Skip to main content

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடந்த தங்க விழா: அசத்தும் கிராம மக்கள்!

Published on 03/07/2018 | Edited on 03/07/2018

சேர்க்கை குறையும் அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அந்தந்தப் பகுதி இளைஞர்கள், பெற்றோர்கள் எந்த கிராமத்திலும் அரசுப்பள்ளிகளை மூடவிடமாட்டோம் என்று அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் புதிய

மாணவர்களை அரசுப்பள்ளிகளுக்கு இழுக்க புதிய, புதிய திட்டங்களையும் சலுகை, பரிசுகளையும் அள்ளிக் கொடுக்கிறார்கள். இதுவரை தனியார் பள்ளிகள் தான் மாணவர் சேர்க்கைக்காக பரிசுகளையும் சலுகைகளையும் கொடுத்து வந்தது.

 

 


ஆனால் சமீப காலமாக அரசு பள்ளிகளை தரம் உயர்த்தவும், மாணவர்களின் நலனுக்காகவும் இளைஞர்களின் முயற்சி அதிகம். அந்த வகையில் தான் தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான பேராவூரணி வட்டத்தில் உள்ள துளுக்கவிடுதி வடக்கு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க புதிய முறையை கையாண்டு வெற்றியும் கண்டு சட்டமன்ற உறுப்பினர், கல்விதுறை அதிகாரிகளை அழைத்து வந்து வெற்றிவிழாவும் நடத்திவிட்டார்கள் அந்த கிராம இளைஞர்களும், பெற்றோர்களும். அப்படி என்ன வெற்றி விழா.
 

துளுக்கவிடுதி வடக்கு கிராமத்தில் 1998 ம் ஆண்டு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு 2003 ம் ஆண்டு அந்தப் பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த கிராம மாணவர்கள் உயர்நிலைப் படிப்புக்காக 5 கி.மீ வரை செல்ல வேண்டியுள்ளது என்று அக்கிராம மக்கள் உயர்நிலைப் பள்ளி வேண்டும் என்று கோரிக்கை வைத்ததுடன் வைப்புத் தொகை ரூ. ஒரு லட்சத்தையும் செலுத்திவிட்டு 33 ஏக்கர் நிலம் கொடுத்தும் காத்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு தரம் உயர்த்த மாணவர்கள் வேண்டும் என்று கல்வித் துறை அதிகாரிகள் சொன்னதால் மாணவர்களைச் சேர்ப்பது எப்படி என்ற சிந்தனையில் இருந்தனர் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள். அப்போது நடந்த ஆண்டு விழாவில் முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் செந்தில்குமார்  புதிய மாணவர்கள் சேர்க்கப்படும் போது ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ. ஆயிரம் பரிசு வழங்குவதாக அறிவித்தார்.

 

 


அதைக் கேள்விப்பட்ட நேரு மன்ற இளைஞர்கள், முன்னாள் பொருப்பாளர்கள் இணைந்து புதிய மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கிராமம் தங்க நாணயம் வழங்க காத்திருக்கிறோம் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள் என்று அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து ஒருவர் முதல் 5 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேவையான அத்தனை சீருடைகளையும் வழங்குவதாக அறிவித்தார்.

அந்த அறிவிப்புகள் பெற்றோர்களிடம் நன்றாகவே வேலை செய்துள்ளது. தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் குழந்தைகளை துளுக்கவிடுதி அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்த்தார்கள். படிப்படியாக 35 குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். அந்த புதிய மாணவர்களுக்கு தான் தங்க நாணயம், ரொக்கப்பரிசு, சீருடை வழங்கும் விழாவை வெற்றி விழாவாக நடத்தி உள்ளனர் கிராம மக்கள். 
 

விழாவுக்காக பெற்றோர்களும் கிராமத்தார்களும் தங்கள் குழந்தைகளை (புதிய மாணவர்களை) பொன்னம்பல சுவாமி கோயில் வளாகத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். கிராம மக்களால் அழைத்து வரப்பட்ட மாணவ, மாணவிகளை பள்ளி நுழைவாயிலில் காத்திருந்த பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி குழந்தைகளுக்கு திலகமிட்டு வரவேற்றார். தொடர்ந்து புதிய மாணவர்களை பள்ளி மாணவிகள் வரவேற்று அழைத்துச் சென்று அமரச் சொன்னார்கள். அதே போல அந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் சந்தனம் கொடுத்து வரவேற்றனர்.

விழாவில் ஒவ்வொரு புதிய மாணவருக்கும் தங்க நாணயம், மற்றும் ரொக்கப்பரிசு, சீருடைகளை பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் வழங்கினார்கள். பெற்றோர்களும் மாணவர்களும் மகிழ்ந்தனர் கல்வித்துறை அதிகாரிகள் நெகிழ்ந்தனர்.
 

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பிரகலாதன், அண்ணா பரமசிவம் ஆகியோர் தொடக்கப்பள்ளி தொடங்கி குறுகிய காலத்தில் நடுநிலைப் பள்ளியானது. அந்த பள்ளி மாணவர்கள் அடுத்த 10, 12 ம் வகுப்புகளில் சாதித்தார்கள். அதனால் அந்த பலனையும் பாராட்டையும் இந்த கிராமம் அடைய வேண்டும் என்று உயர்நிலைப் பள்ளி கேட்டோம் மாணவர்கள் பத்தாது என்றார்கள்.

