால் இதனை தவறான குற்றச்சாட்டு என்று பாஜக மறுத்துள்ளது.