Skip to main content

“இலக்கணக் கண்கள் அடையாளம்

Published on 07/01/2018 | Edited on 08/01/2018
“இலக்கணக் கண்கள் அடையாளம் காணவில்லை!”
- சிஷ்யனை சிலாகிக்கும் குரு!

பள்ளியிலோ, கல்லூரியிலோ, மாணவர்கள் பலரும், கற்பிக்கும் ஆசிரியர்களின் கண்டிப்புக்கு ஆளாவது உண்டு. படிக்கும் காலத்தில் சுட்டித்தனமாக இருந்து, பிற்காலத்தில் உழைப்பால் முன்னேறி, நல்ல நிலையை அடையும்போது, அப்போது கண்டித்த அதே ஆசிரியர், ‘இவன் என் மாணவன்’ என்ற பெருமிதத்துடன், இப்போது பாராட்டுகிறார் என்றால், அந்த மாணவர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  ‘வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றதைப்போல்’ என்று சொல்வார்கள் அல்லவா! அப்படி ஒரு பாராட்டாக, தன் ஆசிரியரின் பாராட்டை,  அந்த மாணவர் எடுத்துக்கொள்வார். 
 
‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்ற பழமொழி ஒருபுறம் இருந்தாலும்,  ‘பிற்காலத்தில் இந்த மாணவர் எந்த அளவுக்கு உயர்வாரோ?’ என்றெல்லாம் ஆசிரியர்களால், அத்தனை மாணவர்களையும் ‘ஸ்கேன்’ செய்து பார்த்துவிட முடியாது. அதே நேரத்தில், தன்னிடம் படித்த மாணவர், பேரும் புகழும் அடையும்போது, ‘தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்று வள்ளுவர் கூறுவது போல, புளகாங்கிதம் அடைவார் அந்த ஆசிரியர். 

எளிய நிலையில் வாழ்க்கைச்சூழல் இருந்தாலும், தன்னம்பிக்கையோடு உழைத்தால், உயர்வடையலாம் என்பதற்கு, தன் மாணவர் ஒருவரை உதாரணம் காட்டுகிறார் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரான ச.மாடசாமி. அவரது கட்டுரை ஜனவரி 5, 2018 தேதியிட்ட தி இந்துவில்,  இளமை - புதுமை பகுதியில்,  ‘குரு சிஷ்யன்: கண்கள் காணாத சித்திரம்’ என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கிறது.  உணர்ந்து உத்வேகம் பெறக்கூடிய இளைஞர்களுக்கான கட்டுரை என்பதால், அதனை அப்படியே தந்திருக்கிறோம்.
 
வகுப்பறையில் அமைதியாக உட்கார்ந்து, பாடத்தைக் கவனித்து, பரீட்சை எழுதி, வெற்றிபெற்று விடைபெற்றுப்போன மாணவர்கள் பலர் ஞாபக வெளியில் நிலைக்கவில்லை. வகுப்பறைக்கு வெளியே கைகோத்தும் முரண்பட்டும் தொடர்ந்து வந்தவர்கள் எப்போதும் நினைவு எட்டும் தூரத்திலேயே நிற்கிறார்கள். வகுப்பறையைவிட முக்கியமானவை - வராண்டாவும் மைதானமும் மேடையும் சைக்கிள் ஸ்டாண்டும்தாம்! மாணவர்கள் மனம்விட்டுப் பேசிக் கைவீசி நடக்கும் இடங்கள் இவை! கல்லூரிகளில் மாணவர் போராட்டங்கள் பல மையம்கொண்டது சைக்கிள் ஸ்டாண்டுகளில்தான்!

கோபாலை நான் முதன்முதலில் சந்தித்ததும் வராண்டாவில்தான். நண்பர்கள் சூழ்ந்துவர, வராண்டாவில் முதல்வர் அறையைக் கடந்து சென்றார். நான் முதல்வரோடு நின்றுகொண்டிருந்தேன். கோபாலின் படை நகர்ந்ததும், முதல்வர் சொன்னார்: “சேட்டை! கொஞ்சம் கவனிங்க”.

