Skip to main content

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற இரத்தம் கொடுக்க தயார் - கரோனாவில் இருந்து மீண்டவர் உறுதி!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020


உலக நாடுகளை கரோனா ஆட்டிப்படைத்து வருகின்றது. வல்லரசு நாடுகள் கூட அதன் ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வரும் சூழ்நிலையில், இந்தியாவில் அதன் பாதிப்பு என்பது சமூகப்பரவல் என்ற அளவிற்கு செல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அந்தப் பாதிப்புக்கு உள்ளாகி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பியுள்ளார்கள். மருத்துவமனை நாட்கள் எப்படி இருந்தது, அடுத்து அவர்களின் நோக்கம் என்னவாக இருக்கிறது போன்றவற்றை அந்த நோயில் இருந்து மீண்டவர் தற்போது நம்மிடம் தெரிவித்துள்ளார்.

 

 

 

g



இதுதொடர்பாக அவர் கூறும்போது, " நாங்கள் அனைவரும் தில்லி மாநாட்டில் கலந்துகொண்டு மார்ச் 24-ம் தேதி தமிழகம் வந்தோம். இங்கு அடுத்த ஒரு வாரத்திற்கு எங்களை நாங்களே தனிமைப்படுத்திக் கொண்டோம். பிறகு இந்த மாதம் முதல் தேதி எங்களைப் பரிசோதனை செய்தார்கள். பரசோதனை செய்ததில் எங்களுக்கு கரோனா பாசிட்டிவ் என்று வந்தது. எனவே நாங்கள் மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டோம். கடந்த 16-ம் தேதி வரை நாங்கள் மருத்துவமனையில்தான் இருந்தோம். மருத்துவர்கள் எங்களை நல்ல முறையில் பார்த்துக் கொண்டார்கள். கடவுளின் ஆசியால் எங்களுக்கு மருத்துவமனையில் இருந்த நாட்களில் எதுவும் செய்யவில்லை. மருத்துவர்கள் வந்து சளி இருக்கிறதா, உடல் வலி, அடிவயிறு வலி, ஜூரம் உள்ளிட்டவை இருக்கிறதா என்று கேட்பார்கள். 

எங்களுக்கு அந்த மாதிரியான பிரச்சனைகள் எதுவும் வரவில்லை. சளி தொல்லை சிறிது இருந்தவர்களும் இந்த 16 நாட்களில் அனைத்தும் சரியாகப் போனது. கடந்த 14-ம் தேதி மீண்டும் எங்களைச் சோதனை செய்தார்கள். அடுத்த நாள் ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்தது. பிறகு அடுத்த நாளும் சோதனை செய்தார்கள். எங்களுக்கு கரோனா இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்தது. பிறகு எங்களை வீட்டிற்குச் செல்லலாம் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனாலும் மேலும் 14-ம் நாள் எங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள கூறினார்கள். அதன்படி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இப்போது அரசாங்கம் இந்த கரோனாவால் குணமானவர்களின் பிளாஸ்மாவில் இருந்து நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாகச் செய்திகள் வருகின்றது. அதில் எங்களுக்கு சந்தோஷம். நாங்கள் மனமுவந்து இரத்தத்தைத் தர சம்மதிக்கிறோம். எல்லோரும் நோய்த் தொற்றில் இருந்து வெளியே வர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்" என்று அவர் தனது பேச்சை நிறைவு செய்தார்.