Skip to main content

ஜெயலலிதா இல்லியே! யாரும் இல்லியே! -அதிமுக ஸ்கேன் ரிப்போர்ட்! பகுதி 3

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

திமுகவுக்கு ஏற்பட்ட நிலைதான் அதிமுகவுக்கும்!

இதெல்லாம் கட்சிக்குள் பெரும் புகைச்சலாகக் கிளம்பிய போது, அதை நாங்கள் நம்ப மறுத்தோம். ஆனால், கட்சி இன்று பெரும் தோல்வியை சந்தித்த பின்னும், நீங்கள் இருவரும் தொடர்ந்து அமைதி காட்டுகிறீர்களே? அதுதான், நடந்ததையெல்லாம் நிஜம் என்று எங்கள் முகத்தில் அறைகிறது. தி.மு.க., ஆட்சியில், அமைச்சர்கள் கோடிகளைக் குவித்து, சிற்றரசர்களைப் போல் வலம் வந்தார்கள் என்று நாம்தானே  அவர்களைக் குற்றம் சாட்டினோம்.
 

jayalalithaa


அது மக்கள் மனதில் பதிந்து, அந்த ஆட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தியது. அதனால்,  அந்த ஆட்சிக்கும், தி.மு.க.வுக்கும் எதிராக மக்கள் கொந்தளித்தனர். ஆனால், இன்று நடப்பது என்ன? தற்போதைய தமிழக அமைச்சரவையில் அமைச்சர்கள் பலரும், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெறப் போகின்றனர் என்ற எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டுக்களைப் புறம்தள்ள முடியவில்லை. இதே நிலை நீடித்தால், தி.மு.க.,வுக்கு ஏற்பட்ட நிலை நமக்கு ஏற்பட எவ்வளவு நேரம் பிடிக்கும்?

தோல்விக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை!

மிகமிக சாமான்யர்களாக இருந்துதான், தற்போதைய உயர்ந்த நிலையை எட்டியிருக்கும் நீங்கள் இருவரும், அ.தி.மு.க. என்னும் ஆலமரம், அழிவின் விளிம்பில் நிற்பதை அறிந்து, அதில் இருந்து காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இன்னும் எங்களுக்கு உள்ளது.  தமிழகம் முழுவதும் கட்சி, மிகப் பெரிய தோல்வியை சந்தித்தபோதும், தேனியில் மட்டும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றிருக்கிறார். இது நமக்கான ஆறுதல் வெற்றி. ஆனால், அதே தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டசபை இடைத்தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறோம். அது யாருடைய கவனக்குறைவு? அல்லது உள்ளடி வேலையா? இதைக் கண்டறிந்து களைய வேண்டாமா? கழகத்துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஏற்கனவே அவரது சொந்தத் தொகுதியான ஒரத்தநாட்டில் 2016-ல் தோல்வி அடைந்தார். தற்போது, அவரது சொந்த மாவட்டமான தஞ்சாவூரில் இருக்கும் தஞ்சாவூர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில், அவரது தீவிர ஆதரவாளரான காந்தியை நிறுத்தியும், கட்சிக்கு படு தோல்வி. இதற்கு யார் காரணம்? கண்டறிய வேண்டாமா?
 

ravindranath


திருவாரூர் திமுக தலைவர்  கருணாநிதியின் சொந்த ஊர். அந்த ஊரில் போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் அவர் வென்றார். அவரது மறைவுக்குப் பின் நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் நிறுத்தப்பட்ட பூண்டி கலைவாணன், கருணாநிதியைக் காட்டிலும் கூடுதல் ஓட்டு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். அப்படியென்றால், திருவாரூரில் நடந்தது என்ன? யோசிக்க வேண்டாமா? தோல்விக்கு யார் மீது நடவடிக்கை? அந்த மாவட்ட அமைச்சர் ஆர்.காமராஜ் இதற்கு பொறுப்பேற்க வேண்டாமா? அ.தி.மு.க., 1973-ல், முதன் முதலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து வென்ற தொகுதி - திண்டுக்கல் லோக்சபா தொகுதி. அதனாலேயே, திண்டுக்கல்லை, புண்ணிய பூமியாக அ.தி.மு.க.,வின் ஒவ்வொரு தொண்டனும் நினைக்கிறான். ஆனால், அங்கே கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டவர் படு மோசமான தோல்வியை அடைந்திருக்கிறார். எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க.,வின் வேலுச்சாமி, ஐந்தே கால் லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையில் ஓட்டு வித்தியாசம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 