கோபால் என் வகுப்பறை மாணவர் அல்லர். முதல்வர் கவனிக்கச் சொல்லிவிட்டார் அல்லவா? அதனால் அடிக்கடி அவர்களைக் கவனித்தேன். வேறெங்கே, வராண்டாவில்தான்! சுற்றி எப்போதும் நண்பர்கள். பயமறியாத முகங்கள். கலகலப்பான உரத்த பேச்சு. கவனத்தைச் சட்டென ஈர்க்கக்கூடிய ஆற்றல் கோபாலுக்கு இருந்தது.

கோபால் கல்லூரியில் படித்து 30 ஆண்டுகளுக்கு மேலிருக்கும். இன்றும் சில நிகழ்வுகள் ஞாபகத்தில் இருக்கின்றன. கல்லூரி நாள் விழாவில் ‘சின்ன மாமியே! உன் சின்ன மகளையே’ என்ற பாடலுக்குக் கோபாலும் நண்பர்களும் உற்சாகமாக நடனம் ஆடினார்கள். மாணவர்கள் அந்த ஆட்டத்தைக் கொண்டாடியதும் ஆசிரியர்கள் சிலர் முணுமுணுத்ததும்கூட ஞாபகத்துக்கு வருகின்றன.

விடைபெறும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள், கல்லூரி இறுதி நாளில் விதவிதமாக அட்டகாசம் செய்வார்கள். கற்பனை கொடிகட்டிப் பறக்கும். அன்று கோபால் தலைமையில் ஒரு குழு புறப்பட்டிருந்தது. அந்தக்குழு ஒவ்வொரு வகுப்பறை முன்னாலும் வந்து நடனமாடி, பாட்டுப்பாடி விடைபெற்றது. சில வகுப்பறைகளைத் தவிர்த்திருந்தார்கள். என் வகுப்பறைக்கும் வரவில்லை. மறுநாள் அந்தக் குழுவில் இருந்த ஒரு மாணவரிடம் காரணம் கேட்டேன்.



“சார்! உங்ககிட்ட கொஞ்சம் பயம்’ என்றார் மாணவர். சில ஆசிரியர்கள் எப்போதும் சீறுவார்கள் என்று சொல்லமுடியாது. அதனால் தவிர்த்திருக்கிறார்கள். நான் கோபாலைக் கவனித்தது போல, கோபாலும் என்னைக் கவனித்துத்தான் வந்திருந்தார். ஆனாலும், கல்லூரி வளாகத்துக்குள் எங்களிடையே பெரும்பேச்சு நிகழ்ந்ததில்லை. பின்னாளில், தமிழகம் அறிந்த ஆளுமையாக இவர் உருவெடுப்பார் என்ற அடையாளத்தையும் எங்கள் கண்கள் கண்டதில்லை. எங்கள் ‘இலக்கணக் கண்கள்’ எதைத்தான் கண்டுபிடித்தன?

ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆசிரியர் அலுவலர் பிரச்சினை தொடர்பாக ஒரு கட்டுரை கொடுக்க ‘தராசு’ பத்திரிகை அலுவலகம் போயிருந்தேன். ஆசிரியரைப் பார்த்துவிட்டுப் படி இறங்குகையில் ‘சார்... சார்...’ என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். கோபால்! ‘அடடே! என்னப்பா இங்கே?’ என்று கேட்டேன். ‘இங்கே லே அவுட் ஆர்டிஸ்டாக இருக்கிறேன்’ என்றார் கோபால். அவர் வரைந்து வடிவமைத்த படங்களை எல்லாம் எனக்குக் காட்டினார். பிரமித்துப் போனேன்.

“நீ ஓவியன் என்பது கல்லூரியில் படித்தபோது யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டேன். ‘இல்லை’ என்று ஏமாற்றத்துடன் கோபால் உதட்டைப் பிதுக்கினார். இன்றுவரை அது ஞாபகத்தில் இருக்கிறது. பிறகு, நெடுநேரம் பேசினோம். ஆசிரியர் போராட்டம், மாணவர் போராட்டம் என உரையாடல் பெருகியது. கல்லூரி வளாகத்துக்குள் கட்டுப்பட்டுக் கிடந்த உரையாடல்கள் பத்திரிகை அலுவலகத்தில் கட்டுடைத்து வெளியேறின.