அதற்காக புதிய மாணவர்கள் சேர்க்கைகாக வீடு வீடாக சென்றோம். இளைஞர்கள் முன்வந்து பரிசுகளை அறிவித்தார்கள். இப்போது மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துவிட்டது. இனி எங்களுக்கு உயர்நிலைப் பள்ளி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் தான் இந்த வெற்றி விழா. இந்த விழாவில் கலந்து கொண்ட கல்வித்துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினரிடம் மேடையிலேயே கோரிக்கை வைத்துள்ளோம் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அரசுப் பள்ளியில் படித்தவர்கள் தான் இப்படி பொது மேடைகளில் அமரும் இடத்தில் இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு பெற்றோரும், மாணவர்களும் உணர வேண்டும் என்பதை காட்டவே இந்த விழாவை ஏற்பாடு செய்தோம். பள்ளிக்கு சுற்றுசுவர் போன்ற கோரிக்கைகளும் வைத்துள்ளோம்.

பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 105 அரசு பள்ளிகளில் முதல் 5 இடத்தில் எங்கள் பள்ளி இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் இடத்திற்கு பள்ளியை கொண்டு செல்வோம். அதற்காக துளுக்கவிடுதி கிராம மக்கள் மட்டுமின்றி பக்கத்து கிராம மக்களும் துணையாக இருக்கிறார்கள் என்றனர்.
 

தலைமை ஆசிரியை வாசுகி பேசுகையில், இந்த பள்ளியில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இந்த கிராம் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது. மாணவர்களை அதிகம் சேர்க்க வேண்டும் என்று சொன்னதும் பரிசுகளை வழங்கி மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்தார்கள். பெற்றோர்கள் விருப்பப்படி ஆங்கில வகுப்புகளும் நடத்தி வருகிறோம். மாணவர்களின் கல்வியிலும் குறையில்லை. இன்னும் பலர் தனியார் பள்ளிகளில் இருந்து வருவதாக பெற்றோர்கள் சொல்லி இருக்கிறார்கள் என்றார். 

 

விழாவில் பேசிய முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் செந்தில்குமார் பேசுகையில், கல்வித்துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் எல்லாரும் இந்த மேடையில் இருப்பதால் ஒரு கோரிக்கை முன்வைக்கிறேன் என்று தொடங்கி எங்கள் கிராமத்து குழந்தைகள் சத்துக்குறைவாக இருப்பதால் படிப்பில் கவணம் செலுத்துவதில் சிரமம், சோர்வுகள் ஏற்படுகிறது. அவர்களுக்கு அந்த குறையை போக்க தற்றோது வாரத்திற்கு ஒரு நாள் பால் கொடுக்கவும் அடுத்த ஆண்டு முதல் வாரத்திற்கு இரு நாட்கள் என்று 5 ஆண்டுகளுக்குள் வாரத்தில் 5 நாட்களும் மாணவர்களுக்கு பால் வழங்க நான் தயாராக இருக்கிறேன்.  நீங்கள் அனுமதி அளித்தால் வரும் திங்கள் கிழமை முதல் செயல்படுத்த காத்திருக்கிறேன் என்றார். மேலும் படிக்கிறது தனியார் பள்ளி கேட்கிறது அரசு வேலை என்பது கேவலமாக உள்ளது. அதனால் அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கே அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார். 

 

 

 

அதன் பிறகு பேசிய பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி பாண்டியன், முன்னால் கவுன்சிலர் கேட்டது போல பால் வழங்க நாங்கள் அனுமதி கொடுக்க முடியாது. அதை அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என்றார்.
 

இறுதியாக பேசிய பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, பேராவூரணி தொகுதியில் 3 பள்ளிகளை தரம் உயர்த்த கல்வித்துறை அமைச்சரிடம் கேட்டுள்ளேன். அதில் துளுக்கவிடுதி அரசு பள்ளியும் உள்ளது. விரைவில் இந்தப் பள்ளி அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தரம் உயர்த்தப்படும். மேலும் பள்ளிக்கான சுற்றுச்சுவர் கட்ட விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கும் என்றவர்.
 

அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு அரசாங்கம் நிறைய சலுகைகள் கொடுக்கிறது என்பதை மக்களிடம் எடுத்துச் சென்றதுடன் அல்லாமல் கூடுதலாக பரிசுகளை வழங்கி மாணவர்கள் சேர்க்கையை உயர்த்திய பெற்றோர்கள், இளைஞர்கள் கிராம மக்களை பாராட்டாமல் இருக்க முடியாது. இதே போல ஒவ்வொரு கிராமத்திலும் கிராம மக்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்றார். மாணவர்களுக்காக தங்க திருவிழா கோலகலமாக முடிந்தாலும் இந்த விழாவை பார்த்துக் கொண்டிருந்த அடுத்தடுத்த கிராம இளைஞர்களம் நாமளும் ஏன் இப்படி செய்யக் கூடாது என்ற உரையாடளுடன் சென்றனர்.