
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.
இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராணுவ வீரர்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையாக மாறியது. அவரின் பேச்சுக்கு தமிழக முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதிலும் குறிப்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் செல்லூர் ராஜுக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது கருத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இந்திய நாட்டை கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்து வரும் என்னுடைய உயிரினும் மேலான ராணுவ வீரர்களை நான் என்றும் வணங்குபவன் அவர்களின் தியாகத்தை வணங்குபவன். என்னுடைய செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க.வின் பேரணி குறித்து கேட்டபோது அது நாடகம் அவர்கள் மத்திய அரசையும் பாராட்டாமல் நாடகம் போடுகிறார்கள் என்று சொல்லியதை தி.மு.க தொலைக்காட்சிகள் என்னுடைய பேச்சை திரித்து போட்டுவிட்டார்கள் . நான் என்னுடய எக்ஸ் வலைதளத்தில் உடனடியாக மறுத்து பதில் போட்டுள்ளேன். ஆனாலும் இராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருக்கு மேயானால் அதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்னுடைய குடும்பம் முன்னால் இன்னால் இராணுவ வீரர்களின் குடும்பம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.