இதற்குக் காரணம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் கட்சியின் அமைப்புச் செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆகியோருக்கு இடையே நடக்கும் பனிப்போர்தான் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அவர்களுக்கு எதிராக எப்போது சாட்டையைச் சுழற்றுவீர்கள்? திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்ட கழக வேட்பாளர் முனியாண்டி, கட்சியின் அடிமட்டத் தொண்டர். அவர், அங்கே வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு இருந்தது. ஆனால், அங்கே ராஜன் செல்லப்பா, அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரிடையே நடந்த கருத்து மோதலால், கட்சி தோல்வி அடைந்திருக்கிறது.   அதேபோல், சென்னை பெரம்பூரில் தோல்வி. காரணம், அமைச்சர் ஜெயக்குமார். அதுபோல வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், ஆம்பூர் தொகுதிகளின் மிகமோசமான தோல்விக்கு காரணம் அமைச்சர்கள் கே.சி.வீரமணியும் நிலோபர்கபீலும்தான். இங்கும் கோஷ்டிப் பூசலாலேயே கட்சிக்கு தோல்வி.   காரணமான இவர்கள் மீது எடுக்கவிருக்கும் நடவடிக்கை என்ன?

அதிமுகவை விட்டு விலகிச்சென்ற வாக்கு வங்கி!

கட்சியில், ஜாதி-மதம் என்று பார்க்காமல், அனைவருக்கும் பதவிகளை வாரி வழங்கியவர் ஜெயலலிதா.  ஆனால், சசிகலாவின் ஆதிக்கம் அதிகமான பிறகு, ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் அங்கே ஆதிக்கம் செலுத்தத் துவங்கினர். இருந்தாலும், அவர்களையெல்லாம் ஓரளவுக்கு அடக்கியே வைத்திருந்தார் ஜெயலலிதா.  
 

sasikala ttv dinakaran


சசிகலா கும்பல் கட்சியில் ஆதிக்கம் செலுத்தியதால், ஆண்டாண்டு காலமாக நம்மிடம் இருந்த தலித் ஓட்டு வங்கி, முழுமையாக நம்மை விட்டுச் சென்றிருக்கிறது. இந்த நிஜத்தை அறிந்த பிறகாவது, தலித் ஓட்டுக்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டாமா? இந்தத் தேர்தலில், சசிகலா ஆதரவு நிலை எடுத்தவர்கள் மட்டுமே, அக்கும்பல் நடத்தும் கட்சியைத் தாங்கிப் பிடித்தனர். சசிகலா ஆதரவாளர்கள் அதிகமாக வசிக்கும் தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி போன்ற தொகுதிகளில் மட்டும், அ.ம.மு.க.,வைச் சேர்ந்தவர்கள், ஒரு லட்சம் ஓட்டுக்கள் வரை பெற்றனர். மற்ற தொகுதிகளில் சொல்லிக் கொள்ளும்படியான ஓட்டுக்களை அவர்கள் பெறவில்லை. இது நமக்கான ஆறுதல். 

ஆனால், குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள், முழுமையாக தினகரன் பக்கம் நிற்பார்களேயானால், அந்த ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு, நம் அமைச்சரவையில் ஏன் கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டும்?, அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் எட்டு அமைச்சர்கள் வரையில் கொடுத்திருப்பது ஏன்? இனியாவது, அந்த நிலையை மாற்ற வேண்டாமா? இப்படிப்பட்ட அமைச்சர்கள் சிலர்தான், தேர்தல் நேரத்தில், அ.ம.மு.க.,வுக்கு, மறைமுகமாக நிதி அளித்ததோடு, தேர்தல் வேலையும் பார்த்தனர் என்பதை, இன்னுமா உளவுத்துறையினர் உங்களுக்குச் சொல்லவில்லை?  எம்.ஜி.ஆர்., காலம் முதற்கொண்டு, இன்று வரையிலும், பதவி சுகத்தை மட்டுமே அனுபவித்து வருபவர் தம்பிதுரை. அவராலேயே, கொங்கு பகுதியில் பெரிய அளவிலான தோல்வி கிடைத்திருக்கிறது. அவரால் கட்சிக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. அவரே நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார். இனியும் ஏன் அவரைப் போன்றோருக்கு ஓய்வளிக்கக் கூடாது.

முகம் சுளிக்க வைக்கும் தலைவர்கள்!

