Skip to main content

ஆன்மீக அரசியலை பேசிக்கொண்டிருந்த ரஜினி ஏன் அண்ணாவை பற்றி பேசுகிறார்..? - மருத்துவர் எழிலன் கேள்வி!

Published on 18/03/2020 | Edited on 18/03/2020


நீண்ட இழுபறிக்கு பிறகு சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை தொடர்பாக சில செய்திகளை தெரிவித்தார். தனக்கு முதல்வர் பதவியில் விரும்பம் இல்லை என்றும், ஆட்சி அதிகாரத்தை தான் ஏற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அவரின் ரசிகர்கள் அவரின் இந்த கருத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் இதுதொடர்பாக மருத்துவர் எழிலனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 
 

g


ரஜினிகாந்தின் பேச்சை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அதை எப்படி பார்க்கிறீர்கள், அவர் சொல்ல வந்த அனைத்து விஷயங்களும் மக்களிடம் நேரடியாக போய் சேர்ந்துள்ளதாக நினைக்கிறீர்களா? 

 

ரஜினியின் அந்த கூட்டத்தில் அவர் நிறைய உண்மைகளை பேசி இருக்கின்றார். இதற்கு முன்பு அவர் நடத்திய எந்த கூட்டத்திலும் சொல்லாத விஷயங்களை தற்போது அவர் வெளிப்படையாக பேசி இருப்பதாகவே நான் நம்புகிறேன். இவரின் முழு உரையும் அவருடைய ஸ்கிரிப்ட் என்றுதான் நினைக்கிறேன். ஆன்மீக அரசியல் என்று பேசினார். அதைப்பற்றி அந்த கூட்டத்தில் எதுவும் பேசவில்லை, அப்போது அவர் பேசிய ஆன்மீக அரசியலுக்கும் அதற்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது. இதில் இருந்து அவர் என்ன சொல்லவருகிறார் என்று தெரிகிறது. என்னை விட்டுவிடுங்கள் பாஸ் என்று அவரின் அரசியல் வருகையை எதிர்பார்ப்பவர்களுக்கு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு ட்விட் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தான் சொன்ன கருத்தை மக்களுக்கு சரியான முறையில் கொண்டு சேர்ந்த ஊடகங்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். அவர் சொல்ல வந்த கருத்துதான் என்ன? எது மக்களுக்கு போய் சேர்ந்துள்ளது?

எனக்கு வயசாயிடுச்சி, நான் ஆயிரம் உடல் உபாதைகளை தாண்டி வந்துள்ளேன் என்று கூறுவதை எல்லாம் ஒரு மருத்துவராக எப்படி புரிந்து கொள்வேன் என்றால், எனக்கு ஓய்வு தேவை என்று அவர் சொல்வதாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும். உலகத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளையும் வைத்துக்கொண்டு அவர் மிக வெளிப்படையாக அதைத்தான் சொல்லியுள்ளார். 

அப்படி அவர் சொன்னது உண்மை என்றாலும், அண்ணாவை எனக்கு பிடிக்கும் என்பதில் தொடங்கி அவர் முன்வைத்த சிந்தாந்தம், தான் தேர்தல் அரசியலில் போட்டியிடவில்லை என்றாலும், தான் சொல்லும் நபர் ஆட்சியில் இருப்பார் என்று புதிய அரசியல் சிந்தாந்தத்தை தொடங்கி வைத்துள்ளார் என்பது போல் அவரது நடவடிக்கைகள் உள்ளதே? 

அடிப்படையில் அது வேடிக்கையான ஒன்றாக இருக்கிறது. அவர் ரொம்ப தெளிவாக ஒரு விஷயத்தை சொல்கிறார். என்னை ஓட்டு பிரிப்பதற்காகத்தான் வர வேண்டும் என்று விரும்புகிறீர்களா, என்று தன்னை அரசியலுக்கு இழுப்பவர்களுக்கு பதில் சொல்லியுள்ளார். தேர்தலில் பத்து முதல் பதினைந்து சதவீதம் வாக்குகளை மட்டும்தான் பெற முடியும் என்பதையும் கூட, அவர் விலக்கியுள்ளார். இரண்டு கட்சிகள் வலிமையாக உள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள மோதுமான பலம் நம்மிடம் இருக்க வேண்டும் என்று கூறியதாகட்டும், இப்போது இல்லை என்றால் அடுத்த தேர்தலில் எனக்கு 76 வயது ஆகியிருக்கும் என்பதாகட்டும் இவை அனைத்துமே அரசியலில் இருந்து அவர் தப்பிக்க போடப்பட்ட பிளானாகவே கருத வேண்டியுள்ளது. இது ரஜினியின் ஈ பிளானகவே கருத வேண்டியுள்ளது. அதாவது எஸ்கேப் பிளான். காமராஜருடைய கே பிளானை பற்றி கேள்விப்பட்டு இருப்போம். அதுவே ஒரு தோல்வி திட்டம்தான். அதைப்போலத்தான் இதுவும் அமையும். 

காமராஜருக்கு அமைந்த சூழ்நிலையே நடிகர் ரஜினிகாந்துக்கும் அமையும் என்பது எப்படி சரியான புரிதலாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். இது ஒரு ஆர் பிளானாக கூட இருக்க வாய்ப்புள்ளதே? அதாவது ரஜினிகாந்த் பிளான்? 

ரஜினிகாந்துக்கு கொடுத்தது பி பிளான்தான். ஒரு குறிப்பிட்ட பிரிவினர், பாஜகவுக்கு ஆதரவாக திராவிட கட்சிகளுக்கு எதிராக ஒரு கட்சியை நிறுவ பார்த்தார்கள். அவர்களுக்கு ரஜினி ஒரு வாய்ப்பாக தற்போது அமைந்துள்ளார். அவர்களுக்கு ரஜினி ஒரு மெசேச் சொல்கிறார். இல்லை என்றால் ஆன்மீக அரசியலை பேசிக்கொண்டிருந்த அவர் ஏன் அண்ணாவை பற்றி பேச போகிறார். ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற ஆட்கள் எல்லாம் அவரை திராவிட அரசியலுக்கு ஏதிராக அவரை கொண்டுவர பார்க்கிறார்கள். அவருக்கெல்லாம் தற்போது ரஜினி பதில் சொல்லியுள்ளதாகவே நாம் கருத வேண்டியுள்ளார்.