பின்னர், அவர் ‘நக்கீரன்’ கோபால் ஆனார். அரசியல் சிந்தனைக் களத்தில் தனக்கென ஓர் இடம் பிடித்தது அந்தப் பத்திரிகை. தமிழகம் அறிந்த முக்கியமான ஆளுமையானார் கோபால். இந்தியா முழுக்க கோபாலின் துணிச்சல் கவனத்துக்கு வந்தது. படித்த காலத்தில் நாங்கள்தான் அவரைக் கூர்ந்து கவனிக்கவில்லை.

புகழ் வந்த பிறகும் அவர் எங்களைத் தொடர்ந்து கவனித்து வந்தார். வயது வந்தோர் கல்வித் திட்ட அலுவலராக, நான் கிராமங்களில் மாணவரோடு அலைந்தபோது, ஒளிப்படங்களோடு நக்கீரனில் பிரசுரித்தார். அதைப் படித்துவிட்டு, அன்றைய கல்வி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் எங்கள் கல்லூரி முதல்வருக்குத் தம் கைப்பட ஒரு பாராட்டுக் கடிதம் எழுதி அனுப்பினார்.
 
என்னையும் பத்திரிகையில் எழுதத் தூண்டினார் கோபால். தனியார் கல்லூரிகளில் உள்ள பிரச்சினைகள், போராட்டங்கள் குறித்து ‘ஜென்னிமா’ என்ற புனைபெயரில் 1990-களில் பல கட்டுரைகள் எழுதினேன். அதே நேரம் என் ஆசிரியர் ராஜு நடத்திய ‘புதிய ஆசிரியன்’ பத்திரிகையிலும் எழுதினேன். என் மாணவர் நடத்திய ‘நக்கீர’னிலும் எழுதினேன். என்னால் மறக்க முடியாத வாய்ப்புகள் அவை.



இரண்டாண்டுகளுக்கு முன்பு கோபால் தொலைபேசியில் அழைத்தார். ‘மகள் திருமணம். அவசியம் வந்துவிடுங்கள்’ என்றார். நானும் மனைவியும் சென்றோம். கல்யாண மண்டபத்தில் பெருங்கூட்டம். மணமக்களைச் சந்தித்துப் பரிசு வழங்கவே பெரிய வரிசை. வரிசையில் நின்று ஒரு வழியாக மேடைக்குப் போனோம். மணமக்களையும் கோபாலையும் பார்த்தோம். ‘எங்க சார்! எங்க சார்!’ என்று மேடையில் இருந்த ஒவ்வொருவருக்கும் என்னை அறிமுகம் செய்தார் கோபால். ஆசிரியர் மனம் நிரம்ப வேறென்ன வேண்டும்?

திருமணத்துக்கு வந்த பிரபலங்கள் கோபாலின் அரசியல், அவருடைய தைரியம், பத்திரிகை நிர்வாகம் எனப் பல சிறப்புகளையும் பேசினார்கள். எனக்கோ, கோபாலுக்குள்ளிருந்து நாங்கள் பார்க்கத் தவறிய கலைஞனின் ஞாபகம்தான் எப்போதும் போல் வந்தது!

-தன் மாணவர் நக்கீரன் கோபால் குறித்த கட்டுரையை நெகிழ்ச்சியுடன் இவ்வாறு நிறைவு செய்திருக்கிறார் பேராசிரியர் ச.மாடசாமி

‘விதைக்குள் விருட்சம்’ ஆக, நம் ஒவ்வொருவருக்குள்ளும் ‘ஒரு திறமைசாலி’ ஒளிந்திருக்கிறான். வெளிக்கொண்டு வரவேண்டும்! அவ்வளவுதான்! வெற்றி மேல் வெற்றிதான்!

(நன்றி – தி இந்து)

- சி.என்.இராமகிருஷ்ணன்

சார்ந்த செய்திகள்