Skip to main content

அட்ரஸ் மாறிப் போனதா ரெய்டு??? அதானியை அரவணைத்து பிபிசியை மிரட்டும் மோடி அரசு! - துரை வைகோ கண்டிப்பு

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

BBC IT Raid MDMK Durai Vaiko comment

 

“இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால் விமர்சனங்களை நான் எப்போதும் வரவேற்கிறேன். நாடு நன்மை அடையும் வகையில் விமர்சிப்பவர்களை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்” 2023-2024 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பேசிய வார்த்தைகள் இவை.  

 

2002ம் ஆண்டு நரேந்திர மோடி முதல்வராக ஆட்சி செய்த குஜராத்தில் பயங்கர கலவரம் ஏற்பட்டு, அம்மாநிலத்தில் பல உயிர்கள் பலியாகி நாடே பெரும் அச்சத்தில் இருந்தது. இது தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொண்டு ஒரு ஆவணப் படத்தைத் தயாரித்து இந்த ஆண்டு (2023) ஜனவரி மாதத்தில் இரண்டு பாகங்களாக வெளியிட்டது. 

 

இதற்கு பாஜக மற்றும் அதன் ஆதரவு தரப்புகளில் இருந்து, பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டி ஆவணப்படம் தயாரித்து நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக பிபிசி திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதேபோல், அந்த இரண்டு பகுதி ஆவணப்படத்திற்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடைகளை மீறி கேரளா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அந்த ஆவணப்படம் பல்வேறு அமைப்புகளால் திரையிடப்பட்டது. அப்படி திரையிடப்பட்ட இடங்களில் உடனடியாக நிறுத்தப்பட்டு அந்த நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டன. இது எல்லாவற்றுக்கும் மேலாக, ‘பி.பி.சி - இந்தியா’வுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

 

ஆவணப்படத்திற்கு தடை, செய்தி நிறுவனத்திற்கே தடை வேண்டும் என ஒரு பக்கம் ஆதரவாளர்கள் வேலை செய்து வர, நேற்று டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீரென சோதனையில் ஈடுபட்டது. இதற்கு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும், விமர்சகர்களும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். 

 

BBC IT Raid MDMK Durai Vaiko comment

 

மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயகத்திற்கும் பத்திரிகை ஊடக சுதந்திரத்திற்கும் இந்தியாவில் இடமில்லை என்பதை உலகிற்கு பறைசாற்றிய பாஜக அரசு. சுதந்திரமாக ஜனநாயக முறைப்படி விமர்சனங்கள் வைப்பதை அச்சுறுத்தும் இந்த நடவடிக்கையை நாங்கள் கவலையுடன் பார்க்கிறோம் என சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். 

 

மேலும், இது தொடர்பாக நக்கீரனிடம் பேசிய அவர், “ஹிண்டன் பர்க் அறிக்கையின்படி பங்குச் சந்தையில் நடந்த பல்வேறு முறைகேடுகள் வெளியாகியுள்ளது. 2014ல் பணக்காரர்கள் பட்டியலில் 609வது இடத்தில் இருந்த அதானி 2022ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வந்தார். இந்திய ரூபாய் மதிப்பீட்டின்படி அதானியின் நெட் வர்த் ரூ. 11 இலட்சம் கோடி. கடந்த டிசம்பர் மாதம் ரூ. 12,40,353 கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இன்று ரூ. 4,33,297 கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 

 

சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவாமல் மேலும் அவர்களை வஞ்சிக்கும் வகையில் அதானி, அம்பானி போன்றவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யும் அரசாக இந்த அரசு உள்ளது. கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு பல இலட்சம் கோடிகளை கடனாக கொடுத்துவிட்டு, அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை என்றால் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. 

 

BBC IT Raid MDMK Durai Vaiko comment

 

மோடி, வெளிநாடுகளில் இருக்கும் நம் கருப்புப் பணத்தை ஒழிப்பதாக சொல்கிறார். ஆனால், ஷெல் போன்ற நிறுவனங்கள் மூலம் இங்கு முதலீடு செய்யப்படுகின்றது. அடித்தட்டு மக்களின் பெரும் நம்பிக்கையாக இருக்கும் எல்.ஐ.சி. நிறுவனம், அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் அதானி குழுமத்திற்கு ஏறக்குறைய ரூ. 50 ஆயிரம் கோடி வரை கடன் வழங்கியுள்ளன. இவ்வளவு மோசடி சர்ச்சை என இருக்கும் அதானி குழுமத்தை நோக்கி செல்ல வேண்டிய வருமானவரித் துறை முகவரி மாறி பிபிசிக்கு சென்றுவிட்டது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

 

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், பத்திரிகை சுதந்திரத்திற்கும் சிறுபான்மையினருக்கும் இங்கு இடமில்லை என்பதற்கு இந்த ஒரு நடவடிக்கையே போதுமானது. கௌரி லங்கேஷ் உட்பட பல பத்திரிகையாளர்கள் இங்கு கொல்லப்பட்டுள்ளனர். இன்று என்டிடிவி அதானியிடம் உள்ளது. போர்க் காலங்கள், மோசமான இயற்கை பேரிடர்கள் என உயிரைப் பணையம் வைத்து களத்திற்குச் சென்று உண்மைகளைச் சொல்லும் செய்தி நிறுவனங்களில் பிபிசியும் ஒன்று. ஆனால், அந்த பிபிசி இன்று தடை செய்யப்பட வேண்டும் என குரல் எழும்புவது, வருமான வரிச் சோதனை என மிக மோசமான நிலைமையை சந்தித்து வருகிறது.

 

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் கடந்த ஆண்டு 142வது இடத்தில் இருந்த பத்திரிகை சுதந்திரம், இந்த ஆண்டு எட்டு நாடுகளை முன்னுக்குத் தள்ளி 150வது இடத்தில் உள்ளது. அதானி விவகாரத்தில் மக்கள் பணமும், பொதுத் துறையின் பணமும் வீணாகிப் பொருளாதாரமே பெரும் ஆபத்தில் இருக்கிறது. இதற்கு அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையைக் கோருகிறது. ஆனால், அதைப் பற்றி சிறிதும் கண்டுகொள்ளாமல் பிபிசி போன்ற உலக அளவிலான செய்தி நிறுவனத்தின் மீது இப்படியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 

இது ஒரு புறத்தில் அரசின் முகத்திரையைக் கிழித்து, மோடி அரசின் ஜனநாயகம் எந்த அளவிற்கானது என்பதை உலக நாடுகள் அறிந்துகொள்ள உதவுகிறது. மறுபக்கம்,  உலக அளவில் இந்தியாவின் பத்திரிகை சுதந்திரத்திற்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது. இப்படி அதானி குழுமத்தின் மீது இவ்வளவு சந்தேகங்கள், விசாரிக்கப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கும்போது, அங்கு செல்ல வேண்டிய ஐ.டி. ரெய்டு அட்ரஸ் மாறி பிபிசிக்கு போய்விட்டதா” என்று கேள்வி எழுப்பினார். 

 

 

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.