விரைவில் ராஜ்யசபாவுக்கான தேர்தல் வரவிருக்கிறது. கட்சிக்கு உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் தகுதியான நபர்களாகப் பார்த்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அதைவிடுத்து, பணம் உள்ளவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்றால், கட்சிக்கு தோல்வி என்பது நிரந்தரமாகிவிடும். கட்சி, படு பாதாளத்தில் இருக்கும் இந்த நிலையில், அதைத் தூக்கி நிறுத்துவதற்கான எந்த முயற்சியும் யாராலும் எடுக்கப்படவில்லை. ஆனால், இன்னாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று, டில்லிக்கு ஆளாளுக்கு காவடி எடுப்பது தொண்டர்களாகிய எங்களை முகம் சுளிக்க வைக்கிறது.
 

modi ops eps


பதவிகள் வரும்; போகும். ஆனால், கட்சி என்னும் ஆலமரம் இருந்தால்தான், எதுவுமே நடக்கும். முதல்வர் மற்றும்  துணை முதல்வராக இருக்கும் உங்கள் இருவர் குறித்தும், நீங்கள் நல்லவர்களா? கெட்டிக்காரர்களா? என்று  கட்சித் தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், வேறு வழியில்லை. நீங்கள் இருவரும்தான் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, கட்சியைத் தூக்கி நிறுத்தும் காரியங்களில் இறங்க வேண்டும். 

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு மரணங்கள், சேலம் எட்டுவழிச்சாலை திட்டம், மீத்தேன், நீட் போன்ற விஷயங்களில் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டதன் விளைவே, இந்தத் தோல்வி. இந்தத் தேர்தலில், கமல் கட்சி குறிப்பிட்ட சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது.  அடுத்து ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார். எதையும் கணித்துச் சொல்லிவிட முடியாது.  

அரசியலில் அடுத்து என்ன சுனாமி வருமோ? அப்படி வந்துவிட்டால், அதிமுக என்னும் ஓட்டைப் படகு மூழ்கடிக்கப்பட்டு, இருந்த சுவடே தெரியாமல் போய்விடும். என்ன நடக்கப் போகிறது என்பதை காலம்தான் தீர்மானிக்கும் என்றாலும், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை, உண்மையான தொண்டர்களில் ஒருவனாக, கடைக் கோடியில் இருந்து பார்த்துக்கொண்டே இருப்பேன்.” என்று நீண்ட பெருமூச்சுவிட்டார். அதிமுக என்னும் ஆலமரம் ஒரேயடியாகச் சாய்ந்துவிடக் கூடாது என்ற கவலை இவரைப் போன்ற தொண்டர்களை ரொம்பவே வாட்டி வதைக்கிறது. 

 

முந்தைய பகுதி:


ஜெயலலிதா இல்லியே! யாரும் இல்லியே! -அதிமுக ஸ்கேன் ரிப்போர்ட்! பகுதி 2
 

 

Next Story

தமிழக பா.ஜ.க.வினருக்கு பிரதமர் மோடி பாராட்டு! 

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Prime Minister Modi praises Tamil Nadu BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் இந்த மக்களவை தேர்தலில் திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அ.ம.மு.க. பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

இந்நிலையில் பிரதமர் மோடி நமோ செயலி (NAMO APP) மூலம் ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பாஜகவின் அனைத்துத் தொண்டர்களும் மிக நீண்ட காலமாக நன்றாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர். ‘எனது பூத், வலிமையன பூத்’ என்றால் எனது வாக்குச் சாவடி வலிமையானது என்று பொருள். இந்த திட்டம் அனைத்து பா.ஜ.க. தொண்டர்களையும் இணைப்பதுடன் ஒருவருக்கொருவரும் கற்றுக்கொள்ள உதவும்.

தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் வணக்கத்தோடு பேசத் தொடங்குகிறேன், ஆனால் இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஒரு தொண்டர் மற்றொரு தொண்டரை வாழ்த்துகிறார். வணக்கம் என்றவுடன், தொண்டர்களுக்குள் ஒரு உணர்வு வரும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பள்ளி நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம், 25, 30 வருடங்கள் கடந்தாலும், சிறியவர், பெரியவர் என்று யாரும்  பாராமல் ஒருவரை ஒருவர்  மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார்கள். அதேபோல், இது தேர்தல் பணி தொடர்பான ஒரு திட்டம் என்பதால் நானும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறேன். உங்கள் எல்லோரையும் போல என் வாழ்வின் பெரும்பகுதியை ஒரு தொண்டனாகவே உழைத்திருக்கிறேன், அதனால்தான் இன்று நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருவதால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகளுக்காக கடந்த முறை தமிழகம் வந்தபோது தமிழக மக்களின் ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொண்டர்களின் கடின உழைப்பைப் பார்க்க முடிந்தது, அப்படிப்பட்ட தொண்டர்களைப் பெற்றதை பெருமையாக உணர்ந்தேன். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்மாதிரியாக கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதும், அதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதும் எங்களது உறுதி. பா.ஜ.க.வின் பெண் தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

போதைப்பொருட்கள் நம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அழிக்கும். கடந்த நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள் பதுக்கல்களும், அதற்கு முக்கிய காரணமானவர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்புடையவர்கள். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே நீங்கள் அனைவரும் நம் குடும்பங்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” எனப் பேசினார். 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.